சராசரி மாணவர்களும் சாதிக்கலாம்! | Kalvimalar - News

சராசரி மாணவர்களும் சாதிக்கலாம்!ஜூலை 24,2018,15:51 IST

எழுத்தின் அளவு :

1992ம் ஆண்டில், என்னுடைய 25வது வயதில் முதன்முதலாக, பார்மசி கல்லூரியை ஆரம்பித்தேன். அதுமுதல், இன்று வரையிலான 25 ஆண்டுகளில், 25 கல்வி நிறுவனங்களை ஆரம்பித்துள்ளேன். அவற்றில், தற்போது 25 ஆயிரம் மாணவர்கள் படித்துவருகின்றனர்!

அந்த கல்வி நிறுவனங்களில், பார்மசி, மேரிடைம், பிசியோதெரபி, மேனேஜ்மென்ட், டீச்சர் டிரைனிங், இன்ஜினியரிங், கேட்ரிங், பயோடெக்னாலஜி, பயோ இன்பர்மேட்டிக்ஸ், விசுவல் கம்யூனிகேஷன், சட்டம் என ஏராளமான துறைகளில், சுமார் 150 படிப்புகள் வழங்கப்படுகிறது. பிற கல்வி நிறுவனங்களில் பெரும்பாலும், குறைந்தது 80 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குத்தான் அட்மிஷன் வழங்கப்படுகிறது. ஆனால், எனது கல்வி நிறுவனங்களில், 50 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் அட்மிஷன் வழங்கப்படுகிறது.

குறைந்த மதிப்பெண் காரணமாக உயர்கல்வி வாய்ப்பு கிடைக்காமல், மாணவர்கள் தவறான பாதையில் சென்றுவிடக்கூடாது என்பதற்காக, அத்தகைய மாணவர்களை அரவணைத்து, அனைவரையும் பட்டம் பெற வைக்கிறோம். அதிக மதிப்பெண் பெற்று, சிறப்பாக கல்வி கற்கும் மாணவர்களுக்கு அதிக கவனிப்பு அவசியமில்லை; அவர்கள் சுயமாகவே படித்துக்கொள்வர். அவர்களாகவே எளிதில் வேலையும் பெற்று விடுவர்.

ஆனால், குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களின் நிலை வேறு. அவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. அவர்களுக்குத்தான் சிறப்பு கவனம் தேவை. அத்தகைய மாணவர்களுக்கு உரிய முறையில் பயிற்சி அளித்து, பட்டம் பெறச் செய்து, வேலையும் பெறச் செய்து, சமுதாயத்தில் சிறந்த குடிமகனாக செயலாற்றிடும் வகையில், அவர்களை மாற்ற முழு முயற்சி எடுத்து வருகிறேன். இதுவே எனது குறிக்கோள்... எனது முதல் பணியும் கூட... இதற்கு ஒரு காரணமும் உண்டு!

எனது பள்ளி இறுதி வகுப்பில், நான் 50 சதவீத மதிப்பெண் மட்டுமே பெற்றேன். அதனால், பி.காம்., ‘சீட்’ பெறுவதற்காக பலமுறை பச்சையப்பா கல்லூரியின் படியை மிதித்துள்ளேன். தீவிர முயற்சிக்கு பிறகே, எனக்கு அக்கல்லூரியில் அட்மிஷன் கிடைத்தது. பிற்காலத்தில், அதே பச்சையப்பா கல்லூரி வாரியத்திற்கே தலைவரும் ஆனேன்!

மாணவர்கள், ‘தொடர் முயற்சி செய்து அதிக மதிப்பெண் பெற வேண்டும்’ என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், ஏராளமான மாணவர்கள் மனப்பாடம் செய்தே அதிக மதிப்பெண் பெறுகின்றனர். செயல்முறையில், புரிந்து படிக்க தவறிவிடுகின்றனர். புரிந்து கற்றால் தான் வாழ்க்கை சிறப்பாகும். மேலும், எதிர்கால வாழ்க்கை சிறக்க, மாணவர்கள் 10ம் வகுப்பிலேயே, எதிர்காலத்தில் என்ன படிக்க போகிறோம்? என்னவாக ஆகப்போகிறோம்? என்று தெளிவாக திட்டமிட வேண்டும். பிளஸ் 1 பாடத்திட்டத்தை தேர்வு செய்ய, அந்த திட்டமிடல் உதவும்.

இன்றைய நிலையில், அரசு கல்வி நிறுவனங்களைவிட, தனியார் கல்வி நிறுவனங்களில் உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள் சிறப்பாக உள்ளன. சிறந்த வசதிகளைக் கொண்ட எனது கல்வி நிறுவனங்களில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ‘அட்மிஷன்’ வழங்குவதோடு, ஏழை, எளிய மாணவர்களுக்கும், விளையாட்டுத் துறையில் சாதித்த மாணவர்களுக்கும் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது! 

-ஐசரி கே. கணேஷ், தலைவர், வேல்ஸ் கல்வி நிறுவனங்கள், சென்னை.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us