‘சிறார்களுக்கு புதியவகை கதைசொல்வதே நோக்கம்‘ | Kalvimalar - News

‘சிறார்களுக்கு புதியவகை கதைசொல்வதே நோக்கம்‘நவம்பர் 16,2018,14:08 IST

எழுத்தின் அளவு :

‘சிறுவர் கதைப் புதையல்‘ மற்றும் ‘சிறுவர் பாட்டுப் புதையல்‘ என்ற இரண்டு சிறார் இலக்கியப் புத்தகங்கள், சென்னையைச் சேர்ந்த ரிலீப் வுண்டேஷன் நிறுவனத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அப்புத்தகங்கள் குறித்தும், அவற்றை வெளியிட்டதற்கான நோக்கம் குறித்தும், அப்புத்தகங்களின் ஆசிரியரும் ரிலீப் பவுண்டேஷன் நிறுவனத்தைச் சேர்ந்தவருமான சொ.பிரசன்ன பாரதி, நமது கல்விமலர் இணையதளத்திற்கு அளித்த நேர்காணல்...

உங்கள் நிறுவனம், இந்த இலக்கிய முயற்சியில் ஈடுபட காரணம் என்ன?
பதில்: இது திடீர் முயற்சியல்ல; ஒருவகையில் தாமதமான முயற்சி..! இந்த எண்ணம் எங்கள் நிறுவனத்திற்கு எப்போதிருந்தோ உண்டு. ஆனால், அதை செயல்படுத்துவதற்கான வாய்ப்பு இப்போதுதான் கிடைத்திருக்கிறது. பொதுவானதொரு மொழி வழக்கில் சொல்ல வேண்டுமென்றால், ’இப்போதுதான் காலம் கனிந்துள்ளது..!’

‘சிறுவர் கதைப் புதையல்‘ என்கிற உங்களின் கதைப் புத்தகம் பற்றி...?
பதில்: பெரியவர்களுக்கான கதைகள் என்று எடுத்துக்கொண்டால், அதில் ஏராளமான புதுவித முயற்சிகள் எப்போதிருந்தோ எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, அதுகுறித்து எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால், சிறார் அல்லது குழந்தைகளுக்கான கதைகள் என்று எடுத்துக்கொண்டால், அவைகளில் சில குறிப்பிட்ட சீரான அம்சங்கள் எப்போதும் இடம்பெற்றிருப்பதை நாம் காணலாம்.

அவற்றில் முதன்மையானது, ’இயற்கைக்கு மாறான அம்சங்கள்’. அதாவது, விலங்குகள், பறவைகள் மற்றும் இன்னபிற அம்சங்கள் பேசுவது. இன்னொன்று, ஏதேனும் ஒரு நீதிநெறியை மிகவும் வெளிப்படையான முறையில் வலிந்து சொல்வது. இவைதவிர, ஒவ்வொரு கதையின் முடிவாக, ஏதேனும் ஒரு அம்சம் அழுத்தமாக சொல்லப்பட்டு, அதன் அடிப்படையில் சிறார்களுக்கோ அல்லது குழந்தைகளுக்கோ நேரடியாக போதனை செய்வதுபோல் இருக்கும். கதைகளுக்கான கருக்கள், நடைமுறை வாழ்வோடு ஒட்டியோ ஒட்டாமலோ இருக்கும். மேலும், முல்லா கதைகள் போன்ற பல வேற்றுமொழி கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டும் சிறார் கதைகளாக உலா வருகின்றன.

எங்கள் கதைகளைப் பொறுத்தவரை, அவற்றில்,
* இயற்கைக்கு மாறான அம்சங்கள் என்று எந்தவொரு துளி அடையாளத்தையும் காண முடியாது. எங்கள் கதைகள் அத்தகைய அம்சத்திற்கு நேர்விரோதமானவை.

