தரமே பிரதானம்! | Kalvimalar - News

தரமே பிரதானம்!ஜூலை 17,2019,12:42 IST

எழுத்தின் அளவு :

உயர்கல்வி என்றாலே, தரம் தான் பிரதானமாக இருக்க வேண்டும். தரமான கல்வி வழங்கும்பட்சத்தில் மட்டுமே திறமை படைத்த வல்லுனர்களை நம்மால் உருவாக்க முடியும். அனைத்து துறைகளிலும், திறமையானவர்கள் அதிகம் இருக்கும்பட்சத்தில் மட்டுமே நம் நாட்டின் வளர்ச்சி, உலக அரங்கில் முக்கிய இடத்தை அடையும். ஆகவே, என்னைப் பொறுத்தவரை, தரமான கல்வி வழங்க வேண்டும் என்பதில் அரசு கல்வி நிறுவனங்களாக, இருந்தாலும் சரி, தனியார் கல்வி நிறுவனங்களாக இருந்தாலும் சரி எந்த பாரபட்சமும் இருக்கக்கூடாது. 

சமீப காலமாக, சீனா, உயர்கல்வியில் சிறந்த இடத்தை அடைந்துவருகிறது. சீனாவை ஒப்பிடும் போது இந்தியா உயர்கல்வியில் மிகவும் பின் தங்கி உள்ளது என்றே சொல்ல வேண்டும். எனினும், நாக், என்.பி.ஏ., பல்கலைக்கழக மானிய குழு போன்ற நமது நாட்டின் உயர்கல்வி அமைப்புகள், தரமான கல்வி வழங்குவதற்கான பணிகளில் தீவிரமாக செயல்படுகிறது என்பதிலும், பல்வேறு மாற்றங்களையும் புகுத்து வருகிறது என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. 

இத்தகைய தரத்தை நிலைநாட்டும் வகையிலேயே, மாணவர்களது திறன் மேம்பாட்டிற்கு எங்கள் கல்வி நிறுவனத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். இன்டர்வியூ ஸ்கில்ஸ், ஆப்டிடியூட், ஆட்டிடியூட் கம்யூனிகேஷன் ஸ்கில் ஆகிய திறன்களை வளர்க்கும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கிறோம். இவைதவிர, கற்றல் கற்பித்தல் முறையிலும் கவனம் செலுத்துகிறோம். ஆசிரியர்களுக்கும் கற்பித்தல் திறன் மேம்படுத்தும் வகையில் பயிற்சி அளிப்பதோடு, பயிற்சிக்கு பிறகு அதன் தாக்கம் குறித்து பரிசோதனையும் செய்கிறோம்.

கல்லூரியில் சேர்க்கை பெறும் மாணவர்களின் கல்வி கற்கும் திறன் அடிப்படையில் அவர்களை மூன்று விதமாக பிரித்து, கல்வியில் பின் தங்கிய மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, அவர்களையும் சிறப்பாக கல்வி கற்கும் நிலைக்கு உயர்த்துகிறோம். நம் நாடு டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில், எதிர்காலத்தில் அத்தகைய மாற்றத்தில் மாணவர்களும் பங்கெடுக்கும் வகையில், அவர்களுக்கு டிஜிட்டல் பயிற்சியும் அளிக்கிறோம். 

வாழ்க்கை திறன்கள்

உலக அரங்கில் அனைத்து துறையிலும் கடும் போட்டி நிலவும் இன்றைய சூழலில், சர்வதேச அளவில் நடைபெறும் மாற்றங்கள் குறித்து அறிந்து கொள்வது, தகவல்களை தேடி பெறுவது, சவால்களை எதிர்கொள்வது, தொடர்பியல் திறனை மேம்படுத்துவது ஆகிய வாழ்க்கைத் திறன்கள் இன்று மிக, மிக அவசியமாகிறது. புதிய பாதைகளை ஆராய்ந்து அறிவது, நெட்வொர்க்கிங், துறை சார்ந்து நட்பு வட்டத்தை விரிவு படுத்துவது, அவர்களிடம் சுமூகமான உறவை தொடர்ந்து பேணுதல், புதுமையாக சிந்தப்பது மற்றும் செயல்படுவது ஆகிய தொழில் முனைவோர்களுக்கு தேவையான் திறன்களை பெறுவதும் இன்று அவசியமாகிறது. இத்தகைய திறன்களை முடிந்தவரை, கல்லூரி பருவத்தில் இருந்தே வளர்த்துக்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறோம். 

-அஜீத்குமார் லால்மோகன், செயலர், ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரி, கோவை.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us