உளவுத் துறை படிப்பு | Kalvimalar - News

உளவுத் துறை படிப்புஅக்டோபர் 13,2018,14:38 IST

எழுத்தின் அளவு :

இந்த 21ம் நூற்றாண்டில் வர்த்தக போர், அரசியல் ராஜதந்திரங்களை சமாளிப்பது என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் மிகப்பெரிய சவாலாக உள்ள நிலையில், நாட்டு மக்களின் பாதுகாப்பு என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.  

பிறநாட்டு ராணுவப் படைகள் மட்டுமின்றி உள்நாட்டுத் தீவிரவாத இயக்கங்களையும் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமான ஒன்றாக உள்ளது.இவற்றை சமாளிப்பதோடு மட்டுமின்றி, எதிர் காலங்களில் வரவிருக்கும் ஆபத்தினை முன்கூட்டியே அறிந்து, அதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதும் அவசியமாகிறது. அந்த வகையில் உளவுத் துறை என்பது நாட்டின் பாதுகாப்பு அம்சங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.  

இத்துறையில், திறன் மிக்கவர்களை உருவாக்குவதற்காக பிரத்யேக படிப்புகளை வடிவமைத்துள்ளது, இங்கிலாந்தின் மிகப்பழமையான கல்வி நிறுவனங்களுள் ஒன்றான பக்கிங்காம் பல்கலைக்கழகம்!

பிரதான படிப்பு:
பாதுகாப்பு, உளவு மற்றும் இணைய அச்சுறுத்தல் ஆகியவை சார்ந்த பாடங்களைக் கொண்டு, பி.ஏ., இன் செக்கியூரிட்டி, இண்டலிஜன்ஸ் அண்ட் சைபர் என்ற இரண்டு ஆண்டுகள் கொண்ட முழுநேர இளநிலை பட்டப்படிப்புடன் கூடுதலாக கள பயிற்சியையும் இணைத்து வழங்குகிறது, ‘தி யூனிவர்சிட்டி ஆப் பக்கிங்காம்’. இந்த படிப்பில் நவீன பயங்கரவாத சவால்கள், பனிப்போர்கள் மற்றும் இணைய வழி அச்சுறுத்தல்கள், சவால்கள் மற்றும் இவற்றிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை கற்கலாம். அரசியல் மற்றும் ராஜதந்திரம் ஆகிய இரண்டு விருப்பப் பிரிவுகளுடன் இந்த பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதர படிப்புகள்:
எம்.ஏ., - லா என்போர்ஸ்மென்ட், செக்யூரிட்டி அண்ட் இன்டலிஜென்ஸ் ஸ்டடீஸ் - 1 ஆண்டு
எம்.ஏ., - செக்யூரிட்டி அண்ட் இன்டலிஜென்ஸ் ஸ்டடீஸ் - 1 ஆண்டு
எம்.ஏ., - செக்யூரிட்டி, இன்டலிஜென்ஸ் அண்ட் டிப்ளொமசி - 1 ஆண்டு
போஸ்ட் கிராஜுவெட் சர்டிபிகேட் இன் லா என்போர்ஸ்மென்ட், செக்யூரிட்டி அண்ட் இன்டலிஜென்ஸ் ஸ்டடீஸ் - 9 மாதங்கள்
போஸ்ட் கிராஜுவெட் சர்டிபிகேட் இன் லா என்போர்ஸ்மென்ட், செக்யூரிட்டி அண்ட் இன்டலிஜென்ஸ் - 6 மாதங்கள்

தேவைப்படும் திறன்கள் மற்றும் வாய்ப்புகள்:
நாட்டின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் ரகசிய தகவல்களை கண்டறிந்து, அதை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதே ஒரு உளவுத்துறை அதிகாரியின் பிரதான கடமையாக இருப்பதால், திடமான மனநிலை மற்றும் உடல்நிலை, சூழ்நிலைகளை புரிந்து செயலாற்றுதல், தொழில்நுட்ப அறிவு உட்பட பல்வேறு திறன்கள் தேவைப்படுகின்றன.

உளவுத்துறையில் பணியாற்றுவது என்பதே மிகவும் சுவாரஸ்மானது. அதேநேரம், அதீத பொறுப்புமிக்க மற்றும் மதிப்புமிக்க பணியாகவும் அநேக மக்களால் பாராட்டப்படுகிறது. அந்தவகையில், பாதுகாப்பு, உளவுத்துறை, அயல்நாட்டு நிகழ்வுகள் மற்றும் வணிக நிர்வாகத்தில் பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்கு இந்த படிப்பு ஒரு தனித்துவமான அடித்தளமாக அமையும்.

வெளிநாடுகளில் ரா, எப்.பி.ஐ., போன்று இந்தியாவில் ஐ.பி.,, சி.பி.ஐ., போன்ற அமைப்புகளில் அரசு பணி வாய்ப்பை பெற உதவியாக அமையும். தனியார் பாதுகாப்பு நிறுவனங்களிலும் வாய்ப்புகள் உள்ளன. இத்துறையில் ஆய்வு மேற்கொள்பவர்களுக்கு அநேக வாய்ப்புகள் உள்ளன.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us