அறிவோம் ஐ.ஐ.டி.டி.எம்., | Kalvimalar - News

அறிவோம் ஐ.ஐ.டி.டி.எம்.,ஏப்ரல் 19,2019,00:49 IST

எழுத்தின் அளவு :

இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் அதிக வருமானம் ஈட்டும் முக்கிய துறைகளுள் ஒன்றாக 'சுற்றுலா’ திகழும் நிலையில், அதில் துறை சார்ந்த பயிற்சி பெற்ற மனித வளத்தை உருவாக்குவது ஒவ்வொரு நாட்டிற்குமே அவசியமாகிறது.  நாட்டின் அந்நிய செலாவணியை அதிகரிக்கும் துறைகளுள் ஒன்றாகவும் சுற்றுலாத் துறை விளங்குவது இங்கே குறிப்பிடத்தக்கது! 

அறிமுகம்
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் துறையில் தரமான கல்வி, பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சிகளை வழங்கும் பொருட்டு இந்தியாவில், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கீழ், தன்னாட்சி பெற்ற அமைப்பாக 1983ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனமே ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டூரிசம் அண்ட் டிராவல் மேனேஜ்மென்ட்’. 

குவாலியர், புவனேஸ்வர், நொய்டா, கோவா மற்றும் நெல்லூர் ஆகிய இடங்களில் செயல்படும் இக்கல்வி நிறுவனத்தில், இளநிலை, முதுநிலை, டிப்ளமா மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் என பல்வேறு நிலைகளில் சுற்றுலா பட்டப்படிப்புகள் வழங்கப் படுகிறது. 

படிப்புகள்:
 பி.பி.ஏ.,
 எம்.பி.ஏ., -டிராவல் அண்ட் டூரிசம் மேனேஜ்மெண்ட்
 போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் மேனேஜ்மெண்ட் - இண்டர்நேஷனல் டூரிசம் பிஸ்னஸ் / டூரிசம் அண்ட் டிராவல்
 பிஎச்.டி.,

தகுதிகள்:
இளநிலை படிப்பிற்குப் பள்ளிப் படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். முதுநிலை படிப்பான எம்.பி.ஏ., படிப்பில் சேர கேட், மேட், சிமேட், ஜிமேட், எக்ஸாட் ஆகிய நுழைவுத்தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் அல்லது ஐ.ஐ.டி.டி.எம்., கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

படிக்கும் போதே வேலை:
இத்துறை மாணவர்களுக்காக வகுக்கப்பட்ட மத்திய அரசின் முக்கிய திட்டங்களுள் ஒன்று ‘ஏர்ன் வைல் யூ லேர்ன்’. 18 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவர். காமன் வெல்த் போட்டிகளின் போது இத்திட்டத்தின் கீழ் இந்திய முழுவதும் 2,512 மாணவர்கள் பயிற்சி பெற்றனர். அதுமட்டுமின்றி ‘டிரைனிங் பார் இமிக்ரேஷன் ஆபிசர்ஸ் ஆப் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்ஸ் ஆப் தி கன்ட்ரி’, ‘சம்மர் இன்டர்நேஷனல் யூத் எக்ஸ்சேஞ் புரோகிராம் பை மார்கோ - போலோ’ போன்ற பல திட்டங்கள் மத்திய அரசால் வழங்கப்படுகின்றன.

வேலை வாய்ப்பு:
இத்துறை பட்டதாரிகளுக்கு அவரவர் திறனுக்கேற்ப ஐ.ஆர்.சி.டி.சி., கன்ட்ரி கிளப், கார்கோ நிறுவனங்கள், லாஜிஸ்டிக்ஸ், டூர் ஆப்ரேஷன்ஸ், ஹாஸ்பிடாலிட்டி போன்ற துறைகளில் பணி வாய்ப்பு அதிகம் உள்ளன. இந்தியாவில் மட்டுமின்றி அயல்நாடுகளிலும் வேலை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

விபரங்களுக்கு: www.iittm.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us