தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்அக்டோபர் 01,2018,16:13 IST

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் ‘எய்ம்ஸ்’ கல்வி நிறுவனத்திற்கு அடுத்தபடியாக, நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய மருத்துவ கல்வி நிறுவனமாக கருதப்படும் தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், 1988ம் ஆண்டு தொடங்கப்பட்டது!

சென்னை கிண்டியில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகம், தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை மெய்ப்பிப்பதற்காக உருவாக்கப்பட்டது. தமிழக அரசின் கீழ் இயங்கும் இப்பல்கலைக்கழகத்தில், மருத்துவம், பல் மருத்துவம், ஹோமியோபதி மற்றும் இதர மருத்துவ துணைப் படிப்புகளான பார்மசி, நர்சிங், பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி என ஏராளமான படிப்புகள் வழங்கப்படுகின்றன.

பட்டப்படிப்புகள்: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., எம்.டி.எஸ்., எம்.டி., எம்.எஸ்., பி.எஸ்சி., எம்.எஸ்சி., பார்ம் டி., எம்.பார்ம்., பிஎச்.டி., மற்றும் போஸ்ட் டாக்டோரல் படிப்புகள்.

முக்கிய பிரிவுகள்:
சித்தா மெடிசன் அண்ட் சர்ஜரி, அயூர்வேதிக் மெடிசன் அண்ட் சர்ஜரி, யுனானி மெடிசன் அண்ட் சர்ஜரி, ஹோமியோபதி மெடிசன் அண்ட் சர்ஜரி, நேச்சுரோபதி அண்ட் யோகிக் சயின்ஸ், அனஸ்தீசியா, ரேடியாலஜி, பீடியாட்ரிக்ஸ், நியூராலஜி, கார்டியாலஜி, ஜெனரல் சர்ஜரி, ஆப்தமாலஜி, ஆர்தோபடிக்ஸ், நியூரோ சர்ஜரி, பிளாஸ்டிக் சர்ஜரி, பிடியாட்ரிக் சர்ஜரி, யூராலஜி, சர்ஜிக்கல் ஆன்காலஜி, பயோமெட்ரிக்ஸ், ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட், ஹாஸ்பிடல் அட்மினிஸ்ட்ரேசன், பார்மசி மற்றும் நர்சிங்.

தகுதிகள்: பிளஸ் 2 முடித்த மாணவர்கள் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கும், நான்கு ஆண்டுகள் கொண்ட பி.எஸ்சி., படிப்புகளுக்கும், இரண்டரை ஆண்டுகள் கொண்ட டிப்ளமா படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். மேலும், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவ துறைகளில் சேர்க்கை பெற, ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அவசியம். ‘நீட்’ மதிப்பெண் அடிப்படையிலேயே கலந்தாய்வின் மூலம் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்த ஆண்டு முதல் பரவு நோயியல் பிரிவில் புதிதாக சேர்க்கப்பட்ட சுகாதார மேம்பாடு மற்றும் கல்வி, பொது சுகாதார இதழியல் உட்பட இரண்டு ஆண்டுகள் கொண்ட பல்வேறு முதுநிலை படிப்புகளுக்கும் துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்வி நிறுவனங்கள் இப்பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. எனினும், இந்த கல்வி நிறுவனத்தில் பொது மருத்துவ படிப்புகள் தவிர, 40க்கும் அதிகமான துணை மருத்துவப் படிப்புகளும், டிப்ளமா படிப்புகளும் வழங்கப்படுவது குறித்த சரியான விழிப்புணர்வு தமிழக மாணவர்களிடம் இல்லை. ஆதலால், இந்த படிப்புகளுக்கான ஆண்டு கல்வி கட்டணம் குறைவு என்ற போதிலும், கடந்த சில ஆண்டுகளாக அதிகமான இடங்கள் காலியாக இருந்து வருகின்றன. பொதுவாக, எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

விபரங்களுக்கு: www.tnmgrmu.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us