கற்பதற்கான முதல் படி, தவறு! | Kalvimalar - News

கற்பதற்கான முதல் படி, தவறு!ஏப்ரல் 22,2019,09:23 IST

எழுத்தின் அளவு :

இன்றைய மாணவர்களிடம் ஏராளமான சக்திகள் புதைந்து கிடக்கின்றன. அவர்களுடன் செலவிடப்படும் நேரம் பொன்னானது என்பதை எனது அனுபவத்தில் உணர்கிறேன். ஆசிரியர்களை விட, மாணவர்கள் அதிக திறன் படைத்தவர்களாக திகழும் இன்றைய நிலையில், மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் புதுமையை புகுத்தி, அவர்களின் கற்றல் திறனை மெருகேற்றும் வகையில், செயல்முறையில் பயிற்சி அளிப்பது அவசியம். 

பிரச்சனைகளை தேடுங்கள்

இன்றைய சமூகத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து மாணவர்களை அறியச் செய்து, அவற்றிற்கு தீர்வு காண ஊக்குவிக்க வேண்டும். பிரச்னைகளை கண்டு பயந்து ஓடாமல், பிரச்சனைகளை தேடித் தேடி அதற்கு தீர்வு காணவே நாம் அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அவ்வாறு, ஒரு பிரச்சனைக்கு காணப்படும் சிறந்த தீர்வே, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு,  வரும்காலத்தில் மிகப்பெரிய தொழிலாக வளர்ந்து நிற்கும். சமுதாயத்திடம் இருந்து கற்றுக்கொண்டதையும், பெற்றுக்கொண்டதையும் சமுதாயத்திற்கு திரும்ப அளிக்க வேண்டும். அவ்வாறு, மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து, அவற்றிற்கு தொழில்நுட்ப தீர்வு அளித்ததே, ஓலா, பிலிப்கார்ட், சுவிகி போன்ற நிறுவனங்கள் உருவாகக் காரணம். 

நாம் நமது கல்வி முறையை எப்போதும் வெளிநாட்டு கல்வி முறைகளுடன் ஒப்பிட்டு வருகிறோம். ஆனால், நாம் இங்கு சந்திக்கும் அனைத்து சவால்களுக்கும், வெளிநாடுகளில் பின்பற்றப்படும் முறை தீர்வாக அமையாது. ஏனெனில், வெளிநாடுகளில் உள்ள கலாசாரம், வாழ்க்கைமுறை, எதிர்பார்ப்புகள், சுற்றுச்சூழல் என பல அம்சங்கள் நமது நாட்டில் வேறுபடுகின்றன. அதேநேரம், நமக்கும் பயன்படக்கூடிய திட்டங்கள், முறைகள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை பின்பற்றுவதில் தவறில்லை. குறிப்பாக, ’டிசைன் திங்கிங்’ முறையிலான கல்வி கற்றல் இன்று உலகநாடுகள் அனைத்தும் முன்னெடுத்து வருகின்றன. 
திட்டமிடுவதிலும், செயல்படுவதிலும் தான் நமது இளைஞர்கள் சற்று பின் தங்கியுள்ளனரே தவிர, எவற்றையும் அதிவேகமாக கற்கும் திறன் படைத்தவர்கள் இந்தியர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இத்தருணத்தில் இளைஞர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். அது, சவால்களுக்கு முதலில் தீர்வு காண வேண்டும்; அதிலிருந்து பிறகு கற்றுக்கொள்ள வேண்டும், என்பதே!

வெற்றிக்கான திறன்கள்

கிரிட்டிக்கல் திங்கிங், சோசியல் ஸ்கில், எமோசனல் ஸ்கில் ஆகிய மூன்று திறன்கள், ஒருவருக்கு இருந்தால் வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெற முடியும். இவற்றிற்கு தொழில் நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் அளித்துவருகின்றன. தொழில்நுட்ப திறன்களுடன் இந்த மூன்று திறன்களையும் சேர்ந்து கற்றுக்கொள்ள வேண்டியது இன்றைய காலக்கட்டத்தில் அவசியமாகிறது. இந்த திறன்கள் நமக்கு இல்லை அல்லது வராது என்று எவரும் சோர்ந்துபோக வேண்டியதில்லை. அனைவராலும் இந்த திறன்களை வளர்த்துக்கொள்ள முடியும். திட்டமிட்டு, மாதத்திற்கு ஒவ்வொன்றாக கற்றுக்கொள்ள வேண்டும். தொடர்ந்து பயிற்சி பெற்றால் மட்டுமே எந்த ஒரு திறனையும் மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் திறனை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும். 

தவறு செய்வதுதான் கற்பதற்கான முதல் படி. கல்வி கற்பது என்பதே அதிகமான தவறுகள் செய்வதிலிருந்து தான். வேலை வாய்ப்பைப் பெற்ற பிறகு, தொழில்நிறுவனங்களில் தான் தவறு செய்யக்கூடாது. ஆனால், கல்வி நிறுவனங்களில் எவ்வளவு தவறுகள் வேண்டுமானாலும் செய்யலாம்... ஆனால், செய்யும் தவறிலிருந்து கற்றுக்கொண்டு, திரும்ப அதே தவறை செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்! 

-நளின் விமல்குமார், இயக்குநர், எஸ்.என்.எஸ்., கல்வி குழுமம், கோவை.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us