வளரிளம் பருவத்தினருக்கான திறன்கள் | Kalvimalar - News

வளரிளம் பருவத்தினருக்கான திறன்கள்ஜூன் 24,2020,08:41 IST

எழுத்தின் அளவு :

குழந்தைப் பருவத்திற்கும் இளமைப்பருவத்திற்கும் இடையே உள்ள வளரிளம் பருவம் ஆளுமை வளர்ச்சியில், மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.


வளரிளம் பருவத்தினருக்குச் சமூகத்தின் மீதான பார்வை வலுப்படுகிறது. சமூகக் கேடுகளை நீக்க வேண்டும் என்ற தீவிர எண்ணம் ஏற்படுகிறது. இதன் விளைவாகவே திரைப்படங்களின் மீது ஈர்ப்பு வலுவாகிறது. தனக்கு முன்மாதிரியாக யாரையாவது வைத்துக்கொள்ள விரும்பும் இவர்களுக்கு அதைப்பொறுத்தே சிந்தனையும் செயல்பாடுகளும் அமைகின்றன.


இவர்களுக்குச் சரியான முன்மாதிரிகள் இருந்தால் சமூக நலனுக்கான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படுத்த இயலும். பள்ளிப்படிப்பிலும் பொதுத்தேர்வுகள், அதிகமான பாடச் சுமையால் ஏற்படும் அழுத்தங்களில் இருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.


வளரிளம் பருவத்தினர் எளிதில் உணர்ச்சி வசப்படுவர். உடல் மற்றும் உள்ளத்தில் ஏற்படும் உணர்ச்சிகள் குறித்த தெளிவு அவர்களுக்குத் தேவை. அத்தகைய உணர்ச்சிகளை எவ்வாறு பயனுள்ள செயல்பாடுகளில் சமநிலைப்படுத்தலாம் என்ற வழிமுறைகள் அவசியம். குறிப்பாக உடலை வலுப்படுத்தும் விளையாட்டுச் செயல்பாடுகள் பெரும்பாலும் இல்லாமலே ஆகிவிடுகின்றன. வளரிளம் பருவத்தினருக்கு வாழ்வியல் திறன்களைச் செயல்பாடுகளின் மூலம் பழக்கமாக ஆக்க இயலும். விமர்சன சிந்தனை, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் மற்றும் படைப்பாற்றல் குறித்த சில செயல்பாடுகளை இங்கு காண்போம்.


விமர்சன சிந்தனை 

ஒரு நிகழ்வு, கருத்து, திரைப்படம், புத்தகம் குறித்த விமர்சனங்களைப் பகிர்தல் மற்றும் கலந்துரையாடல் வழியே விமர்சன சிந்தனையை மேம்படுத்த முடியும்.


ஒன்பதாம் வகுப்பில் குடும்ப விளக்கு என்ற பாடப்பகுதி. பாடத்திற்குள் போகும் முன் உரையாடலைத் தொடங்கினேன்.


குடும்பம் என்றால் என்ன? 

கரும்பலகையில் எழுதினேன். அம்மா, அப்பா..... குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சொல்லச் சொல்ல ஒரு மாணவன் வந்து கரும்பலகையில் எழுதத் தொடங்கினான். உரையாடலை யாராவது ஒருங்கிணைக்க வேண்டும் என்பது நாங்கள் உருவாக்கிய நெறிகளுள் ஒன்று.


எழுதி முடித்த பின் குடும்ப உறுப்பினர்களை ஆண்-பெண் என்று இரண்டு பிரிவுகளாக வைத்துக் கொள்வோம்.


ஆண் என்றால் என்ன தோணுது? பெண் என்றால் என்ன தோணுது? உங்க நாட்குறிப்பில் எழுதுங்க என்றேன்.


சிறிது நேரம் கழித்து ஆண் – பெண் எதிர இரு பிரிவுகளில் அவர்கள் சொல்லச் சொல்ல அவை கரும்பலகையில் எழுதப்பட்டன.

