‘வகுப்பறைகள் ஆய்வகங்களாக மாற்றப்பட வேண்டும்’ | Kalvimalar - News

‘வகுப்பறைகள் ஆய்வகங்களாக மாற்றப்பட வேண்டும்’ஜூலை 31,2018,13:13 IST

எழுத்தின் அளவு :

வகுப்பறையில் அமர்ந்து, ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை கவனிப்பதில், இன்றைய மாணவர்களுக்கு உண்மையாகவே ஆர்வம் இல்லை! மனப்பாடம் செய்து, அப்படியே தேர்வில் எழுதுவது என்பதும் நிச்சயம் வரவேற்கத்தக்கதல்ல!

இத்தகைய வகுப்பறை கற்றல் முறை மாணவர்களுக்கு, கற்றல் மீதான உற்சாகத்தை மேம்படுத்தாமல், சலிப்பையே ஏற்படுத்துகிறது. மாணவர்களுக்கு கற்றல் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் வகுப்பறையில், சில மாற்றங்களை புகுத்துவது, இன்றைய காலகட்டத்திற்கு மிக மிக அவசியமானது. மாணவர்களை ஆர்வமுடன் கல்வி கற்க வைப்பதில், ஆசிரியர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு!

கல்வி நிறுவனங்களில் ஆய்வகங்கள் அதிகளவில் இடம்பெறச் செய்ய வேண்டும். வகுப்பறைகள் ஆய்வகங்களாக மாற்றப்படவேண்டும். ‘புராஜெக்ட்’ அடிப்படையிலான கற்றல் முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். சமூகத்தில் ஒவ்வொரு தரப்பினரும் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், புதிய தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட வேண்டும்.

பிரச்னைகளை கண்டறிந்து, தீர்வு காணும் வகையில் மாணவர்கள் திறன் படைத்தவர்களாக உருவாக்கப்பட வேண்டும். அதற்கு, அதிகளவிலான ஆராய்ச்சிகள் அவசியம். வகுப்பறையில் அதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும். மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் வகையிலான பாடத்திட்டம், கற்றல் முறையை இடம்பெறச் செய்ய வேண்டும்.

இவற்றை உணர்ந்தே, எங்கள் கல்வி நிறுவனத்தில் இயன்றவரை புதுமைகளை புகுத்தி வருகிறோம். தற்போது, 14 ஆராய்ச்சி மையங்கள் எங்கள் கல்வி நிறுவனத்தில் இயங்கி வருகின்றன. அதற்கு கிடைத்த பரிசாக, ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் துறை மாணவர்கள் உலகிலேயே மிகக் குறைந்த எடை உள்ள, அதாவது 33.6 கிராம் மட்டுமே கொண்ட, செயற்கைக்கோளை தயாரித்து, சாதனை படைத்துள்ளனர்!

வேலை வாய்ப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று பல தரப்பினரும் கூறி வருகின்றனர். வேலை வாய்ப்புகள் உருவாக, வேலை அளிப்பவர்கள் உருவாக வேண்டும் அல்லவா? அதற்கு, தொழில்முனைவோர்கள் அதிகளவில் உருவாக்கப்பட வேண்டும் அல்லவா? எனவேதான், எங்கள் கல்வி நிறுவனத்தில் தொழில் முனைவோராக தேவையான திறன் வளர்ப்பு பயிற்சிகளையும், தகவல்களையும் மாணவர்களுக்கு வழங்கி, உற்சாகப்படுத்துகிறோம். ‘மூக்’ (MOOஇ)’, ‘சுவயம்’ போன்ற திட்டங்களை பயன்படுத்தி, ஆன்லைன் வழியாக வழங்கப்படும் படிப்புகளையும் மாணவர்கள் கற்க ஊக்குவிக்கிறோம்!

யு.ஜி.சி., போதும்!
பல்கலைக்கழக மானியக் குழு களைக்கப்பட்டு, உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படும் பட்சத்தில், கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியம் மற்றும் நிதி பாதிக்கப்படும். நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புண்டு. சில முறையாக செயல்படாத கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தாகக் கூறி, அனைத்து கல்வி நிறுவனங்களும் பாதிக்கப்படும் வகையில், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புண்டு. ஆகையால், பல்கலைக்கழக மானியக் குழுவே, தொடர்ந்து செயல்படுவது நல்லது என்பது எனது கருத்து!

-முனைவர் கே.பி.ஐசக், துணைவேந்தர், இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ், சென்னை.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us