யு.கே.,வில் உயர்கல்வி | Kalvimalar - News

யு.கே.,வில் உயர்கல்விசெப்டம்பர் 30,2019,13:16 IST

எழுத்தின் அளவு :

கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தை உள்ளடக்கிய, யுனைடெட் கிங்டம்  எனும் யு.கே.,வில் உயர்கல்வி பெறுவது, என்பது பெரும்பாலான 

சர்வதேச மாணவர்களின் விருப்பமாக உள்ளது. இதற்கு, சரியான கல்வி கட்டணம், தரமான கல்வி, சிறந்த கல்வி நிறுவனங்கள், ஏராளமான உதவித்தொகை வாய்ப்புகள், வேலை வாய்ப்பு வசதி, விசா வழிமுறைகள் என பல்வேறு காரணங்கள் உள்ளன. இத்தகைய அம்சங்களால், முந்தைய ஆண்டை விட கடந்த ஆண்டு, யு.கே.,வில் சேர்க்கை பெற்ற சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 42 சதவீதம் அதிகரித்துள்ளது. 


மேலும், யு.கே.,வில் படித்தவர்களில் 81 சதவீத சர்வதேச மாணவர்கள், யு.கே., கல்வி நிறுவனங்களில் படித்ததாலேயே எனக்கு சிறந்த வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக, ஒரு ஆய்வில் கருத்து தெரிவித்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


பிரபலமான படிப்புகள்:

பொதுவாக, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம், ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ், மிஷின் லேர்னிங், ஆர்கிடெக்சர், பயோமெடிக்கல், மருத்துவம், சட்டம் ஆகிய துறை சார்ந்த படிப்புகளில் இந்திய மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 


கல்வி நிறுவனத்தை தேர்வு செய்யும் முறை:

கல்வி நிறுவனத்தை தேர்வு செய்வது என்பது மாணவர்களுக்கு மிக முக்கியமான ஒன்று. வெறுமனே, ஒரு பிரபலமான கல்வி நிறுவனத்தை தேர்வு செய்யாமல், ஒரு குறிப்பிட்ட படிப்பிற்கு, சிறந்த கல்வி நிறுவனம் எது என்பதை கண்டறிந்து சேர்க்கை பெறுவதே சரியானது. எனவே, மாணவர்கள் ஒரு படிப்பை முடிவு செய்த பிறகு, அந்த படிப்பில், ஆசிரியர்கள், ஆய்வகங்கள், உள்கட்டமைப்பு வசதிகள், ஆராய்ச்சி வாய்ப்புகள், இதர திறன் வளர்ப்பு வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த கல்வி நிறுவனத்தை ஆராய்ந்து, தேர்வு செய்ய வேண்டும்.


உலகளவில் 200 தரமான கல்வி நிறுவனங்களை எடுத்துக்கொண்டால், அவற்றில் 28 கல்வி நிறுவனங்கள் யு.கே.,வில் உள்ளன. முதல் 10 சிறந்த கல்வி நிறுவனங்களை எடுத்துக்கொண்டால், அவற்றில் 4 யு.கே., கல்வி நிறுவனங்கள். மேலும், தரத்தில் எந்தவித சமரசமும் இல்லாத அதேநேரம், மாணவர்களுக்கு ஏற்ற நெகிழ்வான பாடத்திட்டத்தையும் கொண்டுள்ளது. யு.கே.,வில் உள்ள கல்வி நிறுவனங்கள் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு பிரிட்டீஷ் கவுன்சிலை மாணவர்கள் நேரடியாக அணுகலாம். மாணவர்களுக்கு உரிய விளக்கம் அளிப்பதே பிரிட்டீஷ் கவுன்சிலின் முக்கிய பணியும் கூட!


புதிய விசா வழிமுறைகள்:

பிரிட்டன் அரசு புதியதாக கொண்டுவந்துள்ள விசா விதிமுறைப்படி, பிரிட்டனில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பிற்கு பிறகு, சர்வதேச மாணவர்கள் அங்கேயே இரண்டு ஆண்டுகள் தங்கி இருந்து வேலை செய்யலாம் அல்லது வேலை வாய்ப்பை பெற முயற்சி செய்யலாம். 


-ஜனகா புஷ்பநாதன், இயக்குநர், சவுத் இந்தியா பிரிட்டீஷ் கவுன்சில்.


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us