ஐ.ஏ.எஸ்., ஆவது சாத்தியமே! | Kalvimalar - News

ஐ.ஏ.எஸ்., ஆவது சாத்தியமே!மே 24,2019,00:00 IST

எழுத்தின் அளவு :

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உட்பட நாட்டின் மிக உயர்ந்த ஆட்சி பணிகளுக்கு யு.பி.எஸ்.சி., நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வில், பிரிலிமினரி, மெயின்ஸ் மற்றும் இன்டர்வியூ ஆகிய மூன்று நிலை தேர்வு நிலைகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம்.

பிரிலிமினரி தேர்வில் ஜெனரல் ஸ்டடீஸ் (ஜி.எஸ்.,) எனும் பொதுத்தாள் மற்றும் சிசாட் எனும் ‘சிவில் சர்வீசஸ் ஆப்டிடியூட் டெஸ்ட்’ ஆகிய இரண்டு தாள்களை எழுத வேண்டும். சிசாட் தேர்வில், கணிதம், ரீசனிங், ரீடிங் காம்ப்ரிஹென்ஷன் உட்பட பல்வேறு ஆப்டிடியூட் கேள்விகள் இடம்பெறும். இத்தேர்வில் 66 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றிருந்தால் மட்டுமே பொதுத்தாள் திருத்தப்படும். இந்த இரண்டு தாள்களிலுமே, 'அப்ஜெக்டிவ்’ வடிவிலான 100 கேள்விகள் மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு இடம்பெறும். தவறான பதில்களுக்கு ‘நெகடிவ்’ மதிப்பெண் உண்டு.

பிரிமிலினரி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மெயின்ஸ் தேர்வை எழுத வேண்டும். அதில், நான்கு பொதுப்பாடங்கள், விருப்பப்பாடம் (இரண்டு தாள்கள்), கட்டுரை, ஆங்கிலம் மற்றும் தமிழ் உட்பட ஏதேனும் ஒரு ரீஜினில் மொழித்தேர்வு என 9 தாள்கள் இடம்பெறும். அதில், ஆங்கிலம் மற்றும் மொழித்தேர்வு ஆகிய இரண்டிலும் குறைந்தது 25 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டும்தான், மீதமுள்ள 7 தாள்கள் திருத்தப்படும். அவற்றில், தாளுக்கு 250 மதிப்பெண் வீதம் 7 தாள்களுக்கு மொத்தமுள்ள 1,750 மதிப்பெண்களுக்கு, ஒருவர் பெறும் மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மெயின்ஸ் தேர்வில் நிர்ணயிக்கப்படும் கட்-ஆப் மதிப்பெண்களுக்கு அதிகமாக பெறுபவர்கள் மட்டும் இன்டர்வியூக்கு அழைக்கப்படுவார்கள். இதில், ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., ஆகியோருக்கென தனித்தனியே கட்-ஆப் நிர்ணயிக்கப்படும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.

மெயின்ஸ் தேர்வு நிலை வரையில், ஒருவருடைய புரிந்துகொள்ளும் திறன், புரிந்ததை எழுதும் திறன், பிரசன்டேஷன் ஸ்கில் ஆகியவை பரிசோதிக்கப்படுகிறது. ஆனால், இன்டர்வியூ தேர்வில் ஆளுமை திறன், எமோஷனல் எபிலிட்டி, ஸ்டெரஸ் மேனேஜ்மென்ட் ஸ்கில், சவால்களை சமாளிக்கும் திறன், பிரச்சனைகளுக்கு உரியமுறையில் விரைவில் தீர்வு காணும் திறன், நிலைத்தன்மை உட்பட பலவிதமான பர்சனாலிட்டி திறன்கள் 275 மதிப்பெண்களுக்கு பரிசோதிக்கப்படுகிறது. 

பெண்கள் இங்கே குறைவு

மெயின்ஸ் மற்றும் இன்டர்வியூ ஆகிய இரண்டு தேர்வையும் சேர்த்து 2,025 மதிப்பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. உதாரணத்திற்கு, ஒரு ஆண்டில் ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது என்றாலும், ஏறத்தாழ 9 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். அதில், 80 சதவீதம்பேர் ஆண்கள். பெண்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மொத்தம் 9 லட்சம் பேர் விண்ணப்பித்தாலும், அவர்களில், உரிய முறையில் தயாராகி திறம்பட தேர்வு எழுதுவோர்கள் 3 லட்சம் பேர் தான். அவர்களில் 13 ஆயிரம் பேர் மட்டுமே மெயின்ஸ் தேர்வு எழுத தேர்வு செய்யப்படுவர். அவர்களில், இன்டர்வியூக்கு செய்யப்படுவோர் 2,500 பேர்தான். அதாவது காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையில் இருந்து 2 முதல் 2.5 மடங்கு வரையில், இன்டர்வியூக்கு அழைக்கப்படுவர். 

சிவில் சர்வீசஸ் தேர்வின் இந்த மூன்று நிலைகளுக்கும் சிறந்த முறையில் பயிற்சி பெறுவது மிக அவசியம். புரிந்து பதில் அளிக்கத் தெரிந்தால் மட்டுமே இத்தேர்வில் வெற்றிபெற முடியும். பொது அறிவை வளர்த்துக்கொள்ளும் விதம், கேள்விகள் கேட்கப்பட வாய்ப்புள்ள விதம், அனைத்து நிலைகளிலும் நுணுக்கங்களை அறிந்து திறம்பட தேர்வு எழுதும் விதம், குறிப்பிட்ட நேரத்தில் விரைவாகவும் சரியாகவும் பதில் அளித்தல் ஆகியவையே ஒருவரின் வெற்றியை உறுதி செய்யும்!

-வைஷ்ணவி, நிர்வாக இயக்குனர், சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us