பருவநிலைக்கும் பங்கு உண்டு! | Kalvimalar - News

பருவநிலைக்கும் பங்கு உண்டு!செப்டம்பர் 12,2019,17:01 IST

எழுத்தின் அளவு :

வெளிநாட்டில் உயர்கல்வி பெற விரும்பும் மாணவர்களில் பெரும்பாலானோர், கல்வி நிறுவனத்திற்கும், பாடத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஆனால், பலராலும் முக்கியத்துவம் அளிக்கப்படாத ஒன்று, காலநிலை!


அனைத்து பகுதிகளும் ஒன்று அல்ல


கல்வி நிறுவனம் அமைந்திருக்கும் பகுதியின் தட்பவெப்பநிலை, ஒருவரது உடலுக்கோ, மனதிற்கோ எதிராக அமையும்போது, கல்வியில் ஆர்வத்தை இழக்கும் நிலைக்கு உள்ளாகும் வாய்ப்பும் உண்டு. உதாரணமாக,  நீலகிரியில் படிக்க விரும்பும் மாணவர் ஒருவர், தமிழகம் முழுவதும் நீலகிரியை போன்று நில அமைப்பு, காலநிலை இருக்கும் என்று நினைப்பதும், சென்னையை பற்றிய தகவல்களை அறிந்தவர்கள் தமிழகம் முழுவதும் நெருக்கடியும், தூசியுமாக இருக்கும் என்று கணிப்பதும் மிகவும் தவறான முடிவு. 


அதேபோல் தான் வெளிநாட்டு கல்வி நிறுவனத்தை தேர்வு செய்வதும். ஒரு நாட்டின் தலை நகரத்தை பற்றியோ அல்லது பொதுவான சுற்றுலாத் தலங்கள் பற்றியோ தெரிந்துகொண்டு தாங்கள் படிக்கச் செல்லும் பல்கலைக்கழகம் இருக்கும் பகுதியும் இது போன்றுதான் இருக்கும் என்று கணிப்பது தவறாகிவிட அதிக வாய்ப்புள்ளது. நாம் படிக்க விரும்பும் பாடம், கல்வி நிறுவனத்தை தேர்வு செய்யும் அதேநேரம், பொருளாதாரம், காலநிலை, கலாசாரம் ஆகியவற்றை பற்றியும் தீவிரமாக ஆராய்ந்து அறிவது வரவேற்கத்தக்கது. கல்வி நிறுவனத்தில் உள்ள வசதிகள், அந்தப் பகுதியில் உள்ள போக்குவரத்து மற்றும் மருத்துவ வசதிகள் ஆகியவற்றைப் பற்றி தெரிந்துகொள்வதில் ஆர்வம் செலுத்துவதும் அவசியம்.


இணையதளம் உதவும்


படிக்க விரும்பும் நாட்டினை பற்றிய அறிமுகங்களை சரியான இணையதளங்களின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். இணையதளம் மூலமாக தகவல்களை தெரிந்து கொள்ள முற்படும்போது, பலவிதமான தகவல்கள், மதிப்பீடுகள் உங்களுக்கு கிடைக்கும். அவற்றின் உண்மைத் தன்மையை மேலும் ஆராய்ந்து அறிவது அவசியம். பொதுவாக, அரசாங்க இணையதளங்கள், கல்வி அமைச்சக இணையதளம், கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகியவை நிச்சயம் கைகொடுக்கும். 


ஏற்கனவே அங்கு படித்தவர்கள் மூலமாகவும் தகவல்களை அறிந்துகொள்ளலாம். அக்கல்வி நிறுவனத்தில், படித்த முன்னாள் மாணவர்களை நேரடியாக உங்களுக்கு தெரியாது என்றாலும், அந்த நாட்டின் தூதரகத்தை நேரிலோ, தொலைபேசியிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்புகொண்டு அதிகாரப்பூர்வ தகவல்களை பெறலாம். ஒரு நண்பரிடம் பேசுவதைப் போன்று அனைத்துவிதமான சந்தேகங்களையும் தெளிவாகக் கேட்டு அறிவது நல்லது. இந்த விஷயத்தில், கூச்சம் வேண்டாம்.


மேலும், இன்றைய நவீன தொழில்நுட்பம் படுவேகமாக வளர்ச்சி அடைந்துவரும் காலத்தில், தகவல்களை பெறுவதில் பெரிய அளவில் முயற்சி தேவையில்லை. ஆனால், சரியான தகவல்களை பெறுவதே கடினம். ஆகவே, சரியான தகவல்களை ஆராய்ந்து அறிந்து, காலநிலையையும், இதர வசதிகளையையும் உணர்ந்து, ஒரு வெளிநாட்டு கல்வி நிறுவனத்தை தேர்வு செய்தால், மிரட்சியும், கலக்கமும் இன்றி கல்வி எனும் பயணத்தில் சீராக பயணிக்கலாம் என்பது கல்வியாளர்கள் ஆலோசனைகள்!

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us