சான்றிதழ் படிப்பு அவசியம் | Kalvimalar - News

சான்றிதழ் படிப்பு அவசியம்ஜூன் 21,2021,19:42 IST

எழுத்தின் அளவு :

பொதுத் தேர்வு பிரச்னைகள் முடிந்து புதிய கல்வி ஆண்டு துவங்கி உள்ளதால் அடுத்த ஆண்டுக்கான பாடங்களை நடத்த கல்வி நிறுவனங்கள் தயாராகியுள்ளன. 



'நீட்' தேர்வில் அரசின் பல்வேறு நிலைப்பாடுகளால் மருத்துவப் படிப்பை விட இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர மாணவர்களிடையே மவுசு அதிகரித்துள்ளது. எனவே கல்லுாரிகள் தங்களின் வகுப்புகளை சீர் செய்யும் பணியில் இறங்கியுள்ளன.



நாடு முழுதும் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலையால் ஏற்பட்ட பாதிப்பு ஊரடங்கு மற்றும் தடுப்பூசிகளால் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய கல்வி ஆண்டுக்கான பணிகளை உயர் கல்வி நிறுவனங்கள் துவங்கியுள்ளன. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு நீட் தேர்வு நடத்தப்படுமா நடத்தப்படாதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.



தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கொண்டு வரவும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடத்தவும் நடவடிக்கை எடுப்போம் என தமிழக அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இந்த பிரச்னைகளால் குழப்பத்தில் உள்ள மாணவர்கள் மருத்துவப் படிப்பை விட இன்ஜி. படிப்புகளில் சேர அதிக ஆர்வம் காட்டுகின்றனர்; அந்த படிப்புகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.இதையொட்டி புதிய கல்வி ஆண்டுக்கான பாடங்களை நடத்த ஒவ்வொரு உயர் கல்வி நிறுவனமும் தங்கள் கல்லுாரி வளாகம் மற்றும் வகுப்புகளை சீர் செய்யும் பணிகளை துவங்கியுள்ளன.




பொருளாதாரம் உயரும்




வரும் ஆண்டுகளில் மாணவர்கள் மற்றும் உயர் கல்வி வேலைவாய்ப்பு எதிர்காலம் எப்படி இருக்கும் என கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி அளித்த பேட்டி:



பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கு மதிப்பெண் எப்படி கிடைக்கும் உயர் கல்வியில் எந்த படிப்பில் சேர்வது என மாணவர்களும் பெற்றோரும் பல்வேறு குழப்பங்களில் உள்ளனர். ஆனால் உயர் கல்வி, அதற்கான வேலைவாய்ப்பு குறித்த வருங்காலம் மிகப்பெரிய மாற்றத்துடன் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை பெற்றோர் கவனிக்க வேண்டும். பொருளாதாரம் முந்தைய ஆண்டுகளை விட பல மடங்கு முன்னேறப் போகிறது.தற்போது உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் இன்னும் மூன்று, நான்கு ஆண்டுகளில் படித்து முடிக்கும்போது அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் மிக அதிகமாகவே இருக்கும்.



மாணவர்களின் படிப்பு மட்டுமின்றி அவர்களின் திறன் மற்றும் திறமைகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்.இன்ஜினியரிங், கலை, அறிவியல் என என்ன படிப்பை மேற்கொண்டாலும் அவர்களுக்கு தொழில்நுட்பம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, தகவல் அறிவியல் கணினி தொழில்நுட்பம் போன்ற பாடங்கள் முக்கிய இடங்களை பிடிக்கும்.கொரோனா தொற்று பரவலால் தற்போது 8.4 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. ஆனால் வரும் ஆண்டுகளில் 9.6 கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளதாக உலக பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது.



சான்றிதழ் படிப்பு அவசியம்



மாணவர்களுக்கு உயர் கல்வி படிப்புக்கான சான்றிதழ் மட்டுமின்றி மாணவர்களின் தனிப்பட்ட திறன்களுக்கும் இனி அதிக முக்கியத்துவம் கிடைக்கும். வங்கி வேலைவாய்ப்புக்குக் கூட இனி தொழில்நுட்ப அறிவு தான் அதிகம் தேவைப்படும் நிலை உள்ளது. அதனால் தான் ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் இன்ஜினியரிங் மட்டுமின்றி அனைத்து துறைகள் சார்ந்த சான்றிதழ் படிப்புகளை ஆன்லைனில் நடத்துகின்றன. புதிய கல்விக் கொள்கையிலும் கூடுதல் சான்றிதழ் படிப்புகளை ஊக்குவிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.



