இந்திய செவிலியர் சங்கம் | Kalvimalar - News

இந்திய செவிலியர் சங்கம்ஜனவரி 03,2019,21:18 IST

எழுத்தின் அளவு :

துணை மருத்துவப் படிப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று நர்சிங் படிப்பு. இத்துறை சார்ந்த கல்வித் தரத்தினை மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகளை முறைப்படுத்தவும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி பெற்று இயங்கி வரும் அமைப்பே ‘இந்தியன் நர்சிங் கவுன்சில்’ (ஐ.என்.சி.,) எனும் இந்திய செவிலியர் சங்கம்.

அறிமுகம்:
இந்திய முழுவதிலும் ஒரே மாதிரியான நர்சிங் படிப்பை வழங்குவதற்காக 1947ம் ஆண்டு ‘இந்தியன் நர்சிங் கவுன்சில் சட்டம்’ பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டது. இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் என பல நிலைகளில் அங்கீகரிக்கப்பட்ட கல்வியை ஐ.என்.சி., வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியே இந்த கவுன்சிலின் கிளைகள் அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. மேலும், செவிலியர் படிப்பின் தரத்தினை உயர்த்துவதற்காக சர்வதேச அளவிலும், பிற மருத்துவம் சார்ந்த அமைப்புகளுடன் இணைந்து பல செயல்முறை திட்டங்களை வகுத்து, அவற்றை இச்சங்கம் செயல்படுத்தியும் வருகிறது.

முக்கிய பணிகள்:
நர்சிங் பட்டப்படிப்பிற்கான அங்கீகாரத்தை வழங்குவது.
நர்சிங் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனத்திற்கான அங்கீகாரங்களை வழங்குவது.
அதே சமயம் விதிமுறைகள் மீறப்படும் நிலையில் அக்கல்வி நிறுவனத்திற்கான அங்கீகாரத்தினை ரத்து செய்யும் அதிகாரமும் ஐ.என்.சி.,க்கு உள்ளது.
பாடத்திட்டங்கள், பயிற்சி முறைகள் மற்றும் தேர்வு தாள்களை வடிவமைப்பது மற்றும் நடத்துவதும் இச்சங்கத்தின் முக்கிய பணிகளுள் ஒன்று.
பிற மருத்துவ சங்கங்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து பயிற்சிப் பட்டறைகள், மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்களை நடத்துவது.
மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டங்களை வழங்கி அவர்களை ஊக்குவிப்பது.
தரவரிசைப் பட்டியல்களை வெளியிடுவது.

பட்டப்படிப்புகள்:
இந்திய நர்சிங் கவுன்சிலானது பல நிலைகளில் செவிலியர் படிப்புகளை வழங்கி வருகிறது. அவை, 
ஆக்சிலரி நர்ஸ் அண்ட் மிட்வைப் (ஏ.என்.எம்.,) - 2 வருடம்
ஜெனரல் நர்சிங் அண்ட் மிட்வைப் (ஜி.என்.எம்.,) - 3 வருடம்
பி.எஸ்சி., (பேசிக்) - 4 வருடம்
பி.எஸ்சி., (போஸ்ட் பேசிக்) - 2 வருடம்
எம்.எஸ்சி., - 2 வருடம்
எம்.பில்., - 1 வருடம்
பிஎச்.டி., - 3 முதல் 5 வருடம்
டிப்ளமா படிப்புகள்

பொதுப் பிரிவு, கைனக்காலஜி, ரேடியாலஜி, சைக்கியாட்ரிக், நீயூராலாஜிக்கல், ஆர்த்தோபெடிக் உள்ளிட்ட மருத்துவத்தில் உள்ள அனைத்துத் துறைகளுக்கும் தனித்தனியே அத்துறை சார்ந்த பயிற்சி பெற்ற செவிலியர்களின் தேவையுள்ளது. கவுன்சில் அமைக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை இதற்குத் தகுதியான செவிலியர்களை அவர்களுக்குத் தேவைப்படும் திறன்களை மேம்படுத்தி வருகிறது.

விபரங்களுக்கு: www.indiannursingcouncil.org

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us