பெண் செல்போன் பயன்படுத்தக் கூடாது. என்று ஒரு மாணவன் சொன்னதும் ஆண் மட்டும் பயன்படுத்தலாமா? என்ற கேள்வி எழுந்தது. 


தம்பிகளா, ஆண்-பெண் எப்படி இருக்கணும்னு நிறைய சொல்றோம். சில செய்திகள் கேள்விய எழுப்புகின்றன. அதையெல்லாம் தனியே குறிச்சுக்கோங்க. அடுத்த வகுப்பில் ஒவ்வொன்றையும் தனித்தனியா விவாதிக்கலாம் என்றேன்.


விவாதங்கள், கலந்துரையாடல்கள் வளரிளம் பருவத்தினரின் விமர்சனப் பார்வையை கூர்மையாக்கும் செயல்பாடுகளாகும்.

நோய்களால் தொடர்ந்து மனித இனம் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இன்று உலகமே கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்போது ஒரு பேரிடரைச் சந்திக்கிறோம்.

சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளையும் தவறான தகவல்களையும் அப்படியே நம்பாமல் அவை குறித்த உண்மை நிலையைத் தேடி,சரியான தகவல்களைச் சேகரித்து தங்கள் வீட்டிலும் சுற்றுப்புறத்திலும் இருப்பவர்களுக்கு உண்மையைப் புரியவைப்பதை  இவர்களால் எளிதில் செய்ய இயலும்.


தவறான செய்திகளைப் பரப்பாதீர்கள்! என்ற எச்சரிக்கைகுரல் இவர்களிடமிருந்து எழுவது சமூகத்தில் அழுத்தமான மாற்றங்களை ஏற்படுத்தும்.


பிரச்சினைகளுக்குத் தீர்வு 


பள்ளிச் செயலரிடமிருந்து அழைப்பு.

சார், பதினொன்றாம் வகுப்பில் ஒரு பையன் சாகப்போறேன்னு சொல்லிருக்கான். நீங்க விசாரிங்க என்றார்.


வகுப்பு ஆசிரியையிடம் அவன் என்னவெல்லாம் சொன்னான் என்பதைக் கேட்டுக்கொண்டேன். அவனை அழைத்து உரையாடினேன். அவன் பேச்சில் ஒரு தீர்க்கம் இருந்தது. அரசுப்பணிகள், மற்றும் பல்வேறு துறைகளில் சாதித்துக்கொண்டிருக்கும் திருநங்கைகளைப் பற்றிய விவரங்களை நன்கு தெரிந்து வைத்திருந்தான். படித்து உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பது அவனது கனவாக இருந்தது. வீட்டில் எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பார்கள் என்று வருத்தத்தோடு கூறினான். 

சமூகத்தின் கேலிக்கு வருந்தியே அவர்கள் திட்டுவார்கள். அவர்களுக்கு எடுத்துச் சொல்லிக்கொண்டே இரு. நீ மிகுந்த மனத் திடத்துடன் இருந்தே ஆகவேண்டும். நான் உங்க வீட்டுக்கும் வந்து பேசுறேன் என்றேன். 


சக நண்பர்களின் கேலியும் கிண்டலும் அதிகமா இருக்கு. நண்பர்கள்தானே கேலி செய்றாங்க என்று பொறுத்துக்குவேன். ஆனா அதுவே  அதிகமாகும் போது ரெம்ப வருத்தமா இருக்கு! என்றான்.

அவனது வகுப்பிற்குச் சென்றேன். சில முகங்கள் ஏற்கனவே அறிந்தவை. வழக்கமான அறிமுகம், தெரிந்த மாணவர்களிடம் சிறு விசாரிப்புகள் என வகுப்பைச் சிறிது கலகலப்பாக ஆக்கியபின் பேசத் தொடங்கினேன். 


