அறிவோம் பல்கலைக்கழக மானியக் குழு | Kalvimalar - News

அறிவோம் பல்கலைக்கழக மானியக் குழுஅக்டோபர் 09,2018,17:43 IST

எழுத்தின் அளவு :

இந்தியாவில் உயர்கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைத்து அரசின் கட்டுப்பாட்டின் கீழ் அவற்றுக்கான நிதி உதவிகள் வழங்குவது மற்றும் தரக்கட்டுப்பாடு விதிப்பது ஆகிய காரணங்களுக்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டதே ‘பல்கலைக்கழக மானியக் குழு’ (யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன்).

சுதந்திரத்திற்கு முன்பு முதலே நாலந்தா, தாக்சிலா மற்றும் விக்ரம்சிலா போன்ற தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் இருந்ததால் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் தங்களது உயர்கல்விக்காக இந்தியா வந்தனர். அன்று முதல் இன்று வரை பல துறை சார்ந்த பல்கலைக்கழகங்களின் வாயிலாக தரமான உயர்கல்வியை வழங்கும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. பல்கலைக்கழகங்களுக்கு மத்தியில் ஒற்றுமையை உண்டாக்கவும் கல்வி, கலாச்சாரம், விளையாட்டு ஆகிய துறைகளை ஒழுங்குமுறை படுத்துவதற்காகவும் முதன்முதலில் 1925ம் ஆண்டு இன்டர்-யூனிவர்சிட்டி போர்ட் என்கிற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது, பின்பு இதுவே அசோசியேஷன் ஆப் இந்தியன் யூனிவர்சிட்டீஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கல்விக்கான மத்திய ஆலோசனை குழு, இந்தியா கல்வி வளர்ச்சி குறித்து ‘சார்ஜியண்ட் அறிக்கை’ ஒன்றை 1944ம் ஆண்டு சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் பரிந்துரையின்படி அலிகார், பனாரஸ் மற்றும் டெல்லி ஆகிய நாட்டின் மூன்று முக்கிய பல்கலைக்கழகங்களை மேற்பார்வையிடப் பல்கலைக்கழக மானியக் குழு 1945ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதை தொடர்ந்து நாட்டில் இருந்து அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இந்த குழுவின் மேற்பார்வைக்குக் கீழ் 1947ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன் இதற்குத் தலைவராக 1948ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பின்பு  இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் வடிவில் சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு முறையான மானியக் குழுவை தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் அமைக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1952ம் ஆண்டு முதல் அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கான நிதி உதவிகளை இனி மானிய குழு மூலம் தான் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்தது. அப்போது மத்திய கல்வி, இயற்கை வளங்கள் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் துறை அமைச்சராக இருந்த அபுல் கலாம் அசாத் அவர்களால் டிசம்பர் 28, 1953 அன்று முறையாக இந்த பல்கலைக்கழக மானியக் குழு துவங்கப்பட்டது. 1956ம் ஆண்டு பாராளுமன்றத்தில் பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் இயற்றப்பட்டு முறைப்படுத்தப்பட்டது.

நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களை முறைப்படுத்தப் பகுதி வாரியாக மொத்தம் ஆறு நிர்வாக செயலகங்கள் புனே, ஹைதராபாத், கொல்கத்தா, போபால், கவுகாத்தி மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டன. யு.ஜி.சி.,யின் தலைமை அலுவலகம் புதுடில்லியில் இயங்கி வருகிறது. சமீபத்தில் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும், பல்கலைக்கழக மானியக் குழுவை மாற்றி அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

உயர் கல்வித் துறைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க யூ.ஜி.சி.,யை நீக்கிவிட்டு தேசிய உயர் கல்வி ஆணையம் (ஹையர் எஜூகேஷன் கமிஷன் ஆப் இந்தியா) என்கிற அமைப்பு நிறுவப்படும் என்றும், இதனால் மாணவர்களின் கல்வித்திறன் அதிகரிக்கும் எனவும் மனிதவள மேம்பாட்டுத்துறையால் குறிப்பிடப்பட்டது. இதற்கு நாடு முழுவதிலும் இருந்து கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் இருந்து வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us