இன்ஜி., கல்லூரிகளில் கலை, அறிவியல் படிப்புகள்; சாதகமா? பாதகமா? | Kalvimalar - News

இன்ஜி., கல்லூரிகளில் கலை, அறிவியல் படிப்புகள்; சாதகமா? பாதகமா?ஜனவரி 19,2019,11:32 IST

எழுத்தின் அளவு :

இன்ஜினியரிங் கல்லூரிகளில், கலை மற்றும் அறிவியல் படிப்புகள் வழங்க, அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு (ஏ.ஐ.சி.டி.இ.,) அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இத்தகைய திட்டம் பொறியியல் கல்லூரிகளுக்கு சாதகமாகவே அமையும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே, நாடு முழுவதிலும் பொறியியல் படிப்பின் மீதான விமர்சனம் அதிகரித்துவருகிறது. திறமையான மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது ஒரு பிரச்சனையாகவே இல்லை என்றபோதிலும், பொறியியல் படிப்பிற்கான வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளது என்றும், வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப போதிய திறன்களை பொறியியல் பட்டதாரிகள் பெற்றிருக்கவில்லை என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. 

எவ்வாறாயினும், பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல் ஆகியவற்றிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் வளர்ச்சியைப் பொறுத்தே, புதிய கண்டுபிடிப்புகள், மக்களின் வாழ்க்கை முறை மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி, நாட்டின் முன்னேற்றம் ஆகியவை அடங்கியுள்ளன. ஆகவே, நாடு முழுவதிலும் பொறியியல் படிப்புகள் உரிய தரத்துடன் வழங்கப்பட வேண்டியதும் அவசியமான ஒன்று.

இவற்றை உணர்ந்தே, பொறியியல் படிப்பின் தரத்தை மேம்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் சரி, ஏ.ஐ.சி.டி.இ.,யும் சரி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், பொறியியல் கல்லூரிகள், ஒரே வளாகத்தில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளையும் சேர்த்தே வழங்க அனுமதி அளிக்க ஏ.ஐ.சி.டி.இ., முடிவு செய்துள்ளது. இந்தகைய முடிவு, தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு சாதகமான நிலையாகவே பார்க்கப்படுகிறது. அதேவேளை, இத்தகைய முடிவு பெயரளவிலேயே தற்போது வரை இருக்கிறது. ஏனெனில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படவில்லை. ஏ.ஐ.சி.டி.இ.,யால் வெளியிடப்பட்டுள்ள 2019-20ம் ஆண்டு ’அப்ரூவல் புராசஸ் ஹேண்ட்புக்’-ல் கூட இதுகுறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. 

எனினும், இத்தகைய திட்டம் ஏ.ஐ.சி.டி.இ.,யால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும்பட்சத்தில், பொறியியல் கல்லூரிகள் அனுபவமிக்க பேராசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்களைக் கொண்டு உரிய முறையில் அத்தகைய படிப்புகளை வழங்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம் கூறுகையில், ‘’ஏ.ஐ.சி.டி.இ.,யின் இத்தகைய முடிவு வரவேற்கத்தக்க ஒன்று. பொறியியல் படிப்பை அறிவியல் அடிப்படையின்றி கற்க முடியாது. இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றின் மீதே பொறியியல் படிப்பு கட்டமைக்கப்பட்டுள்ளதால், பொறியியல் கல்லூரிகளில் அறிவியல் சார்ந்த பட்டப் படிப்புகள் வழங்குவது மிகச் சரியான முடிவு. ஆனால், அது மாணவர் சேர்க்கையின்றி தடுமாறும் பொறியியல் கல்லூரிகளை காப்பாற்றும் நோக்கில் மட்டுமே இருக்கக்கூடாது. உண்மையில், தரமான கல்வியை வழங்குவதை உறுதிப்படுத்தப்பட வேண்டியது மிக அவசியம்’’, என்றார்.

’’ஒரே வளாகத்தில், கலை அறிவியல் படிப்புகளை பொறியியல் கல்லூரிகள் வழங்கினால், இருபிரிவு மாணவர்களும் இணைந்து செயல்பட வழிவகுக்கும். ஆனால், இதுகுறித்து முறையான அறிவிப்பும், செயல்தன்மையும் ஏ.ஐ.சி.டி.இ.,யால் வெளியிடப்பட்ட பிறகே, முழுமையான விபரம் தெரியவரும்’’ என்று, செண்டு பொறியியல் கல்லூரி முதல்வர் அப்துல் காதர் கூறினார்.

கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் கூறுகையில், ‘’இத்தகைய முடிவை ஏ.ஐ.சி.டி.இ., மட்டும் தன்னிட்சையாக எடுக்க முடியாது. மாநில அரசுகள், பல்கலைக்கழக மானியக் குழு, மாநில பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் அனுமதிக்கும் உட்பட்டதே.  எனினும், இத்தகைய நோக்கத்தில் தவறில்லை. பொறியியல் கல்லூரிகளுக்கு இது சாதகமாகவே அமையும். அதேவேளை, தரமான ஆய்வகங்கள்,  அனுபவம் மிக்க பேராசிரியர்கள் ஆகியவையும் உறுதி செய்யப்பட வேண்டும். தற்போது, கலை அறிவியல் கல்லூரிகளிலேயே மாணவர் சேர்க்கை இன்றி இடங்கள் காலியாக உள்ள நிலையில், தரமான கல்வியை வழங்குவதில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டியது மிக அவசியமாகிறது’’, என்றார்.

-வி.சதீஷ்குமார்.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us