சமுதாய மாற்றமே எங்களது நோக்கம்! | Kalvimalar - News

சமுதாய மாற்றமே எங்களது நோக்கம்!டிசம்பர் 14,2018,16:12 IST

எழுத்தின் அளவு :

திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதி தொழில்புரியும் நண்பர்கள் சிலருடன் இணைந்து திருப்பூர் கல்வி மற்றும் பண்பாட்டு அறக்கட்டளையை ஆரம்பித்தோம். தற்போது இந்த அறக்கட்டளையில் 16 பேர் உள்ளனர். இந்த அறக்கட்டளையின் கீழ், 30 ஏக்கர் பரப்பளவில் சமச்சீர் மற்றும் சி.பி.எஸ்.இ., என இரண்டு பாடத்திட்டத்திலும் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. குழந்தைகளுக்கு கல்வியுடன் சிறந்த ஒழுக்கம் மற்றும் திறமையை வளர்க்கும் நோக்கிலும், சமுதாய நலனை கருத்தில் கொண்டும் இந்த கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறோம்!

மாணவர்களிடம் புதைந்துள்ள அனைத்துவிதமான  திறமைகளையும் வெளிக்கொணரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எங்கள் கல்வி நிறுவனத்தில் படிக்கும் ஒவ்வொரு மாணவரும், சிறந்த பழக்கவழக்கங்களை கற்று, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, எதிர்காலத்தில் சமுதாயம் போற்றும் பொறுப்புகளை ஏற்று நடத்த தகுதி படைத்தவர்களாக, அதேவேளை, சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களாக அவர்களை செதுக்குகிறோம்.

கல்வியில் மட்டுமல்லாது, உடலளவிலும் வலிமை படைத்தவர்களாக மாணவர்களை உருவாக்கும் வகையில், கிரிக்கெட், புட்பால், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், வாலிபால் என பல்வேறு முன்னணி விளையாட்டுகளுக்கும் சிறந்த மைதானங்கள் மற்றும் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளோம். பல்வேறு விளையாட்டு போட்டிகளிலும், கலை போட்டிகளிலும் பங்கேற்க ஊக்குவிக்கிறோம்.

காலையில் பள்ளி ஆரம்பித்தவுடன் சத்தான சிற்றுணவு, அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியிலேயே மதிய உணவு மற்றும் மாலையிலும் சத்தான சிற்றுணவு அளித்து, அனைத்து மாணவர்களையும் கட்டாயம் விளையாட்டுகளில் ஈடுபடுத்துகிறோம். சிறப்பு தேர்வு நடத்தி, ஒவ்வொரு மாணவர்களுடைய பலவீனங்களை கண்டறிந்து, அவற்றிலிருந்து விடபட தனிக்கவனம் செலுத்துகிறோம். அதுவும், பள்ளி நேரத்திலேயே தனிக்கவனம் செலுத்துகிறோமே தவிர, அதற்காக கூடுதல் நேரத்தைக் எடுத்துக்கொண்டு, சிறப்பு வகுப்புகள் நடத்துவதில்லை. வருங்காலத்தில், ஒரு நிறுவனத்தை அல்லது தொழிலை நிர்வகிக்கும் வகையில் திறமை படைத்தவர்களாக உருவாக்குகிறோம். சுற்றுச்சூழலில் கவனம் செலுத்துபவர்களாகவும், அதுசார்ந்த பணிகளில் ஆர்வம் கொண்டவர்களாகவும், மாணவர்களை மாற்றுகிறோம். 

அதேவேளை, கல்வி மற்றும் இதர செயல்பாடுகளில் முறையாக கவனம் செலுத்தாத மாணவர்களை எந்தவித கண்டிப்புடனும் நாங்கள் நடத்துவதில்லை. தண்டனைகளும் வழங்கப்படுவதில்லை. திறம்பட செயல்படாத மாணவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி, அவர்களது குறைகளை நிவர்த்தி செய்யவும் உறுதுணையாக இருக்கிறோம். இதற்காக ஆசிரியர்களுக்கும் அவ்வப்போது பயிற்சி அளிக்கிறோம். 

ஆசிரியர்களின் குழந்தைகளுக்கும் சரி, பொது மாணவர்களுக்கும் சரி உதவித்தொகை, கல்வி கட்டண சலுகை வழங்குகிறோம். சர்வதேச அளவில் சாதனை படைத்தவர்களை பள்ளிக்கு அழைத்து, மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாடச் செய்கிறோம். இவ்வாறு, லாப நோக்கமின்றி மாணவர்களின் வளர்ச்சியிலும் சரி, சமுதாய முன்னேற்றத்திலும் சரி ஒரு உந்துசக்தியாக விளங்கிறோம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்! 

-சந்திரன், நிர்வாக அறங்காவலர், டி.இ.ஏ., பள்ளிகள், திருப்பூர்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us