சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் | Kalvimalar - News

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் ஜூலை 22,2019,11:55 IST

எழுத்தின் அளவு :

இந்திய கல்வி முறைகளில் மிக முக்கியமான மற்றும் சிறப்புமிக்க பாடத்திட்டங்களைக் கொண்டது சி.பி.எஸ்.இ., எனும் ‘சென்ட்ரல் போர்ட் ஆப் செகன்ட்ரி எஜூகேஷன்’!

மத்திய மனித வளத்துறை அமைச்சகத்தின் கீழ் 1962ம் ஆண்டு துவங்கப்பட்ட சி.பி.எஸ்.இ., அமைப்பின் மூலம், அதே பெயரில் பொது மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் இக்கல்வி முறை வழங்கப்படுகிறது. இது தேசியமயமாக்கப்பட்ட கல்வி முறையும் ஆகும்.

உலகளவில் 24க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த கல்வி முறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இன்றளவில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் சி.பி.எஸ்.இ., கல்வி முறையை பின்பற்றி வருகின்றன. ஜே.இ.இ., நீட், மேட் போன்ற பல தகுதி மற்றும் நுழைவுத்தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்களுக்கு ஏற்ற பாடத்திட்டமாகவும் இது கருதப்படுகிறது.

சி.பி.எஸ்.இ., சிறப்பம்சங்கள்:
 சிறப்பாக கட்டமைக்கப்பட்ட மற்றும் தரநிலைப்படுத்தப்பட்ட முறையான பாடத்திட்டம்.
 தேசிய அளவில் நடத்தப்படும் பல தகுதி தேர்வுகள் இந்த பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே பெரும்பாலான கேள்விகளை கொண்டிருக்கின்றன.
 அதுமட்டுமின்றி உயர்கல்விக்கான நுழைவுத்தேர்விற்கும் இந்த பாடத்திட்டம் பெரிதும் துணைபுரிகிறது.
 அடிக்கடி பணிமாற்றங்களினால் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்குள் பயணிக்கும் குடும்பத்தினருக்கு இந்த கல்வி முறை பெரிதும் உதவுகிறது.
 தொழில்முறை படிப்புகளான பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற படிப்புகளுக்கான சிறந்த அடிப்படை பள்ளி கல்வியினை சி.பி.எஸ்.இ., வழங்குகிறது.
 புவியியல், வரலாறு, பொருளாதாரம், கணிதம், அறிவியல், ஹோம் சயின்ஸ், சமூகவியல், கவின் கலை, அரசியல், வடிவமைப்பு போன்ற பல்வேறு பிரிவுகளை சார்ந்த படிப்புகள் இந்த பாடத்திட்டத்தில் உள்ளது.
 பாடப்புத்தகத்தை தவிர மாணவர்களின் பிற பன்முக திறன்களிலும் இந்த கல்வி முறை கவனம் செலுத்துகிறது.

தேர்வு முறை:
காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வுகள் என ஆண்டிற்கு 3 தேர்வுகள் இந்த கல்வி முறையில் நடத்தப்படாமல், பார்மெடிவ் அசஸ்மெண்ட் மற்றும் சம்மேடிவ் அசஸ்மெண்ட் என இரு வகைகளில் மாணவர்களுக்கான மதிப்பெண்கள் சி.பி.எஸ்.இ.,யில் வழங்கப்படுகின்றன. இந்த மதிப்பீட்டு முறைகள் வெறும் எழுத்து தேர்வை மட்டும் கணக்கில் கொள்ளாமல் மாணவர்களின் பிற திறமைகளுக்கும் முக்கியத்துவம் வழங்குகிறது.

மதிப்பீட்டு முறை:
சி.பி.எஸ்.இ.,யில் ‘ரேங்கிங்’ முறை பின்பற்றப்படாமல் மாணவர்களின் மதிப்பெண்களுக்கு ஏற்றாற் போல் ‘கிரேட்’ மற்றும் ‘கிரேட் பாயிண்ட்’ வழங்கப்படுகின்றன. 91 முதல் 100 மதிப்பெண்கள் பெற்றால் 10 கிரேட் பாயிண்ட்கள், 81 முதல் 90 மதிப்பெண்கள் பெற்றால் 9 கிரேட் பாயிண்ட்கள் என ஒவ்வொரு 10 மதிப்பெண் வித்தியாசங்களுக்கும் ஒரு ’கிரேட் பாயிண்ட்’ என இங்கு மாணவர்கள் தரவரிசைப் படுத்தப்படுகின்றன.

விபரங்களுக்கு: www.cbse.nic.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us