எதற்காக ஏ.ஐ.சி.டி.இ.,? | Kalvimalar - News

எதற்காக ஏ.ஐ.சி.டி.இ.,?அக்டோபர் 26,2018,12:19 IST

எழுத்தின் அளவு :

இந்திய மாணவர்களின் தொழில்நுட்பக் கல்வித் திறனை, சர்வதேச அளவில் மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை வேகப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம்!

அறிமுகம்: 19ம் நூற்றாண்டின் மத்தியில் இருந்தே நமது நாட்டில் முறையான தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் தொடங்கப்பட்டுவிட்டன. 1902ம் ஆண்டு இந்திய பல்கலைக்கழக ஆணையம் துவக்கப்பட்டது. அதன்பிறகு, 1904ம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்திய கல்வி கொள்கை தீர்மானம், 1913ம் ஆண்டில் வெளியிடப்பட்ட கவர்னர் ஜெனரல் திட்ட அறிக்கை ஆகியவற்றில், தொழில்நுட்ப கல்வியின் முக்கியத்துவம் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட வேண்டியதன் அவசியம் விளக்கப்பட்டது.

அவற்றின்படி, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்சி.,) பெங்களூருவிலும், இன்ஸ்டிடியூட் பார் சுகர், டெக்ஸ்டைல் அண்ட் லெதர் டெக்னாலஜி கான்பூரிலும், நேஷனல் கவுன்சில் ஆப் எஜூகேஷன் (என்.சி.இ.,) வங்காளத்திலும் மற்றும் பல தொழில்துறை பள்ளிகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் துவக்கப்பட்டன.

தொழில்நுட்ப கல்வி குழுவின் சார்ஜெண்ட் அறிக்கையின்படி, இந்திய அரசால் ‘ஆல் இந்தியன் கவுன்சில் பார் டெக்னிக்கல் எஜூகேஷன்’ (ஏ.ஐ.சி.டி.இ.,) அமைப்பானது 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பிறகு, ‘ஏ.ஐ.சி.டி.இ., சட்டம், 1987ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது.

பணியும், பொறுப்பும்: இந்தியாவில் தொழில்நுட்ப கல்வியானது இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி, டிப்ளமா, முதுநிலை டிப்ளமா என பல நிலைகளில் பல்வேறு துறைகளில் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு இந்த பட்டங்களை வழங்குவதற்கு தகுதிமிக்க கல்வி நிறுவனங்களை மதிப்பிட்டு அதற்குத் தேவையான அங்கீகாரத்தை அளிப்பதே ஏ.ஐ.சி.டி.இ.,யின் முக்கிய பணி.

பொறியியல், தொழில்நுட்பம், கட்டடக்கலை, நகர திட்டமிடல், மேலாண்மை, பார்மசி, அப்ளைட் ஆர்ட்ஸ், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் ஆகிய துறைகளின் படிப்புகள் ஏ.ஐ.சி.டி.இ.,யின் கண்காணிப்பில் உள்ளன.

மாணவர்கள் கவனிக்க...: இந்தியாவில் மேற்கண்ட எந்த ஒரு தொழில்நுட்ப படிப்பையும் படிக்க முதலில் அக்கல்வி நிறுவனம் ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்றுள்ளதா? என்பதை உறுதி செய்யவேண்டியது அவசியம். அங்கீகாரம் இல்லாத படிப்புகளை படிக்கும் மாணவர்கள், பின்நாளில் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்!

ஏ.ஐ.சி.டி.இ.,யின் முக்கிய பிரிவுகள்:

· அங்கீகாரம் பிரிவு (அப்ரூவல்)
· நிர்வாகப் பிரிவு (அட்மினிஸ்ட்ரேஷன்)
· நிதி கட்டுப்பாட்டு பிரிவு (பினான்ஸ்)
· கொள்கை மற்றும் கல்வி திட்டமிடல் பிரிவு (பாலிசி அண்ட் அகாடமிக் பிளானிங்)
· ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பேராசிரியர் வளர்ச்சி பிரிவு (ஆர்.ஐ.எப்.டி.,)

மேலும் மேலாண்மை மற்றும் மருந்தியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்காக சிமேட், ஜி.பி.ஏ.டி., ஆகிய தகுதி தேர்வுகளையும் ஏ.ஐ.சி.டி.இ., நடத்தி வருகிறது.

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி: www.aicte-india.org

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us