‘பொய்யான பேராசிரியர் பட்டியலை தரும் இன்ஜி., கல்லூரிகள்’! | Kalvimalar - News

‘பொய்யான பேராசிரியர் பட்டியலை தரும் இன்ஜி., கல்லூரிகள்’!ஆகஸ்ட் 03,2018,10:55 IST

எழுத்தின் அளவு :

இன்ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை மட்டும் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மாணவர் சேர்க்கைக்கான சதவீதம் பெருமளவில் சரிவை சந்தித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக பொறியியல் கல்லூரிகளின் இந்த நிலைக்குக் காரணம் என்ன என்பது குறித்த விளக்கத்தை அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் (ஏ.ஐ.சி.டி.இ.,) தலைவர் அனில் சஹஸ்ரபுதே விவரித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:
இந்திய முழுவதிலும் உள்ள பல தொழில்நுட்பம் சார்ந்த கல்வி நிறுவனங்களில் ஏ.ஐ.சி.டி.இ., திடீர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது, அந்த ஆய்வுகளில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் இன்றைய கல்வி நிறுவனங்களில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று பொய்யான பேராசிரியர் பெயர் பட்டியல். முன்னர் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றிருந்த விகிதத்தைத் தளர்த்தி தற்போது 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற அறிவிப்பை ஏ.ஐ.சி.டி.இ., வெளியிட்டது, ஆனால் பெரும்பான்மையான கல்வி நிறுவனங்கள் இதைச் சரியாக கடைப்பிடிப்பதில்லை.

30 அல்லது 50 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற விகிதத்தில் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதனை ஈடு செய்ய பேராசிரியர்கள் பெயர் பட்டியலில் அங்குப் பணிபுரியாத பலரின் பெயர்களை இணைத்து பொய்யான பட்டியலைச் சமர்ப்பிக்கிறார்கள். மேலும் தங்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ற ஊதியம் இல்லை என்னும் குற்றச்சாட்டும் பேராசிரியர்கள் மத்தியில் பரவலாக இருந்து வருகிறது. பொய்யான பெயர் பட்டியல் சமர்க்கப்படுவதை தடுக்க, பேராசிரியர்களின் ஆதார் எண் மற்றும் பான் எண் கேட்கப்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, பல பொறியியல் கல்லூரிகளில் கடந்த சில ஆண்டுகளாக வெறும் 10 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. குறைந்தது 50 முதல் 60 சதவீதம் மாணவர் சேர்க்கை இருந்தால் மட்டுமே கல்லூரி நிர்வாகத்தால் சிறப்பாக செயல்பட முடியும். இந்த குறைவான மாணவர் சேர்க்கை பிரச்னைகளால் கல்லூரியின் தரம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனாலேயே பல பொறியியல் கல்லூரிகளை மூட நாங்கள் நிர்ப்பந்திக்கிறோம்.

இதுபோன்ற குறைந்த மாணவர் சேர்க்கை இருக்கும் கல்வி நிறுவனங்கள், தங்களிடம் இருக்கும் நிர்வாகம் மற்றும் இட வசதிகளை வைத்து திறன் வளர்ச்சி, கலை பயன்பாடு மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளை வழங்க நாங்கள் அனுமதி அளித்துள்ளோம். தொழில்நுட்ப கல்லூரிகளை பொறுத்தவரை, அங்கீகார சான்றிதழ்களை வழங்கும் அதிகாரம் நேஷனல் போர்ட் ஆப் அக்ரீடேஷன் மற்றும் நேஷனல் அஸஸ்மெண்ட் அண்ட் அக்ரீடேஷன் கவுன்சிலிடம் மட்டுமே உள்ளது.

இந்தியாவைப் போன்ற மிகப்பெரிய நாட்டில் கல்வி நிறுவனங்களும் அதிக அளவில் இருக்கும் நிலையில் இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே அங்கீகார கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது ஒன்றும் தவறான யோசனை இல்லை. இதனால் ஊழல் குற்றச்சாட்டுகள் குறையக் கூடும்.

சமீபத்தில், மனிதவள துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, இந்த கல்வி ஆண்டு தொடங்கி அடுத்த நான்கு ஆண்டுக்குள் கல்வி நிறுவனங்கள் வழங்கும் மூன்றில் இரண்டு பங்கு பாடப்பிரிவுகள் அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும். தவறினால் கல்வி நிறுவனத்திற்கான அங்கீகாரத்தையே இழக்க நேரிடும். இது போன்ற நடைமுறை இந்திய கல்வி முறையில் இதுவே முதல் தடவை ஆகும். இவ்வாறு அவர் ஏ.ஐ.சி.டி.இ., நடைமுறைகள் குறித்தும், தமிழக பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் சரிவுக்கான காரணங்கள் குறித்தும் விவரித்துள்ளார்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us