ஆன்லைன் வழியாக வகுப்புகள் | Kalvimalar - News

ஆன்லைன் வழியாக வகுப்புகள் ஏப்ரல் 23,2020,10:20 IST

எழுத்தின் அளவு :

அரசு பள்ளி ஆசிரியர்கள் இப்படியும் இருக்கிறார்கள் என்று என்பதை இரண்டு விதமாக சொல்லலாம். அந்த வகையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வீட்டிலேயே அனைவரும் முடங்கிக் கிடக்கும் இந்த நேரத்தில் அரசு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள நிலையில் நடைபெறவிருந்த அரசு பொதுத்தேர்வுகள் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 


இந்நிலையில் வீட்டில் இருக்கும் மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்தும் விதமாக மாணவர்களுக்கும், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக  பயிற்சி அளித்து அசத்தி வருகிறார்கள்  அரசு பள்ளி ஆசிரியர்கள்.


என்ன செய்து வருகிறார்கள்?


வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பம்  வேறு வேறு இடங்களில் இருக்கும் இவர்களை ஒன்றிணைத்து இந்த பணியை சிறப்பாக செய்ய உதவுகிறது. 


இதுகுறித்து  ஆன்லைன் பயிற்சியின் ஒருங்கிணைப்பாளரும், கரூர் மாவட்டம், ஈசநத்தம், அரசு மேல்நிலைப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியருமான  கார்த்திகேயன்  அவர்களிடம் கேட்டபோது "உடலால் தனித்தும், உள்ளத்தால் ஒன்றிணைந்தும் இருக்கவேண்டிய இந்த நேரத்தில் எமது மாணவர்களை வீட்டிலிருந்தபடியே தேர்வுக்கு தயார்படுத்தும் வகையிலும், ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை சிறப்பாக செய்வதற்கு ஏதுவாக இந்த ஊரடங்கு நேரத்தில் அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பயிற்சி அளித்து வருகிறோம். 


தமிழகம் முழுவதிலும் உள்ள ஆர்வமுள்ள  ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி வணிகவியல் பாட ஆசிரியர் பெருமக்களை முதலில் வாட்ஸ்அப் குழுக்களின் மூலமாக ஒன்றிணைத்தோம். அவர்களை தனித்தனி குழுக்களாக பிரித்த பிறகு அவர்களுக்கு Zoom cloud meetings என்கிற அப்ளிகேஷன் உதவியுடன்  மடிக்கணினி மூலமாகவும் செல்லிடப்பேசி மூலமாகவும் ஆன்லைன் வழியாக பயிற்சி அளித்து வருகிறோம்.


எப்படி செய்து வருகிறார்கள்..?


"இதில் பயிற்சி பெறும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி வணிகவியல் ஆசிரியர்கள் வீட்டிலிருந்தபடியே பாடம் சார்ந்த கருத்துக்களை வீடியோக்களாக உருவாக்கி, தங்களுடைய மாணவர்களுக்கு வாட்ஸ்அப் குழுக்களின் மூலமாக பகிர்ந்து வருகிறார்கள் . அவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு பதில் அளித்தும், அவர்களை தேர்வுக்கு தயார் படுத்திவருகிறார்கள்." என்றார்.


இது எப்படி சாத்தியமாயிற்று..?


இதுகுறித்து பயிற்சி அளித்து வரும் ஒருங்கிணைப்பாளரும், மதுரை மாவட்டம் பள்ளியின் முதுகலை வணிகவியல் ஆசிரியருமான முத்துச்செல்வம்  பேசியபோது "தமிழக அரசு பிஜி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கியிருக்கும் விலையில்லா மடிக்கணினி மூலமாகத்தான் எங்களின் இந்த முயற்சி சாத்தியமாயிற்று. இதன்மூலம் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறோம்" என்றார்.


இவர்கள் என்ன சொல்கிறார்கள்…?


இது குறித்து பயிற்சி பெற்று வரும் ஆசிரியை  வெண்ணிலா நம்மிடம் பேசியபோது "மாணவர்களை பிரிந்திருக்கும் இந்த நேரத்தில் அவர்கள் எப்படி தேர்வுக்கு தயாராவார்களோ என்று பயந்து கொண்டிருந்தோம். இந்த பயிற்சி வகுப்பின் மூலமாக பயிற்சி பெற்று, அவர்களை தேர்வுக்கு தயார் படுத்தி வருவதில் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் உள்ளது"என்றார்.


இதுகுறித்து மாணவர் இளையராஜா  பேசியபோது "பொதுத்தேர்வில் மீதமிருக்கும் கணக்குப்பதிவியல் பாடத்திற்கு எப்படி தயாராவது என்று பயந்து கொண்டிருந்தேன். இந்த வகுப்பின் மூலமாக பயம் போய் நம்பிக்கை அதிகரித்துள்ளது" என்றார்.


வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை தாங்கள் கற்று, அதை மாணவர்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் இந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள். வாழ்த்துகள்...


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us