'கூகுள் மைக்ரோசாப்ட் ஹெச்.சி.எல். சோஹோ' என பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது சான்றிதழ் படிப்புகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன. பிளஸ் 2 மாணவர்களைக் கூட தேர்வு செய்து சான்றிதழ் படிப்பை அளித்து வேலை தரும் நிலை உள்ளது.எனவே கல்லுாரியில் சேரும் மாணவர்கள் இந்த மாற்றத்துக்கு தயாராக வேண்டும். பிரெஞ்ச் ஜப்பானீஸ் ஜெர்மன் போன்ற ஏதாவது ஒரு வெளிநாட்டு மொழிகளையும் மாணவர்கள் படித்துக் கொள்வது நல்லது. 



கல்லுாரி படிப்பு மட்டுமின்றி கூடுதல் சான்றிதழ் படிப்புகளையும் மாணவர்கள் படிக்க வேண்டும். மொத்தத்தில் மிக விரைவில் பொருளாதார முன்னேற்றம் மிகப்பெரிய அளவில் இருக்கப் போகிறது என்பதை மாணவர்களும் பெற்றோரும் உயர் கல்வி நிறுவனங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.அதற்கேற்ப மாற்றத்துக்குரிய தொழில்நுட்ப மற்றும் திறன் சார்ந்த கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.



பிரிட்ஜ் கோர்ஸ்'



கல்லுாரிகளை பொறுத்தவரை இந்த ஆண்டு மட்டும் வழக்கமான கல்வி ஆண்டுடன் கூடுதலாக நான்கு மாதங்கள் ஒதுக்கி புதிய மாணவர்களுக்கு முன் தயாரிப்பு பயிற்சியை வழங்க வேண்டும். பள்ளிகள் நடக்காமல் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வும் எழுதாத நிலையில் அவர்களுக்கு அடிப்படை கல்வியை நினைவூட்ட 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்ற முன் தயாரிப்பு பயிற்சி அவசியம். இதன் வாயிலாக மாணவர்களை உயர் கல்வி படிப்புக்கு எளிதில் தயார்படுத்தலாம், என்றார்.




'தடுப்பூசி அவசியம்'



கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது: 



கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தினால் மட்டுமே பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் என்ற நிலை உள்ளது. இதற்கு அரசின் விதிமுறைப்படி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்.மேற்படிப்புக்கோ வேலைவாய்ப்புக்கோ வெளிநாடு செல்ல வேண்டும் என்றாலோ தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். எனவே கல்லுாரிகளில் சேரும் மாணவர்களுக்கு கல்லுாரிகளிலேயே தடுப்பூசி போடும் திட்டத்தை மேற்கொள்ளலாம். அவ்வாறு தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு தமிழக அரசும் மத்திய அரசும் சலுகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.




'திறன் இருந்தால் வேலை நிச்சயம்'



அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியதாவது: கொரோனா காலத்தில் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது போன்ற தோற்றம் இருந்தாலும் இது தற்காலிகமானது தான். இன்ஜினியரிங் துறைக்கான வாய்ப்புகள் என்றுமே பிரகாசமாக உள்ளன.இனிவரும் காலங்களில் தகவல் தொழில்நுட்பம் உற்பத்தி துறை மருத்துவ உபகரணங்கள் உணவு தொழில்நுட்பம் மோட்டார் வாகன உதிரிபாக உற்பத்தி போன்ற துறைகளும் பெரும் வளர்ச்சி அடையும்.



சர்வதேச மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் சிறு நிறுவனங்கள் சுய தொழில் என அனைத்திலும் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றுக்கு தேவையான திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ளும் சூழலை உயர் கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தி தர வேண்டும். 



பல்வேறு துறைகளில் பகுத்தாய்வு செய்யும் திறன்களை கொண்ட மாணவர்கள் இன்ஜி. படிப்பை தேர்வு செய்யலாம். தாங்கள் படிக்கும் துறை மட்டுமின்றி இதர துறை சார்ந்த அறிவையும் கட்டாயம் வளர்த்துக் கொள்ள வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் திறன்களை மாணவர்கள் பெற்றிருந்தால் மட்டும் போதும்; அதற்கான வேலைவாய்ப்பும் ஊதியமும் நிறுவனங்களுக்கு ஒரு பிரச்னையே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us