நீட் அரசியலை நீர்க்க செய்வோம்! | Kalvimalar - News

நீட் அரசியலை நீர்க்க செய்வோம்!அக்டோபர் 08,2020,11:53 IST

எழுத்தின் அளவு :

இந்தியாவில் தற்கொலைகள் அதிகம் இருக்கும் நடக்கும் மாநிலங்களில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மாநகரங்களில், சென்னை முதலிடத்தில் உள்ளது. நீட் தேர்வு பயத்தால், தமிழகத்தில் ஒரே நாளில், மூன்று மாணவச் செல்வங்களை இழந்துள்ளது, ஈடு செய்ய முடியாத இழப்பு.


போட்டித் தேர்வுகள் என்பது, இந்தியாவில் பல ஆண்டு காலமாக நடந்து வருகிறது. மத்திய அரசின் நிதி உதவியின் கீழ் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பயில, ஜே.இ.இ., எனப்படும் நுழைவுத் தேர்வின் முதன்மை தேர்வில், இந்த ஆண்டு, 15 லட்சம் மாணவர்கள் பங்கு பெற்றுள்ளனர். அதிலிருந்து, 2.45 லட்சம் மாணவர்கள் மட்டுமே, &'அட்வான்ஸ்ட்&' எனப்படும் தேர்விற்கு தகுதி பெற்றுள்ளனர்.


மொத்தமுள்ள, 23 ஐ.ஐ.டி., உயர் கல்வி நிறுவனங்களில் இருந்து, 13 ஆயிரத்து, 376 இடங்கள்; என்.ஐ.டி., எனப்படும், தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், 31ல் இருந்து, 2,133 இடங்கள், 25 ஐ.ஐ.ஐ.டி.,யிலிருந்து, 4,053 இடங்கள உள்ளன.


மேலும், மத்திய அரசின் நிதியில் இயக்கும், 12 சி.எப்.வி.,யில், 1,370 இடங்கள், 20 ஐ.ஐ. எப்.டி.,யில், 3,979 இடங்கள் உட்பட, 43 ஆயிரத்து, 917 இடங்களுக்கு, 15 லட்சம் பேர் தேர்வெழுதினர். இதில் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. இந்த தேர்வும் மிகக் கடினமானதே. மாணவர்களின் பகுத்தாய்வு திறனை மேம்படுத்த, பயிற்சிகள் மேற்கொண்டு அறிவுத்திறனை வளர்த்து, பின் தேர்வில் வெற்றி பெறக் கூடிய சூழலே உள்ளது. இதை எந்தக் கட்சிகளும், பொதுநல ஆர்வலர்கள், கல்வியாளர்கள் என சொல்லிக்கொள்பவர்களும் எதிர்ப்பதில்லை. ஆனால், தொடர்ந்து தமிழகத்தில் நீட் தேர்வு எதிர்ப்புக்கு உள்ளாகி வருகிறது.


இந்த முறை நடைபெற்ற தேர்வில் கூட, தமிழகத்தின் பங்களிப்பு மிகக் குறைவே. 2 மாணவர்கள், 99.9 எடுத்து, &'டாப் - 100&' பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவில், 542 மருத்துவ கல்லுாரிகளில், 80 ஆயிரம் இடங்கள் உள்ளன. தமிழகத்தில், 50 கல்லுாரிகளில், அரசு கல்லுாரிக்கு இணையாக, தனியார் மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. தனியார் கல்லுாரிகள் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களாலும், அவர்களின் உறவினர்களாலும் நடத்தப்படுகின்றன.


மொத்தம், 80 ஆயிரம் இடங்களுக்கு இந்த ஆண்டு, 15.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து, அதில், 90 சதவீதம் பேர் எழுதியுள்ளனர்.


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயக்கும் தொழில்நுட்ப கல்வியிலிருந்து, இரண்டு மடங்கு அதிகமாக உள்ள மருத்துவக்கல்லுாரி இடங்களுக்கு, அதே அளவில் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். ஆனால், இதை நாம் வலுவாக எதிர்க்கிறோம். நீட் தேர்வுக்கு முன்னால் சி.எம்.சி., - எய்ம்ஸ் , ஜிப்மர், டிபென்ஸ் மருத்துவக் கல்லுாரி போன்ற கல்வி நிறுவனங்களில் உள்ள இடங்களுக்கு, பிற மாநிலத்தவர்கள், எந்த அளவு மதிப்பெண் குறைவாக இருந்தாலும் பணம் தந்து சேரும் நிலை இருந்தது.


ஆனால் நீட் தேர்வு, இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும் ஒரே தேர்வு என்ற முறையைக் கொண்டு வந்துள்ளது. மேலும், தமிழக மருத்துவக் கல்லுாரி இடங்கள், 85 சதவிதம் தமிழக மாணவர்களுக்கு என உறுதி செய்துள்ளது.