தம்பிகளா, உங்களிடம் கொஞ்சநேரம் கலந்துரையாடலாம் என்று வந்தேன். இந்த வயசு ரெம்ப முக்கியமானது. டீன் ஏஜோட இறுதிக் கட்டம். நமக்குப் பல பிரச்சினைகள் இருக்கும். ஆனா நம்மைச் சுத்தி இருக்கறவங்க படி படின்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நம் நண்பர்கள் தவிர வீட்டில் அதிகம் பேச ஆள் கிடைப்பது அபூர்வம். 


இப்போ உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் என்ன?


படிப்பது, சிறப்பு வகுப்புகள், தேர்வு என்று ஆங்காங்கே எழுந்த குரல்களின் ஊடே காதல் என்று ஒரு குரல் எழுந்ததும் அனைவரும் சிரித்தனர். 


தம்பிகளா, நீங்க சொன்னது எல்லாமே முக்கியமானது. அதிலும் இந்தக் காதல் மிகவும் முக்கியமானது. எனக்குத் தெரிந்த சில செய்திகளைப் பகிர்ந்துக்கறேன். உன்னைப்போலத்தான் உன் வயதில் நானும் இருந்தேன். ‘நான் யாரு?’ என்ற அடையாளச் சிக்கல் என்று இதைச் சொல்றாங்க. அதனாலதான் கைகளில் மோதிரங்கள், வளையங்கள், காதில் தோடு, தலைமுடியை கண்டபடி வெட்டிக்கொள்ளுதல் எல்லாமே செய்றோம்.


எனது இளம் வயதில் இப்போ இருக்கும் அளவு ஸ்டைல் இல்லேன்னாலும் எல்லா விரலிலும் மோதிரம் போட்டிருந்தேன். அப்போதான் ஸ்டோன் வாஷ் என்று ஜீன்ஸ் வந்திருந்தது. பஸ் படிக்கட்டில் தொங்குவது அவ்வளவு பிடிக்கும். மாலை வேளைகளில் எங்க ஊர் லைப்ரரிக்கு போய் கதைகள், நாவல்கள் வாசிப்பேன். கொஞ்ச காலம் கழிச்சு ஒருநாள் மனசுக்குள்ளே ஒரு கேள்வி. 


ஏன் இப்படியெல்லாம் பண்றோம்? தெளிவா அப்போ புரியலேன்னாலும் ஓரளவு யோசிச்சேன். மத்தவங்களை விட நாம் வித்தியாசமா இருக்கணும்னு இதெல்லாம் பண்றோம்னு. ஆனா நம்மை மாதிரித் தானே நம்ம வயசில் எல்லோரும் பண்றாங்க. அப்புறம் எப்படி வித்தியாசமா இருக்க முடியும்? அப்பவே தேட ஆரம்பிச்சேன். வாசிப்பு, கிராமியக்கலைகளைக் கற்பது, என்று மாறிட்டேன். 


சரி. தம்பிகளா நிறையப் பேசியாச்சு. ஒன்று மட்டும் உங்களிடம் பேசணும் என்று தான் வந்தேன். சென்ற வருடம் மாநிலம் முழுவதும் நடந்த போராட்டம் நினைவிருக்கா?


இருக்கு சார் என்றனர் அனைவரும்.


மகிழ்ச்சி. அதில் எனக்கு ஒரு விஷயம் ரெம்ப முக்கியமா தோணுச்சு. கொஞ்ச வயசுப் பசங்க ரெம்பக் கெட்டுப்போயிட்டங்க என்றுதான் எல்லோரும் சொல்லுவாங்க. ஆனா அந்தப் போராட்டத்தில் அதிகம் கலந்துகொண்டு நடத்தியதே அவங்கதான். அதைவிட ஒரு முக்கியமான விஷயம் கவனிச்சேன்.


கல்லூரிக்குப் போகும் மகளைப் பேருந்து நிறுத்தம் வரை கூட்டிவந்து பேருந்தில் ஏற்றி விட்டு, மாலையிலும் வந்து கூட்டிப்போற பெற்றோர்கள் இருக்காங்க. அவ்வளவு பாதுகாப்பா வளர்க்கிறவங்க தங்கள் பெண் பிள்ளைகளை ஆயிரமாயிரம் இளைஞர்கள் மத்தியில் நாள்முழுதும் தைரியமா விட்டுட்டுப் போன அற்புதம் அந்தப் போராட்டத்தில் நடந்தது. 


