‘பொறுப்புமிக்க பொறியாளர்களை உருவாக்குகிறோம்’ | Kalvimalar - News

‘பொறுப்புமிக்க பொறியாளர்களை உருவாக்குகிறோம்’ஆகஸ்ட் 16,2018,14:32 IST

எழுத்தின் அளவு :

பொதுவாக, தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பிற்கும், இளம் இன்ஜினியரிங் பட்டதாரிகளின் செயல்பாட்டிற்கும் இடையே சில இடைவெளி உள்ளது. அந்த இடைவெளியை சீர்படுத்தவே பல்வேறு சிறப்பு பயிற்சிகளை எங்களது மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம்!

கடந்த 1998 முதல் இயங்கிவரும் எங்கள் கல்லூரியில், கிராமப்புற மாணவர்களே அதிகளவில் படித்து வருகின்றனர். அதிலும், மேல்நிலைக் கல்வி வரை, தமிழ்வழியில் படித்தவர்கள் தான் அதிகம். அத்தகைய மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி மட்டுமின்றி, பர்சனாலிட்டி டெவலப்மெண்ட், ஆங்கில மொழி பயிற்சி உள்ளிட்ட பல திறன் வளர்ப்பு பயிற்சிகளை அளித்து, நாட்டின் சிறந்த தொழில்நிறுவனங்களில் வேலை பெறும் அளவிற்கு தகுதிபடைத்தவர்களாக உயர்த்துகிறோம்! இதுவே எங்கள் கல்வி நிறுவனத்தின் முக்கிய தனித்துவம் என்றும் சொல்லலாம்!

தொழில் நிறுவனங்களின் தேவை மாறிக்கொண்டே வருகிறது. அதற்கேட்ப பல்கலைக்கழக பாடத்திட்டம் மாறவில்லை. ஒவ்வொரு 5 ஆண்டிலும், தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் முற்றிலுமாக மாறிவிடுகிறது. ஆனால், அந்த 5 ஆண்டுகளில் இன்ஜினியரிங் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுவதில்லை. ஏ.ஐ.சி.டி.இ.,யும் இதை உணர்ந்து பாடத்திட்டத்தை அடிக்கடி மாற்றி அமைக்க உரிய முயற்சிகளை எடுத்துவருகிறது.

இன்ஜினியரிங் துறையில் வேலை வாய்ப்புகள் நிச்சயமாக உள்ளன. படித்துமுடிக்கும் தருணத்தில், வாய்ப்புகள் குறைவாக இருப்பதுபோன்று தோன்றலாம். கலை அறிவியல் மாணவர்களும் ஆரம்பத்தில் அத்தகைய சூழலையே உணர்கின்றனர். எனினும், அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க மாணவர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகளும், ஊதியமும் மற்ற துறைகளைவிட, இன்ஜினியரிங் துறையில் நிச்சயம் அதிகமாகவே கிடைக்கும்.

அதேவேளை, மாணவர்கள் வேலை வாய்ப்பை மட்டுமே எதிர்பார்த்திருக்காமல், ‘முதலாளி ஆக வேண்டும்’ என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வளர்ந்தால் தான் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். ஒவ்வொரு ஆண்டும், எங்களது கல்வி நிறுவனத்தில் படித்து பட்டம் பெற்ற மாணவர்களால், குறைந்தது 10 புதிய தொழில் நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

கிராமப்புற மாணவர்களை, வேலைக்கு தகுதியுள்ள இன்ஜினியர்களாகவும், தொழில்முனைவோராகவும் உருவாக்குவது மட்டுமின்றி, பொறுப்புமிக்க பொறியாளராக உருவாக்குவதும் எங்களது பிரதான நோக்கம். அந்தவகையில், சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் செயல்களில் ஈடுபட மாணவர்களை ஊக்குவிக்கிறோம். மரம் நடுதல், மரம் வளர்த்தல், நீர் நிலைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சமூக மற்றும் சுற்றுச்சூழல் பணிகளில் எங்கள் மாணவர்கள் அதிகளவில் ஈடுபட செய்கிறோம்.

இவைதவிர, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு என்னென்ன உயர்கல்வி வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்த விழிப்புணர்வையும் மாணவர்களுக்கு ஏற்படுத்திவருகிறோம். குறிப்பாக, இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கும், மருத்துவத்துறையில் ஏராளமான உயர்கல்வி வாய்ப்புகள் உள்ளன. இவை குறித்த தகவல்களை இன்றைய மாணவர்கள் அறியச்செய்கிறோம். இவ்வாறு, மாணவர்களது பார்வையையும், பாதையையும் விசாலமாக்குகிறோம்!

-ஏ.பிரகாஷ், இயக்குநர், மாதா பொறியியல் கல்லூரி, சென்னை.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us