இந்திய தத்துவவியல் ஆராய்ச்சி கழகம் | Kalvimalar - News

இந்திய தத்துவவியல் ஆராய்ச்சி கழகம்பிப்ரவரி 18,2019,13:01 IST

எழுத்தின் அளவு :

வாழ்வியல் தத்துவங்கள், உயிர்களின் தோற்றம் மற்றும் இயல்புத் தன்மை போன்றவற்றை ஆராய விரும்பும் தத்துவவியல் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடும், அவர்களுக்கான தரமான கல்வியை வழங்குவதற்காகவும் மத்திய அரசின் கல்வி துறை அமைச்சகம் மற்றும் உயர்கல்வி துறையால் நிறுவப்பட்ட அமைப்பே ‘இந்தியன் கவுன்சில் ஆப் பிலாசபிக்கல் ரிசர்ச்’ எனும் இந்திய தத்துவவியல் ஆராய்ச்சி கழகம்.

அறிமுகம்:
இந்திய தத்துவவியல் ஆராய்ச்சி கழகம் (ஐ.சி.பி.ஆர்.,) 1977ம் ஆண்டு இந்திய சங்கங்கள் சட்டம் 1860ன் (இந்தியன் சொசைட்டீஸ் ஆக்ட்) கீழ் அமைக்கப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழு, சமூக அறிவியல் ஆராய்ச்சி கழகம், இந்திய தேசிய அறிவியல் அகாடமி போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தத்துவவாதிகள், சமூக விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு விரிவான அமைப்பாக இது செயல்பட்டு வருகிறது. 
இந்த உறுப்பினர்களால், கழகத்தின் செயற்பாடுகள் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. மசோதாக்கள் வாயிலாக அங்கீகரிக்கப்பட்ட தத்துவவியல் சார்ந்த திட்டங்களுக்கு மானிய உதவித் தொகைகளை வழங்குவதும் இதன் முக்கிய பணியாகும்.

நோக்கங்கள்:
 தத்துவவியல் துறை சார்ந்த ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பது.
 தத்துவவியல் துறையில் புறக்கணிக்கப்பட்ட அல்லது வளர்ந்து வரும் பிரிவுகளில் ஆராய்ச்சிகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது.
 ஆராய்ச்சி திட்டங்கள் குறித்த விபரங்களை விளம்பரங்களின் மூலம் பிறருக்கு தெரியப்படுத்துவது.
 ஆராய்ச்சி திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் இடை ஒழுங்குமுறை ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பது.
 இத்துறை சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கான நிதி ஆதரவுகளை வழங்குவது.
 தனிநபர் அல்லது நிறுவனங்களின் ஆராய்ச்சி திட்டக் கருத்துருக்களை உருவாக்குவது அல்லது அந்த ஆராய்ச்சிகளுக்கான பிற ஏற்பாடுகளைச் செய்து ஆதரவு வழங்குவது.
 கருத்தரங்கங்கள், சிறப்பு படிப்புகள், மாநாடுகள் ஆகியவற்றின் மூலம் தத்துவவியல் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிப்பது.
 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் தத்துவவியல் ஆராய்ச்சிக்கான உதவித்தொகைகளை வழங்குவது மற்றும் சிறந்த ஆராய்ச்சிகளுக்கு விருது வழங்கிக் கவுரவிப்பது.
 தரவரிசைப் பட்டியல்களை வெளியிடுவது.
 வெளிநாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து தத்துவவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்வது.
 ஆராய்ச்சி விதிமுறைகளை வகுப்பது.

உதவித்தொகைகள்:
இளம் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தத்துவவியல் துறை சார்ந்த பல்வேறு பிரிவுகளின் கீழ் உதவித்தொகைகளை ஐ.சி.பி.ஆர்., வழங்கி வருகிறது. குறிப்பாக, ‘ஜூனியர் ரிசர்ச் பெலோஷிப்’ மற்றும் ‘ஜெனரல் பெலோஷிப்’ ஆகிய உதவித்தொகைகள் இளம் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் ஒன்றாக அமைந்துள்ளது.

விபரங்களுக்கு: http://icpr.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us