சிவில் சர்வீசஸ் தேர்வு | Kalvimalar - News

சிவில் சர்வீசஸ் தேர்வுமார்ச் 11,2019,08:45 IST

எழுத்தின் அளவு :

நாட்டின் பல்வேறு அரசு துறைகளில், உயரிய மற்றும் அதிகாரம் நிறைந்த பதவிகளுக்காக நடத்தப்படும் தேர்வு, ‘சிவில் சர்வீசஸ்’ எனப்படும் இந்தியக் குடிமைப் பணி தேர்வு ஒவ்வொரு ஆண்டும் யு.பி.எஸ்.சி., எனும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது. இந்த தேர்வின் அடிப்படையிலேயே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்., போன்ற 20க்கும் மேற்பட்ட அதிகாரமிக்க மத்திய அரசு பதவிகளுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 

தகுதிகள்:
 ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., பதவிகளுக்குக் கட்டாயம் இந்திய நாட்டுக் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். இவை தவிர மற்ற பதவிகளுக்கு நேபாளம், திபெத் அல்லது பூட்டான் நாட்டை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
 அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் கலை, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் என ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
 விண்ணப்பதாரர் உரிய உடற்தகுதி பெற்றிருக்க வேண்டியதும் அவசியம்.

வயது வரம்பு: 
21 முதல் 32 வயதிற்குட்பட்டவர்கள் இந்த தேர்வினை எழுதலாம். மத்திய அரசு வகுத்துள்ள விதியின்படி, ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பில் சலுகை உண்டு. 

மூன்று நிலை தேர்வு:
முதல்நிலை (பிரிலிமினரி) தேர்வு, முதன்மை (மெயின்ஸ்) தேர்வு மற்றும் நேர்முக (பர்ஸ்னல் இன்டர்வியூ) தேர்வு என மொத்தம்  மூன்று நிலைகளில் நடைபெறும் இத்தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணியை தேர்வு செய்வதில் முன்னுரிமை அளிக்கப்படுகின்றன. அதாவது, அதிக மதிப்பெண் பெறுபவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., என எந்த பதவியையும் அவரவர் விரும்பம் போல தேர்வு செய்துகொள்ளலாம்.

பாடங்களும், மதிப்பெண்களும்:
முதல்நிலை தேர்வு - தாளிற்கு 200 மதிப்பெண்கள் வீதம் இரண்டு தாள்களுக்கு மொத்தம் 400 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படும். முதல் தாளில் தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள், நிர்வாக அமைப்பு, பொது அறிவியல், இந்திய வரலாறு, பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆகிய பிரிவுகளிலும், இரண்டாம் தாளில் காம்ப்ரிஹென்ஷன், லாஜிக்கல் ரீசனிங், டிசிஷன் மேக்கிங், டேட்டா இன்டர்பிரிடேஷன் ஆகிய பிரிவுகளில் இருந்தும் கேள்விகள் இடம்பெறும். அனைத்து கேள்விகளும், ‘மால்டிப்பிள் சாய்ஸ்’ வடிவிலேயே இடம் பெற்றிருக்கும். இதில் குறைந்தது 33 சதவீத மதிப்பெண் பெற்றால் மட்டுமே அடுத்த நிலை தேர்வினை எழுத முடியும்.

முதன்மை தேர்வு - மொத்தம் 7 தாள்களாக 1,750 மதிப்பெண்களுக்கு முதன்மை தேர்வு நடைபெறும். இதில் இரண்டு தாள்களை, தேர்வர்கள் விருப்பமான பாடத்தைத் தேர்வு செய்து எழுதலாம். 

நேர்முகத் தேர்வு - நேர்முகத் தேர்வில் அதிகபட்சம் 275 மதிப்பெண்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்திய ஆட்சி முறை, தேர்வரின் தனித்திறன் மற்றும் தேசபற்று சார்ந்த கேள்விகள் இதில் கேட்கப்படும்.

இந்த தேர்வுகளில், தேர்வர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு பணிகள் ஒதுக்கப்படும்.

விபரங்களுக்கு: www.upsc.gov.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us