‘இளம்பருவத்தினரை நம்பினால் அதைக்காப்பார்கள்’. என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டினாங்க. அதேதான் இப்போ உங்களிடம் கேட்குறேன்.


இப்போ உலகமெங்கும் பாலின சமத்துவம் குறித்துப் பேசுறாங்க. இங்கு நமது சகோதரனுக்கு தனது பாலினம் குறித்த தெளிவான முடிவு இருக்கு. சமூகம் மாற்றுப்பாலினத்தவரை பெரும்பாலும் கேலி செய்வதால் நாமும் செய்கிறோம். அவனைப் புரிந்துகொள்ள முயலுங்க. அவனுடன் நல்லா பேசுங்க. எதிர்காலத்தில் என்னுடன் படித்தார் என்று நீங்க பெருமைப்படும் நிலைக்கு வருவதற்கு நீங்கதான் துணையா இருக்கணும். இது எனது வேண்டுகோள். நீங்க என்ன நினைக்குறீங்க? என்றேன். எல்லோரையும் சமமா மதிக்கணும் என்று சில குரல்கள் எழுந்தன.


அடுத்த நாள் ‘இவர்களும் மனிதர்களே!’ என்ற குறும்படத்தைத் திரையிட்டேன். படம் குறித்த உனக்ளது கருத்துகளைப் பகிரலாம் என்றேன். மாற்றுப் பாலினத்தவரை மதிக்காமல் நடந்தவை, சக உயிராக மதிக்கவேண்டும் என்று அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். 


சில நாட்கள் கழித்துத் தனியே அந்தப் பையனை  அழைத்துக் கேட்டேன், இப்போ யாரவது கிண்டல் செய்றாங்களா?

இல்லை சார். எல்லோரும் நல்லா பேசுறாங்க. ஒருத்தன் கேலி பண்ணினான். இப்படிச் சொல்லலாமா? என்று கேட்டேன். அவனும் இப்போ நல்லா பேசுறான். என்றான்.


அவன் ஒருநாள் பள்ளிக்கு வராவிட்டாலும் வீட்டிற்குச் சென்று பார்க்கும் நண்பர்கள் உருவாகிவிட்டார்கள்.


இளம்பருவத்தினரை நம்பினால் அதைக்காப்பார்கள் என்று திடமாக நம்புகிறேன். ஓரிருவர் மீறலாம். நாம் அவர்களின் குறைகளையே பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கிறோம். நம்பித்தான் பார்ப்போமே!  


நிறைவாக வளரிளம் பருவத்தினருக்கு மூத்தவர்களிடம் இருந்து எதிர்பார்க்கும் அன்புக்குப் பதிலாக அறிவுரைகளே கிடப்பதால் தங்கள் வயதினரின் குழுவுக்குள் ஒடுங்கிவிடுகிறார்கள். போதை, சக விரோதச் செயல்களில் ஈடுபாடு என்று பாதை மாறிவிடுகின்றனர். அவர்களை ஆற்றுப்படுத்தும் முன்மாதிரிகளே இன்றைய தேவை.


சுருக்கமாகச் சொன்னால் வளரிளம் பருவத்தினைரை மதித்து அவர்களின் பேச்சுக்குக் காத்து கொடுத்து, எண்ணங்களுக்கு மதிப்பளித்து, சமூக நலச் செயல்பாடுகளில்  ஆற்றுப்படுத்த வேண்டும்.கலைகள், விளையாட்டுகள் வழியே உடலையும் கலந்துரையாடல், விவாதம், படைப்பாற்றல் வழியே வாழ்வியல் திறன்களை வளர்த்தெடுக்க இயலும்.


ரெ. சிவா,

தமிழாசிரியர்,

மதுரைக்கல்லூரி மேனிலைப்பள்ளி,

மதுரை.


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us