மாற்றம் சாத்தியமே! | Kalvimalar - News

மாற்றம் சாத்தியமே!ஜனவரி 17,2019,12:09 IST

எழுத்தின் அளவு :

இன்றைய வகுப்பறை கற்றல் முறை, மாணவர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தாமல், ஒருவித சலிப்பையே உருவாக்குகிறது. இச்சூழல் மாற கற்றல் முறையில் மாற்றம் காண வேண்டியது அவசியம். இந்த முயற்சியில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. மாணவர்களுக்கு வாழ்வின் பெருமையையும், அதை ரசித்து வாழ்வதற்கான அடிப்படை தேவைகளையும், அந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் அருமையையும் ஆசிரியர்கள் பயிற்றுவிக்க வேண்டும். 

கல்விச் சூழலை மேம்படுத்த, ஆய்விற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, வகுப்பறைகளை ஆய்வகங்களாக, ஆராய்ச்சி கூடங்களாக மாற்றப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சமூகத்தில் ஒவ்வொரு தரப்பினரும் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக புதுப்புது தீர்வுகள் காணப்பட வேண்டும். அதில் பள்ளி மாணவர்களின் பங்களிப்பும் இடம்பெறச் செய்ய வேண்டும். அப்போது இளம் தொழில்முனைவோர்கள் அதிகளவில் உருவாகும் ஆரோக்கியமான சூழல் சாத்தியப்படும். இவற்றை உணர்ந்து, எங்கள் பள்ளியில் அதற்கான தீவிர முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

வெள்ளிவிழாவை எதிர்நோக்கி...

1994ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, வெள்ளிவிழாவை எதிர்நோக்கியுள்ள லிட்ரசி மிஷன் பள்ளியில் தற்போது 3,400 மாணவர்கள் மற்றும் 140 ஆசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர். மாணவர்களுக்கு கல்வியோடு சிறந்த குணநலன்களும் மிக அவசியம் என்பதை உணர்ந்து, இந்தனை ஆண்டுகளாக எங்கள் பள்ளியில், படிப்பிற்கு மட்டுமின்றி ஒழுக்கத்திற்கும் முக்கியத்துவம் அளித்துவருகிறோம். 

ஒரு குழந்தை நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பில் மட்டுமல்ல... ஆசிரியர்கள் வளர்ப்பிலும் தான் என்பது எனது கருத்து. மாணவர்கள் எதிர்காலத்தில் மருத்துவராக, பொறியாளராக, பொதுநலவாதியாக, தொழில் அதிபராக சமூகத்தில் உயர்ந்த பொறுப்பு வகிக்கும் போது தலைமைப் பண்பு உட்பட பல்வேறு திறன்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பதற்காக, நாங்கள் அவர்களுக்கு பள்ளி பருவத்திலேயே பேச்சு, பாட்டு, பொது அறிவு, ஞாபக சக்தி, விளையாட்டு என பல்வேறு திறன் வளர்ப்பில் ஊக்கப்படுத்துகிறோம். அதற்காக ஒவ்வொரு பிரிவுக்கும் தனியாக ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளனர். மன அழுத்தமில்லா சூழ்நிலையை உருவாக்க, அனைத்து மாணவர்களுக்கும் மனவளக்கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. 

சிறந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு தங்கம் பரிசளிக்கிறோம். ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டு முழுவதும் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறோம். புத்துணர்விற்காக, ஆண்டுதோறும் சுற்றுலா அழைத்து செல்கிறோம். பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. அதில், பல்வேறு நிறை, குறைகள் ஆலோசிக்கப்பட்டு, உரிய தீர்வு காணப்படுகிறது. 

-எம்.எஸ்.சுப்ரமணியம், தலைவர், லிட்ரசி மிஷன் கல்வி நிறுவனங்கள்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us