‘வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட வேண்டும்’ | Kalvimalar - News

‘வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட வேண்டும்’ஆகஸ்ட் 10,2018,13:05 IST

எழுத்தின் அளவு :

கலை அறிவியல் படிப்புகளுக்கு என்றுமே மவுசு உண்டு என்ற போதிலும், சமீபகாலமாக, இன்ஜினியரிங் வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக, கலை அறிவியல் படிப்புகளுக்கு பெரும்பாலான மாணவர்கள் அதிக முக்கியத்துவம் அளித்துவருகின்றனர். இதனால், முன்பு ஒரு கல்லூரியில் ஒரு வகுப்பாக மட்டுமே இருந்த கலை படிப்பு, இன்று 5 வகுப்புகளாக உயர்ந்துள்ளன!

குறைவான செலவில் அதுவும் மூன்று ஆண்டு படிப்பில் ஒரு வேலை கிடைக்கிறது என்பது, இன்று பெரும்பாலான மாணவர்களை கலை அறிவியல் படிப்புகளை நோக்கி திருப்பிவிட்டுள்ளது. இன்ஜினியரிங் படிப்பு என்றாலே அதிகமாக செலவாகும் என்ற எண்ணமும் பெற்றோர் மத்தியில் நிலவுகிறது.

இந்நிலையில், ஓர் உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியதுள்ளது... அதாவது, பெரும்பாலும் முன்னணி ஐ.டி., நிறுவனங்கள் தான் அதிக ஊதியத்தை வழங்கி இன்ஜினியரிங் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கின்றன. இதர தொழில் நிறுவனங்கள், குறைவான ஊதியத்தையே, இன்ஜினியரிங் மாணவர்களுக்கு வழங்குவதால், பெரும்பாலான மாணவர்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இதனால், மெக்கானிக்கல், சிவில் படிப்புகளைவிட, கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எல்க்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், ஆகிய இன்ஜினியரிங் பிரிவுகளே மாணவர்களால் அதிகமாக தேர்வு செய்யப்படுகிறது.

10 ஆயிரம் ரூபாய் ஊதியம் தரும், தங்களது படிப்பு சாராத வேலையையும் கலை அறிவியல் மாணவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், பெரும்பாலான இன்ஜினியரிங் மாணவர்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. படிப்பிற்கு ஏற்ற வேலையும், ஊதியமும் வேண்டும் என்று எதிர்பாக்கின்றனர். சமீபகாலமாக, சுயநிதி இட ஒதுக்கீட்டு முறையில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு, அரசின் உதவித்தொகை சலுகை கிடைப்பதில்லை என்பதால், நிர்வாக முறையிலான ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறும் மாணவர்கள் எண்ணிக்கை, குறிப்பாக, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

மேலும், ஆன்லைன் கவுன்சிலிங் முறையை விட, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேரடியாக நடைபெறும் இன்ஜினியரிங் கவுன்சிலிங் முறையே சிறந்த ஒன்று, என்று நான் கருதுகிறேன். ஆப்லைன் கவுன்சிலிங் முறையில், காலியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப மாணவர்களால், அவர்களுக்கு பிடித்த இடங்களை  உடனுக்குடன் தேர்வு செய்ய முடிந்தது. ஆனால், ஆன்லைன் கவுன்சிலிங் முறையில் அதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்த குழப்பமும் மாணவர்கள் மத்தியில் அதிகம் உள்ளது. இன்ஜினியரிங் சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்பில் உள்ள இத்தகைய விஷயங்களை உணர்ந்து, அதற்கேட்ப உரிய நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்!

எனது கல்வி குழுமத்தைப் பொறுத்தவரை, 1984ல் முதன்முதலாக பள்ளியை துவக்கினேன்... அதன்பிறகு, கலை அறிவியல் கல்லூரியை ஆரம்பித்தேன். தொடர்ந்து, 2009-09ல் இன்ஜினியரிங் கல்லூரி என நியூ பிரின்ஸ் கல்வி குழுமம் பெருகி வளர்ந்துள்ளது! ‘நாக்’ அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. என்.பி.ஏ., சான்று பெற முழு முயற்சி எடுக்கப்பட்டுவருகிறது. சிறந்த வேலை வாய்ப்பை மாணவர்களுக்கு பெற்றுத்தர ஏதுவாக, பெரிய நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுவருகிறது. வேலை வாய்ப்பிற்கான சிறப்பு பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

-கே.லோகநாதன், தலைவர், நியூ பிரின்ஸ் கல்வி நிறுவனங்கள், சென்னை.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us