மாணவர்களே... கேள்வி கேளுங்கள்! | Kalvimalar - News

மாணவர்களே... கேள்வி கேளுங்கள்!பிப்ரவரி 18,2021,08:44 IST

எழுத்தின் அளவு :

கடந்த பல மாதங்களாக, ஆன்லைன் வழி கல்விக்கு பழக்கப்பட்டு, 


வகுப்பறைச் சூழலை மாணவர்கள் பலரும் மறந்திருப்பார்கள்... எனினும், மீண்டும் பள்ளி எப்போது திறக்கும்? நமது நண்பர்களை எப்போது பார்ப்போம்? என்றெல்லாம் ஏங்கிக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் முக்கிய வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.



ஆனால், இந்த ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் மறந்த பல நல்ல விஷயங்களில் கேள்வி கேட்கும் பழக்கமும் ஒன்று! 



இன்றைய சூழலில் கேள்வி கேட்க குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை தான். அதற்கு சரியான பதில் சொல்லத்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, மழலைப் பருவத்தில் கேள்வி கேட்கும் துடிப்பு இயற்கையாகவே இருப்பதற்கு கூச்ச சுபாவம் இல்லாததும் ஒரு முக்கிய காரணம். ஆனால், சற்று வளர்ந்ததும் இதுபோன்ற சில குணங்களுக்கு பலரும் இடம் கொடுத்து விடுகிறார்கள். இதனால், சரியான திறமை இருந்தும் வெளிகாட்ட முடியாமல் தவிக்கின்றனர். அவர்களது, திறமை அவர்களுடனே மக்கி போய்விடுகிறது.



இன்று, பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மட்டும் பள்ளி திறக்கப்படுவதன் முக்கிய நோக்கமும், மாணவர்கள் தங்களது சந்தேகங்களை நேரடியாக ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வதற்காகத்தான்!



கேள்வி கேட்பது என்பது ஒரு கலை. கேள்வி கேட்கும் தோரணையை வைத்தே அவரது புத்தி சாலித்தனத்தை அறிந்துவிட முடியும் என்பதால் கூட, கேள்வி கேட்டால் நமது அறியாமை எங்கே வெளிப்பட்டு விடுமோ என்ற பயம் சிலருக்கு உள்ளது. கேள்வி கேட்பவரது அறிவு மட்டும் வெளிப்படுவதில்லை; அவரது தன்னம்பிக்கையும் சேர்த்துதான்...



வகுப்பறையில், ஆன்லையின் வகுப்பில், கருத்தரங்கில், பொதுஇடங்களில் என கேள்வி கேட்பதற்கு தினமும் எத்தனையோ சந்தர்ப்பங்கள் இருந்தும் வெகு சிலரே சரியாகவும், துள்ளிமாகவும் கேள்வி கேட்கின்றனர். சிறு வயதில் இருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்களில் கேள்வி கேட்கும் திறனும் ஒன்று. இத்திறன் அறியாதவற்றை அறிந்து கொள்வதற்கும், புரியாதவற்றை புரிந்துகொள்வதற்கும், அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கும் உதவும்.



சரியான முறையில் கேள்வி கேட்க...



* உங்களது கேள்வி சுருக்கமாக இருப்பது மிக அவசியம். இதில் துவக்கம், முடிவு என்று பிரிப்பதற்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை.



* நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை உங்களது கேள்வி உணர்த்த வேண்டும். அதற்கு கேள்வி தெளிவாக இருக்க வேண்டும். விவாதத்திற்கு உரியதாக இருக்கலாம்; ஆனால் விதண்டாவாதத்திற்கு உரியதாக இருக்கக்கூடாது.



* உங்களிடம் அதிக கேள்விகள் எழும்பட்சத்தில், அவற்றில் இடத்திற்கு தக்கவாறு முக்கியத்துவம் அளித்து, வரிசைப்படுத்தி கேட்கவும்.



* தக்க நேரத்திலும், சரியான இடத்திலும் கேள்வி அமைவது அவசியம். உதாரணமாக, வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடத்திற்கு சம்பந்தம் உள்ள, தக்க சமயத்தில் கேட்கப்படும் கேள்வி வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.



* படிக்கும் போது, எழுதும்போது, வேறு ஒரு செயலில் ஈடுபடும்போது என பல சமயங்களில் உங்களுக்குள் சந்தேகம் எழலாம். அதை காகிதத்தில் தவறாமல் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.



* முதலில் உங்களது கையை உயர்த்தி, ஆசிரியரது அனுமதியை பெற்ற பிறகு, கேள்வி கேட்க துவங்குங்கள். அப்போது உங்களது குரல் வளம், அழுத்தம் உயர்ந்தும், சீராகவும் இருக்க வேண்டும்.



* தவிர்க்க முடியாத காரணங்களால், உங்களால் கேள்வி கேட்க இயலாமலோ, உரிய பதில் கிடைக்காமாலோ போகும்பட்சத்தில், ஆசிரியர்களை தனியாக சந்தித்து பதில் பெற தயங்காதீர்கள். ஏனென்றால், இருவர் பங்கேற்கும் கலந்துரையாடல் சிறந்ததாகவே அமையும்.



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us