கற்பித்தல், ஆராய்ச்சி இரண்டுமே அவசியம்! | Kalvimalar - News

கற்பித்தல், ஆராய்ச்சி இரண்டுமே அவசியம்!ஜூலை 20,2018,14:09 IST

எழுத்தின் அளவு :

ஒவ்வொரு ஆண்டும், நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற்று, வேலை வாய்ப்பை எதிர்நோக்கி, கல்லூரியை விட்டு வருகின்றனர். அவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். படிப்பிற்கு ஏற்ற வேலையையும், ஊதியத்தையும் பெறுபவர்கள் ஒரு வகை. படித்த படிப்பை விட, குறைவான ஊதியத்திற்கு செல்பவர்கள் இரண்டாம் வகை. வேலையே கிடைக்காத பட்டதாரிகள் மூன்றாம் வகை! இதன்மூலம், திறன்களை பொறுத்தே, வேலை வாய்ப்பு அமைகிறது என்பதை முதலில் இன்றைய மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!

எங்கள் கல்வி நிறுவனத்தைப் பொறுத்தவரை, 85 சதவீத மாணவர்கள், முதல் இரண்டு வகையைச் சார்ந்தவர்களாக உள்ளனர். மீதமுள்ள 15 சதவீத மாணவர்களில் பலர் வெளிநாடுகளில் உயர்கல்வி பெறவும், சுயமாக தொழில் துவங்கவும் ஆயத்தமாகின்றனர். இரண்டாவது வகையைச் சேர்ந்த சிலரையும், முதல் வகைக்கு முன்னேற்ற, முழு முயற்சி எடுத்துவருகிறோம். அந்த வகையில், குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கிறோம்.

வேலை வாய்ப்பிற்கு தயார்ப்படுத்தும் வகையில், பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சிகளை அளிக்கிறோம். குறிப்பாக, 3ம் மற்றும் 4ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, ஆங்கிலத் தொடர்பு பயிற்சியை வழங்குகிறோம். இத்தருணத்தில், மாணவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவெனில், ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களை மட்டும் மாணவர்கள் கற்று தேர்ந்தால் போதாது. கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, வேலைக்கு தேவையான திறன்களையும் படிக்கும்போதே வளர்த்துக்கொள்ள வேண்டும். மதிப்பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கக்காமல், புரிந்து கற்க வேண்டும்.

சர்வதேச அளவில், உணவு, நீர், போக்குவரத்து, மாற்று சக்தி, தொடர்பியல் ஆகியவற்றிற்கு இன்று அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், இந்த துறைகளில் புதிய புதிய தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட வேண்டியுள்ளது. இதனை உணர்ந்த, எங்களது கல்வி நிறுவன வேந்தர், தேவை மிகுந்த இந்த துறைகள் சார்ந்து, புதிய படிப்புகளை துவக்க ஆலோசனை வழங்கினார். அதன்படி, பல்வேறு புதிய படிப்புகளை துவக்கி வருகிறோம். மேலும், இந்த துறைகளில் ஆராய்ச்சியில் ஈடுபடவும், புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவும் எங்களது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஊக்குவிக்கிறோம்.

பொதுவாக, ஏராளமான கல்லூரிகளில் கற்பித்தலுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால், எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி இரண்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது அவசியம். எங்கள் கல்வி நிறுவனத்தில், இந்த இரண்டிலும் அதீத கவனம் செலுத்துகிறோம். ஆசிரியர்களையும் சரி, மாணவர்களையும் சரி ஆராய்ச்சியில் ஈடுபடவும், அரசு திட்டங்களை எடுத்து சிறப்பாக செயலாற்றவும் ஊக்குவிக்கிறோம்! 

-முனைவர். பி. மன்னர் ஜவகர், துணைவேந்தர், காரூண்யா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்சஸ், கோவை.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us