நீட் தேர்வில் முக்கிய திருத்தம் | Kalvimalar - News

நீட் தேர்வில் முக்கிய திருத்தம்டிசம்பர் 16,2019,11:35 IST

எழுத்தின் அளவு :

தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019ன் படி, இந்தியாவில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும், இளநிலை மருத்துவ பட்டப்படிப்பில் சேர்க்கை பெற 

அவசியம் எழுத வேண்டிய தேர்வு, நீட் யு.ஜி.,!


முக்கிய திருத்தம்

கடந்த ஆண்டு வரை, நீட் தேர்வில் இருந்து எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, அந்தந்த கல்வி நிறுவனங்களால் பிரத்யேகமாக நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வின் அடிப்படையில், சேர்க்கை வழங்கப்பட்டன.  ஆனால், இந்த புதிய சட்டத்தின்படி மருத்துவக் கல்வி வழங்குவதில் புகழ்பெற்ற எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்வி நிறுவனங்களும் முதல்முறையாக நீட் தேர்விற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


படிப்புகளும், இடங்களும்

பொது மருத்துவம், பல் மருத்துவம் அதாவது எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மட்டுமின்றி ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஹோமியோபதி என எந்த ஒரு பிரதான மருத்துவ படிப்பையும் இந்தியாவில் படிக்க விரும்பும் மாணவர்கள் ‘நீட்’ தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்.


மாநில கல்வி நிறுவனங்கள், தேசிய கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சரி, தேசிய இடஒதுக்கீட்டு இடங்கள், மாநில அரசு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர் இடங்கள் உட்பட அனைத்து இட ஒதுக்கீட்டு இடங்களும் நீட் தேர்வின் அடிப்படையிலேயே நிரப்பப்படுகின்றன.


தேர்வு முறைகள்

இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவில் தலா 45 கேள்விகள் கேட்கப்படும். தாவரவியல் மற்றும் விலங்கியல் உள்ளடக்கிய உயிரியல் பாடப் பிரிவில் 90 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் அதிகபட்சம் 720 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடைபெறுகிறது. அனைத்து கேள்விகளும் ‘மல்டிபிள் சாய்ஸ்’ வகையில் கேட்கப்படுகிறது. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படுகிறது. 


தேர்வு காலம்: 3 மணி நேரம்.


கேள்விகள் இடம் பெறும் மொழிகள்: ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமீஸ், பெங்காளி, குஜராத்தி, கன்னடா, மராத்தி, ஒடியா, தமிழ், தெலுங்கு, உருது ஆகியவற்றில் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ற மொழியில் கேள்விகள் இடம்பெறும். 


முக்கிய குறிப்புகள்

இத்தேர்வு அறைக்குள் மொபைல் போன், கால்குலேட்டர், பேனா, பெல்ட், வாட்டர் பாட்டில் உட்பட பல்வேறு பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆடை கட்டுப்பாடும் உண்டு. ஆகவே, மாணவர்கள், தேர்வு விதிமுறைகளை நன்கு அறிந்துகொள்வது அவசியம்.


விபரங்களுக்கு: www.nta.ac.in, ntaneet.nic.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us