பார் கவுன்சில் ஆப் இந்தியா | Kalvimalar - News

பார் கவுன்சில் ஆப் இந்தியாநவம்பர் 08,2018,13:18 IST

எழுத்தின் அளவு :

வழக்கறிஞர்களுக்கான நடத்தை விதிகளை அமைப்பது மற்றும் சட்டக் கல்வியை மேம்படுத்துவது போன்ற தேவைகளுக்காக இந்திய அரசால் நிறுவப்பட்டதே, இந்திய வழக்கறிஞர் கழகம் எனப்படும் ‘தி பார் கவுன்சில் ஆப் இந்தியா’!

வரலாறு:
இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட நிலையில் நாடு முழுவதிலும் உள்ள சட்ட படிப்பு தேர்வுகளின் தரத்தை உயர்த்தவும், வழக்கறிஞர்களுக்கான முறையான அங்கீகாரங்களை வழங்கவும் ஒரு தனி குழு அமைக்கப்பட வேண்டும் என்று முன் மொழியப்பட்டது.

அதைத்தொடர்ந்து, இந்திய சட்டத் துறை அமைச்சகத்தால் இந்த குழு அமையத் தேவையான நெறிமுறைகள் 1951ம் ஆண்டு வகுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திற்கென தனித்தனியே உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் அடங்கிய கமிட்டிகளை நிறுவி அவை அனைத்தையும் அனைத்திந்திய பார் கமிட்டியின் (ஆல் இந்தியா பார் கமிட்டி) கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

தொடர்ந்து, சட்ட ஆணைய பரிந்துரைகளின்படி, ‘வழக்கறிஞர் மசோதா’ இயற்றப்பட்டு, 1961ம் ஆண்டில் இந்திய வழக்கறிஞர் சட்டம் இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ‘பார் கவுன்சில் ஆப் இந்தியா’ எனும் அமைப்பு உதயமானது. இந்திய தலைமை சட்ட வழக்கறிஞர் (அட்டர்னி ஜென்ரல் ஆப் இந்தியா), இந்திய தலைமை சட்ட ஆலோசகர் (சொலிசிட்டர் ஜென்ரல் ஆப் இந்தியா) மற்றும் குழு உறுப்பினர்களால் தேர்வு தலைவர் தேர்வு செய்யப்படுகிறார். அவரது மேற்பார்வையின் கீழ் இந்த அமைப்பு நிர்வகிக்கப்படுகிறது.

குழுக்கள்:
வழக்கறிஞர்களின் தொழில் தர்மங்கள் மற்றும் நடத்தை விதிகள் ஆகியவற்றை நிர்ணயிப்பது, சட்ட கல்வியின் தரம் மற்றும் வழங்கப்படும் பட்டங்களை அங்கீகரிப்பது, பட்டம் பெற்றவர்கள் வழக்கறிஞர்களாக தங்களது பணியைத் தொடர தனி தகுதி தேர்வு நடத்தி சான்று வழங்குவது என பலதரப்பட்ட பணிகளுக்காக வெவ்வேறு குழுக்கள் பிரித்தமைக்கப்பட்டுள்ளன. அவை,

* சட்டக் கல்வி குழு (லீகல் எஜூகேஷன் கமிட்டி)
* ஒழுங்கு நடவடிக்கை குழு (டிசிப்ளினரி கமிட்டி)
* நிர்வாகக் குழு (எக்ஸீகியூடிவ் கமிட்டி)
* வழக்கறிஞர் நலக் குழு (அட்வகேட் வெல்பார் கமிட்டி)
* சட்ட உதவிக் குழு (லீகல் எய்ட் கமிட்டி)
* கட்டடக் குழு (பில்டிங் கமிட்டி)
* சட்ட விதிமுறைகள் குழு (ரூல்ஸ் கமிட்டி)
* சட்ட மேற்பார்வை குழு (ஓவர்சீ கமிட்டி)
* நிதி குழு (பினான்ஸ் கமிட்டி)
* அகில இந்திய வழக்கறிஞர் தேர்வு குழு (ஆல் இந்தியா பார் இக்சாமினேஷன் கமிட்டி)
பார் கவுன்சில் ஆப் இந்தியா

டிரக்ட்ரேட் ஆப் லீகல் எஜூகேஷன் (டி.எல்.இ.,)
இந்திய பார் கவுன்சிலால் உருவாக்கப்பட்ட சட்ட கல்வி இயக்குநரகம் எனப்படும் டி.எல்.இ., நாட்டின் ஒட்டுமொத்த சட்டக் கல்வி மேம்பட தேவையான பணிகளை மேற்கொள்கிறது.

கல்வி நிறுவனத்திற்கான அங்கீகாரம்: இந்தியாவில் சட்டப்படிப்பு வழங்கும் கல்வி நிறுவனங்கள், பார் கவுன்சிலிடமும் உரிய அனுமதி பெற வேண்டும். கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு, வழங்கும் பட்டப்படிப்புகளின் தரம், பேராசிரியர்களின் அனுபவம் போன்றவை இதில் ஆராயப்படும். உரிய அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற மாணவர்களால் மட்டுமே இந்திய பார் கவுன்சிலில் உறுப்பினர் ஆக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் பட்டம் பெற்றவர்கள்: அயல் நாடுகளில் சட்டம் பயின்ற இந்திய குடியுரிமை கொண்ட மாணவர்கள், இந்தியாவில் வழக்கறிஞர் பணியை தொடர, அகில இந்திய பார் தேர்வு அல்லாது இதற்காகப் பிரத்யேகமாக நடத்தப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். குறிப்பாக, பார் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டுச் சட்ட கல்வி நிறுவனங்களில் படித்தவர்களுக்கு மட்டுமே இந்த தேர்வினை எழுத அனுமதி உள்ளது.

அகில இந்திய பார் தேர்வு:
சட்டத் துறையில் பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகள் வழக்கறிஞர்களாக தங்களது பணியைத் தொடர இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இந்த தேர்வில் வெற்றிபெற்று ‘சர்ட்டிபிகேட் ஆப் பிராக்டீஸ்’ என்கிய பார் கவுன்சில் சான்றிதழை பெற்றிருக்க வேண்டியது அவசியம். இந்த தேர்வில் வெற்றி, தோல்வி என்பதைத் தவிர மதிப்பெண், சதவீதம், தரவரிசைப் பட்டியல் ஆகிய எதுவும் கிடையாது. தேர்ச்சி பெறும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் இத்தேர்வை எழுதலாம்.

‘மல்டிப்பில் சாய்ஸ்’ கேள்விகளை மட்டும் கொண்டுள்ள இந்த தேர்வு இந்தியாவின் 11 மொழிகளில் நடத்தப்படுகிறது. ‘ஓப்பன் புக் எக்சாம்’ எனப்படும் புத்தகம் அல்லது குறிப்புகளை பார்த்து எழுதும் திறந்த புத்தக தேர்வு இது. ஆகையால் சட்டத் தொகுப்புகளை மட்டும் மனப்பாடம் செய்து எழுதாமல் சட்டத்தை ஆழமாகப் புரிந்து மதிப்பிட்டு எழுதுபவர்களால் மட்டுமே இந்த தேர்வில் தேர்ச்சி பெற முடியும். அரசியலமைப்பு, தொழில் தர்மம், இந்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைப்புகள் உட்பட மொத்தம் ஆறு தாள்கள் உள்ளன.

விபரங்களுக்கு: www.barcouncilofindia.org , www.allindiabarexamination.com

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us