‘விஞ்ஞானம் குறித்த விழிப்புணர்வு அவசியம்’ | Kalvimalar - News

‘விஞ்ஞானம் குறித்த விழிப்புணர்வு அவசியம்’நவம்பர் 29,2018,10:41 IST

எழுத்தின் அளவு :

ஜெய்சாரதா பள்ளி துவங்கி 24ம் ஆண்டு நடைபெற்று கொண்டிருக்கும் இத்தருணத்தில், பள்ளியின் சில முக்கிய சாதனைகளை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்!

தொழிலாளர்கள் நிறைந்த இந்தப் பகுதியில், கீழ் தட்டு மக்களின் குழந்தைகளும் சி.பி.எஸ்.இ., தரத்திற்கு கல்வி கற்க வேண்டும். அதேசமயம், குறைவான கட்டணத்தில் அவர்களுக்கு அத்தகைய தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு எங்கள் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இப்போதும், அந்த முக்கிய நோக்கத்தை மையப்படுத்தியே செயல்பட்டும் வருகிறது.

எந்த ஒரு முக்கியமான கண்டுபிடிப்புகளை எடுத்துக்கொண்டாலும், இன்றளவும், நாம் வெளிநாடுகளைத் தான் சுட்டிக் காட்டிக்கொண்டிருக்கிறோம். ஏன் நம்மால், உலகமே வியக்கும் வகையில் புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியாதா? நிச்சயம் முடியும். அதற்கான தகுதியும், திறமையும் நம்மிடம் அதிகம் உள்ளது. ஆனால், அதுகுறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. நமது இந்திய மாணவர்களுக்கு, விஞ்ஞானம் குறித்த விழிப்புணர்வை ஆழமாக ஏற்படுத்த வேண்டியுள்ளது. அதற்கான ஒரு சிறு முயற்சியாக எங்களது பள்ளியில், மாணவர்கள் அறிவியல் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான வசதிகளையும், அவர்களை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறோம்.

இதுதவிர, தொடர்பியல் மேம்பாட்டிற்காக பள்ளி வளாகத்தில் ‘லேங்குவேஜ் லேப்’ ஏற்படுத்தியுள்ளோம். விளையாட்டுத் துறையிலும் மாணவர்கள் சாதிக்க ஊக்குவிக்கிறோம். பிற பள்ளிகளில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளிலும், எங்களது மாணவர்களை பங்கேற்க அறிவுறுத்துகிறோம். ஒவ்வொரு விளையாட்டிற்கும் பிரத்யேகமாக ஒரு பயிற்சியாளரை நியமித்துள்ளோம்.

எங்கள் கல்வி நிறுவனத்தில், மதிப்பெண்களை மட்டுமே நோக்கமாக கொண்டு மாணவர்களுக்கு கல்வி கற்கப்படுவதில்லை. மாணவர்கள் அனைத்து பாடங்களையும் புரிந்து படிக்கவே, தேவையான முயற்சிகளை எடுத்துவருகிறோம். அனைவருக்கும் ஒரே மாதிரியான பயிற்சி என்பது சரியான முறை அல்ல. ஏனெனில், ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு விதமான நிறை, குறை இருக்கும்.

சில மாணவர்களால் மனப்பாடம் செய்து தான் தேர்வு எழுத முடியும். சில மாணவர்களுக்கு பலமுறை கற்பித்தால் தான் பாடங்களை சரியாக புரிந்துகொள்ள முடியும். இவ்வாறு ஒவ்வொரு மாணவர்களின் கல்வி கற்கும் திறனுக்கு ஏற்ப சிறப்பு கவனம் செலுத்தியும், பயிற்சி அளித்தும் அவர்களை கல்வியில் சிறந்து செயலாற்ற ஊக்குவிக்கிறோம்.

முதல் மாணவருக்கு கொடுக்கும் கவனத்தை விட, அதிக கவனத்தை கல்வியில் கடைசி நிலையில் இருக்கும் மாணவர்களுக்கும் அளிக்கிறோம். இத்தகைய சீரிய முயற்சிகளால், அனைத்து பொதுத்தேர்விலும், மாநில அளவில் எங்களது மாணவர்கள் சாதனை புரிந்து வருகின்றனர். அனைத்து மாணவர்களுமே முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், பெற்றோர்கள் எங்களுக்கு தொடர்ந்து பலத்த ஆதரவு அளிப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது!

-வேலுசாமி, தலைவர், ஜெய்சாரதா பள்ளி, திருப்பூர்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us