* ‘சிறுவர் கதைப் புதையல்‘ புத்தகத்தின் கதைகளில் நீதிநெறி சார்ந்த எந்தக் கருத்தும் வலிந்து சொல்லப்பட்டிருக்காது. அவை, கதையின் போக்கோடு உள்ளார்ந்த வகையில் பொதிந்திருக்கும். படிப்பவர்கள் அவற்றை உணர்ந்துகொள்ள முடியும்.

* கதையின் முடிவு இதுதான் என்று வெளிப்படையாக சொல்லப்பட்டு, அதன்மூலம் சிறார்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருக்காது. பெரும்பாலான கதைகளின் முடிவுகளை படிப்பவர்களே ஊகிக்கும் வகையில் அமையப் பெற்றிருக்கும். பல கதைகளில் படிப்பவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பல முடிவுகளை ஊகிக்கலாம்! அதற்கான வாய்ப்புகள் அங்கே இருக்கும்.

* இக்கதைகளைப் படிக்கும் சிறார்கள், பல புதிய விஷயங்களை, பெரியவர்களிடம் ஆர்வமாக கேட்டுத் தெரிந்துகொள்ளும் வகையிலும், அதற்காக ஊக்கப்படுத்தும் வகையிலும் கதைகள் இருக்கும்.

* கதைகளின் ஓட்டங்கள் அனைத்தும் சிறார்களின் மனப்போக்கிலேயே இருக்கும்.

* குடும்பம்தான் ஒரு குழந்தையின் முதல் பள்ளிக்கூடம் மற்றும் அங்கிருந்துதான் குழந்தைகள் ஏராளமான உலகியல் மற்றும் வாழ்வியல் அறிவையும் அம்சங்களையும் பெற முடியும் என்ற கருத்தின் அடிப்படையில், பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் இதரப் பெரியவர்கள்தான், இந்தக் கதைகளில் சிறார்களின் தேடல்களுக்கான விடைகளை அளிப்பவர்களாக இருப்பார்கள்..! பள்ளிக்கூடம் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்காது.

* இந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற மொத்தம் 30 கதைகளும் மாண்டிசோரி கல்வி தத்துவத்தின் தாக்கத்தில் எழுதப்பட்டவை. மேற்கண்ட பலவிதமான அம்சங்களின் அடிப்படையிலேயே, எங்களின் முயற்சி, ஒரு புதிய வகையைச் சேர்ந்தது என்று கூறிவருகிறோம்.

குழந்தைகள் அல்லது சிறார் கதைகளைப் பொறுத்தவரை, நீதிநெறிதான் பிரதானமானது. அப்படியிருக்கையில், அவற்றை வெளிப்படையாக சொல்வதில் என்ன தவறு?
பதில்: நீதிநெறி என்பது மிக முக்கிய அம்சம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், கதையின் பிரதான அம்சமே அதன் அடிப்படையில்தான் இருக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. மனித வாழ்க்கை என்பது பலவிதமான பரிமாணங்கள் மற்றும் பரிணாமங்களைக் கொண்டது. பெரியவர்களின் கதைகளில் என்னென்ன அம்சங்கள் இருக்கின்றனவோ, அவற்றையே வருங்காலப் பெரியவர்களான சிறார்களின் கதைகளிலும் கொண்டுவர கட்டாயம் முயற்சிக்கலாம்.

பெரியவர்களின் சிந்தனை ஓட்டத்தோடு ஒப்பிடுகையில், சிறார்களுடையது எந்தவகையிலும் சளைத்ததல்ல மற்றும் ஒருவகையில் மேம்பட்டதும்கூட..! அந்தவகையில், உள்ளார்ந்து பொதிந்திருக்கும் அம்சங்களைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் சிறார்களுக்கு நிச்சயம் உண்டு! அதில் நமக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். அவர்களுக்கான கதைகளின் மூலம் அழகியல் அம்சங்களை அறிமுகப்படுத்துவதோடு, அவர்களுக்கான சிலபல சவாலான விஷயங்களும் அதில் இடம்பெற்றிருக்க வேண்டும். கதைகளுக்கான கருக்கள், அவர்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளோடு நெருங்கிய தொடர்புகொண்டிருந்தால், அவர்களின் நடைமுறை சார்ந்த விழிப்புணர்வு மேம்படுவதோடு, கதை சொல்லும் திறனை எளிதாக வளர்த்துக் கொள்ளவும் முடியும்.

