ஆக்குபேஷனல் இங்கிலிஷ் டெஸ்ட் | Kalvimalar - News

ஆக்குபேஷனல் இங்கிலிஷ் டெஸ்ட்செப்டம்பர் 12,2018,14:00 IST

எழுத்தின் அளவு :

வெளிநாடுகளில் மருத்துவ துறை சார்ந்த பணிகளில் சேர விரும்புபவர்களின் ஆங்கில மொழித் திறனை சோதிப்பதற்காகப் பிரத்யேகமாக நடத்தப்படும் தேர்வு, ஓ.இ.டி., எனும் ‘ஆக்குபேஷனல் இங்கிலிஷ் டெஸ்ட்’!

ஓ.இ.டி.,
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான கேம்ப்ரிட்ஜ் அசெஸ்மெண்ட் இங்கிலிஷ் மற்றும் பாக்ஸ் ஹில் இன்ஸ்டிடியூட் இணைந்து, ஓ.இ.டி., தேர்வை நடத்துகின்றன. அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, துபாய், யு.கே., சிங்கப்பூர், நமீபியா மற்றும் யுக்ரெய்ன் ஆகிய நாடுகளில் மருத்துவ துறையில் வேலை வாய்ப்பு பெற இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

டென்டிஸ்ட்ரி, மெடிசன், நர்சிங், டயடெட்டிக்ஸ், ஆக்குபேஷனல் தெரபி, ஆப்தோமெட்ரி, பார்மசி, பிசியோதெரபி, பொடியாட்ரி(ணீணிஞீடிச்tணூதூ), ஸ்பீச் தெரபி, வெர்ட்னரி சயின்ஸ் மற்றும் ரேடியோகிராபி உள்ளிட்ட 12 மருத்துவ பிரிவை சேர்ந்தோர் இந்த தேர்வை எழுதத் தகுதியானவர்கள்.

தேர்வு முறை:
வெளிநாட்டில் சென்று படிக்க அல்லது பணிபுரிய விரும்புவோர்க்கான ஆங்கில மொழித் திறன் சோதனை தேர்வுகள் பல உள்ளன. அவற்றில் பரிசோதிக்கப்படுவது போன்றே, ஓ.இ.டி., தேர்விலும் புரிந்துகொள்ளுதல், வாசித்தல், எழுதுதல் மற்றும் பேசுதல் ஆகிய நான்கு பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும்.

ஆனால், மருத்துவ துறை சார்ந்த தேர்வு என்பதால் அதற்கேற்றார் போல், இந்த தேர்வில் சில முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. உதாரணத்திற்கு எழுதும் திறனை சோதிக்க மற்ற தேர்வுகளில் பொதுவான ஒரு தலைப்பில் கட்டுரைகள் எழுதச் சொல்லப்படும். ஆனால், ஓ.இ.டி., தேர்வில் மருத்துவ பிரிவு சார்ந்த தலைப்பில் கட்டுரையோ அல்லது ‘கேஸ் ஸ்டடடியோ’ கேட்கப்படும். அதேபோல் பேசும் திறன் சோதனையில் விண்ணப்பதாரர்களுக்கு நோயாளிகளிடம் கலந்துரையாடுவதை போன்ற சூழல் கொடுக்கப்பட்டு சோதிக்கப் படுவர்.

முக்கியத்துவம்:
உலகம் முழுவதிலும் 40 நாடுகளில், ஆண்டின் அனைத்து மாதங்களிலும் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியாவில், மொத்தம் 12 இடங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைந்துள்ளன. தமிழகத்தை பொருத்தவரை, சென்னை மற்றும் கோவையில் இத்தேர்வை எழுதலாம். மருத்துவ துறையில் அயல்நாடுகளில் பணி வாய்ப்பினை பெற விரும்புபவர்கள், இந்த தேர்விற்கும் தங்களை தயார்ப்படுத்திக்கொள்வது சிறந்தது.

விபரங்களுக்கு: www.occupationalenglishtest.org

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us