அனைத்து இடங்களும் மதிப்பெண் அடிப்படையில் என்பதால், பெருமளவு கருப்பு பணம், நவ்கொடை தவிர்க்கப்பட்டுள்ளது. பணம் இல்லாதவர்கள் கூட, அரசின் கல்விக் கடன் மூலம் தனியார் கல்லுாரியில் சேரும் அளவிற்கு வெளிப்படையாக, நீதிமன்றத்தால் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில், 4 சதவீம் மாணவர்கள், மருத்துவ கல்வி பயில்கின்றனர். ஆனால், தமிழகத்தில் சமீப காலமாக அதை வைத்து அரசியல் நடக்கிறது.


தேர்வில் தமிழகத்தின் பங்களிப்பு இல்லை என கொந்தளிக்காதவர்கள், கடந்த பத்து வருடங்களில், நீட் தேர்வுக்கு முன் சராசரியாக ஆண்டிற்கு, 17 முதல், 20 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவத்தில் சேர்ந்துள்ளனர். ஆனால் ஒன்றிரண்டு மாணவர்கள் கூட, ஐ.ஐ.டி.,யில் சேரவில்லை. இந்த நீட் நுழைவுத் தேர்வுக்குப் பின், அரசு பள்ளி மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்றாலும், அவர்கள் அரசுக் கல்லுாரிகளில் இடம் கிடைக்கும் அளவிற்கு அதிக மதிப்பெண் பெற முடிவதில்லை. அப்படியெனில் சரி செய்யப்பட வேண்டியது நம் கல்வி முறையா... இல்லை, பொதுவாக நடக்கும் தேர்வுகளையா என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.


இதுபற்றி யாரும் பேசியதில்லை. ஏனெனில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் லஞ்சம் இல்லை; நன்கொடை இல்லை; இடைத்தரகர்கள் இல்லை. அரசின் இட ஒதுக்கீடு முறையாக வெளிப்படையாக பின்பற்றப்படுகிறது. இன்னும் ஒருபடி அதிகமாக, பட்டியலின மாணவர்களின் இடங்கள் தகுதி மதிப்பெண் குறைவால் நிரப்பப் படாமல் இருந்தால், தகுதி மதிப்பெண் இடைவெளி குறைவாக உள்ள மாணவர்களை தேர்வு செய்து, ஒரு வருடம் இலவசமாக, கல்வி, உணவு, தங்கும் இடம் தந்து பயிற்றுவிக்கிறது; அவர்களின் இடத்தை நிரப்புகிறது. இதுபற்றி எந்த ஊடகமும் பேசுவதில்லை; எந்த ஆர்வலர்களும் பேசுவதில்லை.


ஆனால், தனியார் கல்லுாரியில் லஞ்ச லாவண்யதிற்கு சாவு மணி அடித்த நீட் தேர்வை, எதிர்க்கட்சியினர் அனைவரும் எதிர்க்கின்றனர்.உயிர் இழந்த மாணவர்கள் தேர்வு அச்சத்தால் மன உளைச்சலால் இறந்ததாகவும் இரண்டாம் ஆண்டாக பயிற்சி பெற்று வந்ததால், தோல்வி ஏற்பட்டால், பெற்றோர் ஏமாற்றம் அடைவர்; அவர்கள் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற பயத்தில், தற்கொலை செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன.


இதை பார்க்கும் போது, நாம் எவ்வளவு துாரம், பிள்ளைகளுக்கு மன தைரியத்தையும், எதையும் எதிர் கொள்ளும் திறனையும் கற்பிக்க தவறிவிட்டோம் என்று உணர்த்துகிறது. ஆசிரியர்களும், பெற்றோர்களும் இதையும் தாண்டி வாழ்வு உள்ளது, பங்கு பெறுதல், பயிற்சி எடுத்தல், முயற்சி செய்தல் முக்கியமே தவிர வெற்றி தோல்விகள் நம்மை எந்த அளவும் பாதிக்க கூடாது என்ற நடைமுறையை சொல்லித்தர தவறிவிட்டது. அவர்களுக்கு நாம், தன்னம்பிக்கை, சுய பரிசோதனை செய்து கொள்ளும் திறனை கற்றுத் தர வேண்டும். மருத்துவத்தை தாண்டி, வாழ்வில் சாதிக்க அதிகம் உள்ளது என்ற நிதர்சனத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.


ஒரு சமூகப் பிரிவு மாணவர்களுக்கு, மருத்துவ இடம் கிடைக்கவில்லை என்றால், அந்த இடம் அவரை விட, அதிக மதிப்பெண் எடுத்த அதே சமூகத்தைச் சார்ந்தவர்களால் தரப்படுகிதே தவிர, மற்றவர்களுக்கு அல்ல. அதனால் சமூக, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், படங்கள் ஓட வேண்டும் என்பதற்காகவும் பலரின் பகட்டு சொற்களை நம்பி, இளைய சமுதாயம் ஏமாறாமல் இருக்க, பெற்றோர், ஆசிரியர்கள் ஆவண செய்ய வேண்டும்.


- பேராசிரியர் ரா.காயத்ரி, கல்வியாளர்


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us