இந்திய மாணவர்களை வரவேற்கும் பிரிட்டன்! | Kalvimalar - News

இந்திய மாணவர்களை வரவேற்கும் பிரிட்டன்!செப்டம்பர் 26,2018,12:40 IST

எழுத்தின் அளவு :

தங்கள் நாட்டு இளைஞர்களுக்கு இணையாக, உயர்கல்வி வாய்ப்புகளையும், பணி வாய்ப்புகளையும் இந்திய மாணவர்களுக்கு அள்ளித் தந்த நாடு பிரிட்டன்!

சர்வதேச மாணவர்களை ஈர்ப்பதற்காக, ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும், உதவித்தொகை திட்டங்களை வழங்குவது, துறை சார்ந்து பல்வேறு விதமான புதிய பாடப்பிரிவுகளை அளிப்பது மற்றும் தனித்துவமான சில படிப்புகளை அறிமுகப்படுத்துவது என பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றன. அவ்வாறு, கேட்ஸ்-கேம்பிரிட்ஜ் ஸ்காலர்ஷிப், சேவெனிங் ஸ்காலர்ஷிப், காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் அண்ட் பெல்லோஷிப், சார்ல்ஸ் வாலேஸ் இந்தியா டிரஸ்ட் ஸ்காலர்ஷிப், ஹார்ன்பை ஸ்காலர்ஷிப் என இந்திய மாணவர்களுக்கு பிரத்யேக உதவித்தொகைகளை, பிரிட்டன் அரசாங்கம் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.

மேலும், உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களாகக் கருதப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு சிறப்புமிக்க பல்கலைக்கழகங்களை பெற்றுள்ள பிரிட்டனில், மருத்துவம், பொறியியல், சட்டம் மற்றும் வணிகவியல் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு தனிச் சிறப்புண்டு. இந்தியா மட்டுமின்றி ஆசியாவில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது உயர்கல்விக்காக விரும்பித் தேர்வு செய்யும் நாடாகவும் பிரிட்டன் திகழ்கிறது. ஆனால், சமீபகாலமாக அங்கு உயர்கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சரிவடைந்து வருவதை ஆய்வறிக்கைகள் உணர்த்துகின்றன!

மவுசு குறைகிறதா?

கடந்த சில ஆண்டுகளின் மாணவர் சேர்க்கைகளை ஒப்பீட்டு பார்க்கையில் ஆசியாவில் இருந்து பிரிட்டனுக்கு, உயர்கல்விக்காக செல்லும் சீனா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் இலங்கை மாணவர்களின் எண்ணிக்கையில் பெரிதும் மாற்றம் இல்லை என்றாலும், இந்திய மாணவர்களின் சேர்க்கை விகிதத்தில் மட்டும் மிகப்பெரிய சரிவு உள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

2010-11 ஆண்டுகளில் 24 ஆயிரமாக இருந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2016-17 கல்வி ஆண்டில் 10 ஆயிரமாகக் குறைந்துள்ளது. அதாவது, ஆண்டுக்கு 11 சதவீதம் குறைந்து, கடந்த 7 ஆண்டுகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது. இதற்கான காரணங்களை கண்டறிய பிரிட்டன் அரசின், ’மைக்ரேஷன் அட்வைசரி கமிட்டி’ (மாக்) முயன்று வருகிறது. இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விசா நடைமுறைகளில் ஏதேனும் மாற்றம் தேவை என்றாலும் அதை செய்ய அந்நாட்டு அரசாங்கம் தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளை போன்று மாணவர்கள் குடியேற்ற கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதே இந்த பிரச்சனைக்கான தீர்வாகவும் கருதப்படுகிறது. ஐரோப்ப நாடுகளிலேயே கல்வி தரத்தில் மிகவும் சிறந்து விளங்கும் பிரிட்டன், அங்கு உயர்கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்புவிடுத்துள்ளது.

உதவித்தொகை மற்றும் மாணவர் சேர்க்கை போன்ற விபரங்களைப் பெற www.britishcouncil.in என்கிற வலைத்தளத்தை பார்க்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us