கலாம் 2020 கனவு நனவாகுமா? | Kalvimalar - News

கலாம் 2020 கனவு நனவாகுமா?ஜனவரி 05,2020,16:08 IST

எழுத்தின் அளவு :

தமிழகத்தை சேர்ந்த, மறைந்த அணு விஞ்ஞானி அப்துல் கலாம், 

2002 முதல், 2007 வரை, இந்திய ஜனாதிபதியாக இருந்தார். அவர் 

ஜனாதிபதியாகும் முன், 1998ல், விஷன் - 2020 என்ற, தொலைநோக்கு திட்டம் குறித்த புத்தகத்தை வெளியிட்டார். அந்த புத்தகத்தில், அனைத்து தரப்பு முன்னேற்றம், இந்தியாவின் வளர்ச்சிக்கான சவால்கள், அதை முறியடிக்கும் விதம் குறித்தும் கூறியிருந்தார்.


பின், அப்துல் கலாம் ஜனாதிபதியானதும், மத்திய திட்ட கமிஷன் மேற்கொண்ட திட்டங்களுக்கு, அவரது, விஷன் - 2020 என்ற தொலைநோக்கு திட்டம் பயன்படுத்தப்பட்டது. கலாமின் தொலைநோக்கு பார்வையை அடையும் ஆண்டான, 2020 பிறக்கும் நிலையில், கலாம் கண்ட கனவு என்ன; அவை நனவானதா என்பது இன்னும், கேள்வியாகவே தொக்கி நிற்கிறது.


அது என்ன, விஷன் 2020?


* நாட்டில் உள்ள நகரங்களுக்கும், கிராமங்களுக்குமான இடைவெளி பெருமளவு குறைக்கப்பட வேண்டும்; நகரம், கிராமம் இரண்டிற்கும் பாகுபாடின்றி, அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும்.


* நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும், அனைத்து பகுதிகளுக்கும் போதிய மின் வசதியும், பாதுகாப்பான குடிநீரும் கிடைக்கச் செய்ய வேண்டும்.


* வேளாண்மை, தொழிற்துறை மற்றும் சேவை துறைகள் இணைந்து செயல்படும் நிலை வர வேண்டும்.


* நல் ஒழுக்கத்துடன் நிறைந்த கல்வி, அனைத்து வகை இளம் தலைமுறைக்கும் கிடைக்க வேண்டும்; பொருளாதார மற்றும் சமூக வேறுபாடுகளால், கல்வி மறுக்கப்படும் நிலை கூடாது.


* சர்வதேச அளவில் திறமையான கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு, இந்தியா சிறந்த இடமாக மாற வேண்டும்.


* அனைத்து தரப்பினருக்கும், மிகச்சிறந்த மருத்துவ சேவை கிடைக்க வேண்டும்.பெருமையான தலைமை:


* நாட்டின் அரசு நிர்வாகம், சமூக பொறுப்புகள் நிறைந்த, வெளிப்படையான மற்றும் ஊழல் அறவே அற்றதாக மாற வேண்டும்.


* இந்த நாட்டில், அனைத்து தரப்பு மக்களின் ஏழ்மை நிலை அகற்றப்பட வேண்டும்.


* படிப்பறிவு இல்லாத நிலை ஒழிய வேண்டும்.


* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அறவே இருக்க கூடாது. இந்த சமூகம் தன்னை கைவிட்டு விட்டது என்ற நிலை யாருக்கும் வரக்கூடாது.


* வளமும், பாதுகாப்பும், ஆரோக்கியமும், அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும்.


* பயங்கரவாதம் இல்லாத நிலை வேண்டும்.


* நிலையான வளர்ச்சி பாதையில் நாடு செல்ல வேண்டும்.


* நாட்டின் தலைமைத்துவத்தின் செயல்பாடுகள் நன்றாக இருக்க வேண்டும்; அந்த செயல்பாடுகளை பெருமையாக கருதி, ஒவ்வொரு நாட்டு மக்களும், வாழ்வதற்கு இந்தியாவே சிறந்தது என்ற நிலை ஏற்பட வேண்டும்.


வளர்ந்த நாடாக...


* இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாற, ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


* ஐந்து முக்கிய துறைகளை ஒருங்கிணைத்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும். வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்ப துறை ஆகியவற்றில், வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


* முக்கியமான தொழில்நுட்ப துறையில் தன்னிறைவு பெற்ற நிலை ஏற்பட வேண்டும்.


* நகரங்கள் மற்றும் கிராமங்கள் என, நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும், நம்பத்தகுந்த மற்றும் தரமான மின்சார வசதி, பல்வகை போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு, அப்துல் கலாம் கூறியிருந்தார்.


இந்த இலக்கை எட்டுவது குறித்து, அவர் கூறியிருந்ததாவது: தேசிய தொலைநோக்கு பார்வையை எட்ட, குறைந்தபட்சம், 15 ஆண்டுகள் தேவை. இவை அரசியல் கட்சிகளின் கொள்கையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், தேர்தல் அறிக்கையில் அவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த, விஷன் - 2020 என்பது ஒரு கட்சி, அரசு மற்றும் தனி நபருக்கானது மட்டும் சொந்தமானதல்ல. நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான தொலைநோக்கு பார்வை. இதை பார்லிமென்டில் மக்களின் பிரதிநிதிகள் கூடி விவாதித்து, அனைத்து தரப்பின் ஒப்புதலை பெற்று, நடவடிக்கை மேற்கொள்ளலாம். இவ்வாறு, அப்துல் கலாம் தெரிவித்திருந்தார்.


2020ல் வல்லரசாகும்?


கடந்த, 2007ல் அப்துல் கலாமின் ஜனாதிபதிக்கான பதவிக்காலம் முடிந்தபோது, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, 2020ல் இந்தியா வல்லராசாகும் என, சூளுரைத்தார்.


அவரது உரை வருமாறு: வரும், 2020ல் இந்தியா வளர்ந்த நாடாக, வல்லரசு நாடாக திகழும். நம்முடைய இளைஞர்கள் துணையுடன், திறமையான, வெளிப்படையான நிர்வாகமும், அப்பழுக்கற்ற, ஊழலற்ற ஆட்சியும் இருந்தால் நிச்சயம் நாம், 2020ல் வல்லரசு நாடாக மாறி விடுவோம். நாட்டில் உள்ள, 25 வயதுக்குட்பட்ட, 54 கோடி இளைஞர்களையும் ஊக்கப்படுத்தி, உத்வேகத்துடன், அவர்களை சரியான பாதையில் நடைபோட வைக்க வேண்டும். அவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்க வேண்டும். அவர்களுடைய ஆளுமைத் திறனை மேம்படுத்த வேண்டும்.


சூளுரை:


இளைஞர்கள் தான் இந்த உலகின் மாபெரும் சக்தியாவர். வளர்ந்த, வல்லரசு நாடாக இந்தியா நிச்சயம் மாறும். மிகச் சிறந்த திறமை வாய்ந்த அரசு நிர்வாகம் உள்ள நாடாக, அமைதியான நாடாக, அனைவரும் வசிக்க ஆசைப்படும் அழகிய நாடாக, நம் இந்தியா நிச்சயம் மாறும். நம் நாட்டில் இரண்டாவது பசுமைப் புரட்சி வர வேண்டும். தங்களது வளமான நிலங்களைப் பாதுகாக்க விவசாயிகளுக்கு முழு சுதந்திரமும், சக்தியும் கொடுக்க வேண்டும். விவசாய நிலங்கள் பாழ்பட்டுப் போக அனுமதிக்கக் கூடாது. விவசாயிகளும், வேளாண் விஞ்ஞானிகளும், தொழிற்துறையினரும் இணைந்து சீரிய முறையில் உழைத்தால், நம் விவசாய பொருளாதார வளர்ச்சியை, ஆண்டுக்கு, 4 சதவீதம் அதிகரிக்க முடியும். இவ்வாறு, கலாம் சூளுரைத்தார்.


இந்த சூளுரைகளை, இதுவரை நிறைவேற்ற முயற்சிக்காத, அரசியல் கட்சி தலைவர்கள், இளம் தலைமுறையினர், மாணவர்கள், வேளாண் துறையினர், கல்வியாளர்கள், ஊடகங்கள், நீதித்துறையினர் என, அனைவரும் இந்த ஆண்டின் இறுதிக்குள் வல்லரசு கனவை நனவாக்க உழைக்க வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us