கல்லூரிகளில் வேண்டும் ஆர் அண்ட் டி | Kalvimalar - News

கல்லூரிகளில் வேண்டும் ஆர் அண்ட் டிஜூன் 17,2019,11:05 IST

எழுத்தின் அளவு :

குறிப்பிட்ட பாடத்திட்டத்தை வகுப்பறையில் கற்பித்தால் போதும் பணி நிறைவடைந்துவிட்டது என்று ஆசிரியரும், அவற்றை படித்து தேர்வு எழுதினால் போதும், அந்த படிப்பு நிறைவடைந்துவிட்டது என்று மாணவரும் இருந்துவிடக்கூடாது!

அத்தகைய எண்ணம்தான், 85 சதவீத பட்டதாரிகள் போதிய வேலை வாய்ப்புத்திறன் பெறாததற்கான முக்கிய காரணம். இந்தநிலை மாற, அதிக மதிப்பெண் பெற வைப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கல்வி நிறுவனங்கள் செயல்படக்கூடாது. மாறாக, ஒவ்வொரு மாணவரிடமும் திறன்களை மேம்படுத்தும் வகையில், வகுப்பறை பாடத்திட்டத்தை தாண்டிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும். 

ஒவ்வொரு மாணவரும், சமுதாயத்தில் உள்ள பலரும் பயன்படும் வகையில், ஒரு பொருளை தயாரிக்க வேண்டும். அதற்கு, ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த அறிவு இருந்தால் மட்டுமே போதாது. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சாப்ட்வேர் என பல்துறை அறிவும் தேவைப்படுகிறது. அத்தகைய பல்துறை திறன்களை வளர்க்கும் வகையில், கல்வி நிறுவனங்கள் உரிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். உலகமெங்கும் ’ஆர் அண்ட் டி’ எனும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஒரு முக்கிய இடத்தை பெற்றுவரும் நிலையில், அவை முதலில் கல்லூரிகளில் இருந்து செயல்பட துவங்க வேண்டும். இது, ஆரம்பத்தில் கடினமாக தோன்றினாலும், சில காலங்களில் அவை எளிதாகி, அதற்கான பயனை நிச்சயம் அடைய முடியும்.

அதற்கேற்ப, ஒவ்வொரு கல்லூரிக்கும் குறிப்பிட்ட ஒரு துறையில் ஆராய்ச்சி செய்ய தேவையான நிதி உதவியை அளிக்க, அரசு முன்வர வேண்டும். அப்போது, ஐ.ஐ.டி.,க்களை விட தனியார் கல்வி நிறுவனங்கள் சிறப்பாக செயல்படும். அனைத்து மாணவர்களிடமும் திறன்கள் மேம்படும். மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு எளிதாக கிடைத்துவிடும். 

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களை இந்தியா கொண்டுள்ள நிலையில், அரசு உரிய திட்டத்தை வகுத்து முறையாக செயல்படுத்தினால், சர்வதேச நாடுகள் அனைத்திலும் இந்தியர்கள் இன்னும் பல மடங்கு பலத்துடன் செயல்பட்டு இந்திய பொருளாதாரம் மட்டுமின்றி, உலக பொருளதாரத்திலும் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

கல்லூரியின் கடமை
எங்கள் கல்வி நிறுவனத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாணவருக்கும் எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பதை கண்டறிந்து, தேவையான பயிற்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருகிறோம். நவீன தொழில்நுட்பங்களில் உரிய நிபுணர்களின் துணையுடன் பயிற்சி அளிக்கிறோம். வகுப்பறை பாடத்திட்டத்தை கடந்து, சிறப்பு வகுப்புகள் வாயிலாக இதர திறன் வளர்ப்பு பயிற்சிகள் அளிக்கிறோம். அனைத்து விளையாட்டிற்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை கல்லூரி வளாகத்திலேயே ஏற்படுத்தியுள்ளோம். ஓட்டுமொத்தமாக, மாணவர்கள் அனைவரையும் சுயமாக செயல்பட வைப்பதும், அதற்கான தன்னம்பிக்கையை வளர்ப்பதுமே எங்களது முக்கிய நோக்கம். இதன்மூலம், இன்றைய மாணவர்களுக்கு பழக்கத்தை கற்றுக்கொடுக்க தேவையில்லை. அவர்களுக்கு தேவையான சூழல்களை அமைத்துக்கொடுத்தால் போதும், அவர்களே அவர்களை மேம்படுத்துக்கொண்டு சாதனை படைப்பார்கள் என்பதை கண்கூடாக காண்கிறோம்.

ஆப்லைன் கவுன்சிலிங் நல்லது
இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்லைன் கவுன்சிலிங்கை விட, ஒற்றை சாளர முறையிலான ஆப்லைன் கவுன்சிலிங் சிறந்தது என்பது எனது கருத்து. எந்தெந்த கல்லூரியில் என்னென்ன இடம் உள்ளதை நேரடியாக அறிந்து, உடனடியாக மாணவர்களால் தேர்வு செய்ய முடிந்த எளிய நிலை தற்போது இல்லை. 

-எஸ்.வி.பாலசுப்ரமணியம், தலைவர், பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி, சத்தியமங்கலம், ஈரோடு.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us