சி.ஏ., தேர்விற்கு தயாராகும் விதம் | Kalvimalar - News

சி.ஏ., தேர்விற்கு தயாராகும் விதம்ஜூலை 09,2019,10:37 IST

எழுத்தின் அளவு :

பிளஸ் 2 முடித்தவர்களும் சரி, பட்டப்படிப்பு முடித்தவர்களும் சரி, சி.ஏ., படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்ய சுய முயற்சி என்பது மிக மிக முக்கியமானது. சி.ஏ., என்பது நேரடியாக எந்த கல்வி நிறுவனத்திலும் வழங்கக்கூடிய படிப்பு அல்ல. மாறாக, வீட்டில் இருந்துகொண்டே படிக்க வேண்டிய படிப்பு. தொலைநிலைக் கல்வியைப் போன்றே சில வகுப்புகள் மட்டும் அவ்வப்போது நடத்தப்படும். ஆன்லைன் விளக்கங்களும், மாணவர்களது சந்தேகங்களை போக்கும் பயிற்சிகளும் உண்டு.

இவைதவிர, பாடங்கள் சார்ந்த புத்தகங்களை நூலகத்தில் தேடி பெறுவது, நிபுணர்களின் கருத்துரைகளை கேட்பது என பல்வேறு அம்சங்களையும் முறையாக பயன்படுத்திக்கொள்வது என்பது முழுக்க, முழுக்க மாணவர்களின் ஆர்வத்தைப் பொறுத்தது. தனியார் பயிற்சி நிறுவனங்கள் பலவற்றில் சி.ஏ., தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. அவற்றை முறையாக பயன்படுத்திக்கொள்வதும் மாணவர்களின் கையில்தான் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், எத்தகைய தலைசிறந்த பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்தாலும் சரி, முன்னணி ஆடிட்டர்கள் பாடம் நடத்தினாலும் சரி, சி.ஏ., படிப்பை பொறுத்தவரை, ஆர்வமுடன் கற்று, கற்றதை திரும்ப திரும்ப பயிற்சி செய்து பார்த்தால் மட்டுமே தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுக முடியும்.

தினமும் பயிற்சி அவசியம்
’ஆர்ட்டிகல்ஷிப்’ எனும் மூன்று ஆண்டுகால செயல்முறை பயிற்சிக்காலத்தின் போது, பல மாணவர்கள் இறுதி நிலை தேர்வுக்கான பாடங்களை தினமும் படித்து, பயிற்சி பெறுவதில்லை; அதனால், பலரால் சி.ஏ., படிப்பை நிறைவு செய்ய முடியாமல் தடுமாறுகின்றனர் என்பது கல்வியாளர்களின் கருத்து. ஆகவே, சி.ஏ., மாணவர்கள், பிளஸ் 2 பொதுத்தேர்விலோ அல்லது பட்டப்படிப்பிலோ எவ்வளவு மதிப்பெண் பெற்றுள்ளார்கள் என்பது முக்கியமல்ல. யாருடைய அறிவுறுத்தலும் இன்றி, சுயமாக தினமும் 4-5 மணிநேரம் படிக்கக்கூடிய ஆர்வம் உள்ள எந்த மாணவர்களாலும், சி.ஏ., தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்பதே நிதர்சனம்.

அறிவியல் பிரிவினர், அக்கவுண்டிங் அதிகம் நிறைந்த சி.ஏ., படிப்பில் தேர்ச்சி பெற முடியுமா? என்ற சந்தேகமும் பொதுவாக காணப்படுகிறது. அத்தகைய சந்தேகம் அவசியமில்லை. முன்பே கூறியது போல, சுய முயற்சியும், ஆர்வமும் இருந்தால் போதும் யாராலும் தேர்ச்சி பெற முடியும். இன்டர்மீடியட் மற்றும் இறுதி நிலைகளில் உள்ள தலா எட்டு பாடப்பிரிவுகளில், ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவீத மதிப்பெண்கள் பெறவேண்டும். அதே தருணம் ஒட்டுமொத்தமாக, 50 சதவீத மதிப்பெண்கள் பெறுவதும் அவசியம். அவற்றில் மொத்தம் எட்டு பாடங்களில் எம்.சி.க்யூ.., எனும் மல்ட்டிபிள் சாய்ஸ் கேள்விகள் தலா 30 மதிப்பெண்களுக்கு இடம்பெறுகிறது. பாடத்தை முழுமையாக படித்து பயிற்சி பெற்றவர்களால், இவற்றில் அதிக மதிப்பெண் பெற முடியும்.

இரண்டு பிரிவாக உள்ள இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் சாப்ட் ஸ்கில்ஸ் படிப்புகளை நிறைவு செய்வதிலும், சி.ஏ., மாணவர்கள் பொதுவாக தடுமாறுகின்றனர். ஆங்கில அறிவும், கணினி அறிவும் ஒரு ஆடிட்டருக்கு மிக மிக அவசியம் என்பதாலேயே இத்தகைய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றிற்கான ஆன்லைன் பதிவு, பதிவு காலங்கள், வகுப்புகள் ஆகியவற்றை எளிமைப்படுத்தவேண்டும் என்ற மாணவர்களது கோரிக்கையும் நியாயமானதே...

மருத்துவம், இந்திய ஆட்சி பணிகள் ஆகியவற்றை போன்று மதிப்பும், தரமும் மிகுந்த படிப்பு சி.ஏ., என்பதை மாணவர்கள் உணர்ந்து செயல்பட்டு, வெற்றிபெற வாழ்த்துக்கள்!

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us