எப்படி படிக்கணும் இன்ஜினியரிங்? | Kalvimalar - News

எப்படி படிக்கணும் இன்ஜினியரிங்?மே 15,2019,17:01 IST

எழுத்தின் அளவு :

5 ஆண்டுகளுக்கு முன்பு, பேராசிரியர்களின் உதவியுடன் மாணவர்களின் கல்வி பின்புலம், சுற்றுச்சூழல், எதிர்பார்ப்பு ஆகியவை பற்றி ஒரு ஆய்வை நடத்தினோம். அதில், அனைத்து மாணவர்களின் எதிர்பார்ப்பும், நல்ல நிறுவனத்தில், வேலைவாய்ப்பு வேண்டும் என்பதாக இருந்தது. அத்தகைய வேலைவாய்ப்பு பெறுவதற்கான தகுதிகள் குறித்து ஆராய்ந்து பார்த்தபோது, பிளஸ் 2 அளவிலான கணிதம் மற்றும் ஆங்கில மொழித் திறனில், பின் தங்கியிருந்ததை அறிய முடிந்தது. 


அதன்பிறகு, மாணவர்களின் திறனை வளர்க்கும் விதமாக, சிறப்பு கணித வகுப்பு, ஆங்கில மொழிப் பயிற்சி மற்றும் கூடுதல் திறன் வளர்ப்பு பயிற்சிகளை அளித்தோம். தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்களை கல்லூரிக்கு அழைத்து வந்து, மாணவர்களிடம் கலந்துரையாட செய்தோம். மாணவர்களை அழைத்து சென்று தொழில் நிறுவனங்கள் செயல்படும் விதம் குறித்தும் நேரடியாக உணரச் செய்தோம். இதன்மூலம், வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் குறித்து மாணவர்களே உணர்ந்துகொண்டு, அதற்கேட்ப ஆர்வமுடன் செயல்பட்டனர்.


தேவைப்படும் திறன்கள்


இன்ஜினியரிங் படித்த, திறன் படைத்தவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்துகிடக்கும் இந்த சூழலில், அனலடிக்கல் திறன் மற்றும் ஆட்டிடியூட் இருக்கும் மாணவர்கள் தாராளமாக இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்யலாம். எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படும் நிலையில், கம்ப்யூட்டர் துறையை சார்ந்த மாணவர்கள் மட்டும் இன்றி, அனைத்து துறை மாணவர்களும் கம்ப்யூட்டர் கோடிங்’ தெரிந்திருக்க வேண்டியது இன்றைய காலக்கட்டத்திற்கு மிக அவசியமான ஒன்று.


மேலும், ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி, சைபர் பிசிக்கல் சிஸ்டம்ஸ் போன்ற புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ‘இண்டஸ்ட்ரி 4.0’ முக்கிய இடத்தை பிடித்துள்ள நிலையில், இவை சார்ந்த அறிவை அனைத்து மாணவர்களும் வளர்த்துக்கொள்வதும் அவசியம். ஏனெனில், இத்தகைய புதிய தொழில்நுட்பங்கள், கம்ப்யூட்டர் துறையை மட்டுமின்றி அனைத்து இன்ஜினியரிங் துறைகளையும் சார்ந்தே உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


அனைத்து இன்ஜினியரிங் துறைகளும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ள இந்த சூழலில், புதிய திறன்களை எப்படி வளர்ப்பது என்பது தான் இன்று, தொழில்நிறுவனங்களுக்கும் சரி, கல்வி நிறுவனங்களுக்கும் சரி உள்ள மிகப்பெரிய சவால். தொழில்நிறுவனங்களுக்கு ஏற்ப தேவைப்படும் திறன்களை பெற்றிருந்தால் மட்டும் போதும்; சம்பளம் ஒரு பிரச்னையே இல்லை. இவற்றை உணர்ந்து, தேவைப்படும் நவீன பயிற்சிகளை கல்வி நிறுவனங்கள் அளித்தாலும், மாணவர்கள் கல்லூரி காலத்தில் எப்படி திறன்களை வளர்த்துக்கொள்கிறார்கள் என்பதே முக்கியம். 


ஆகவே, கல்லூரியில் சேர்ந்தவுடன், முதலாவதாக, ஆங்கில மொழித்திறன் மற்றும் கோடிங் ஆகியவற்றில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இரண்டாவதாக, குறைந்தது 60 சதவீத நேரத்தை தொழில்நிறுவனங்களில், அங்குள்ள வல்லுநர்களுடன் இணைந்து செயல்படுவதில் செலவிட வேண்டும். மூன்றாவதாக, கல்லூரி ஆய்வக நேரத்தை முழுமையாகவும், சிறப்பாகவும் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அடுத்தாக, கண்டிப்பாக ஒவ்வொரு மாணவரும் 5 ’மினி புராஜெக்ட்’கள் செய்வதோடு, பல்வேறு தொழில்நுட்ப போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இவைகளை முறையாக செய்தாலே, திறன் மேம்படுவதோடு, சிறந்த நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் அருமையான வாய்ப்புகளை பெறமுடியும்!


-முனைவர் கே.பொம்மனராஜா, முதல்வர், கே.பி.ஆர்., இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை.


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us