உங்களின் பாடல் புத்தகத்தில் என்ன வகையான புதிய அம்சங்கள் உள்ளன?
பதில்: கதைப் புத்தகத்தைப்போல், ‘சிறுவர் பாட்டுப் புதையல்‘ என்ற இந்தப் பாடல் புத்தகத்திற்கு பல்வேறான நோக்கங்கள் இருக்கவில்லை. ஆனால், இனிய மற்றும் எளிமையான அடுக்குமொழி தமிழில், இலகுவாக இசையமைத்துப் பாடும் வகையில் இருக்க வேண்டும் மற்றும் நல்லவிதமான தலைப்புகளும் இருக்க வேண்டுமென்பதுவே இலக்காக இருந்தது.

அந்தவகையில், மொத்தம் 40 பாடல்கள் எழுதப்பட்டு, இந்த உலகின் இயற்கை அம்சங்களைப் பாதுகாத்தல், இயற்கைவளச் சுரண்டல்களின் ஆபத்துகள், சில வாழ்வியல் தத்துவங்கள் மற்றும் சிறார்களை ஊக்குவிக்கும் வகையிலான கருத்துகள் போன்றவை இடம்பெறச் செய்யப்பட்டன. பாடல்கள் அனைத்துமே முற்றிலும் அடுக்குமொழியில் அமைந்திருப்பது ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் எனக் கருதுகிறோம். பரவலான மக்களிடமிருந்து இப்பாடல் புத்தகம் குறித்து பல நல்லக் கருத்துக்களைப் பெற்று வருகிறோம்.

சிறார்களுக்கான புதியவகை கதைசொல்லும் கலாச்சாரத்தை இந்த சமூகத்தில் உருவாக்குவதே நோக்கம் என்கிறீர்களே..! இத்தகைய ஒரு கருத்துப் போக்கை எந்த அடிப்படையில் முன்னெடுக்கிறீர்கள்..!
பதில்:  சமூகத்தின் போக்கு என்பதே புதிதுபுதிதாக தோன்றும் பல்வேறான அம்சங்களை உள்வாங்கி, உருமாறிச் செல்வதுதானே..! குழந்தைகளின் சீர்மிகு முன்னேற்றம் மற்றும் முழு ஆளுமை மேம்பாடு என்ற நோக்கங்களை பிரதானமாக முன்வைத்து, கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டுவரும் நாங்கள், சிறார்களுக்கான இலக்கியம் என்ற ஒரு பிரிவில், ஒரு முன்முயற்சியை மேற்கொள்ள நினைத்தது இயல்பான போக்குதான்..!

ஏனெனில், மனித நாகரீகத்தில் இலக்கியம் என்பதன் தாக்கம் மிக மிக சக்தி வாய்ந்தது. கணக்கற்ற வரலாறுகளை இலக்கியங்கள்தான் மாற்றியமைத்துள்ளன. சிந்தனைகளின் நிலையானப் பதிவு இலக்கியங்களின் வழியாகத்தான் சாத்தியப்படும் என்பதால், எங்களின் முக்கிய முயற்சி அந்த வழியாகச் செல்கிறது. இந்த சமூகத்தில், சிறார்களுக்கான ஒரு புதியவகை கதை சொல்லும் கலாச்சாரத்தை உருவாக்குவதே எங்களுடைய பேராவல் மற்றும் பெருநோக்கம்..!

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us