‘அவ்வளவு எளிதல்ல ஆன்லைன் கவுன்சிலிங்’ | Kalvimalar - News

‘அவ்வளவு எளிதல்ல ஆன்லைன் கவுன்சிலிங்’ஜூலை 12,2018,12:16 IST

எழுத்தின் அளவு :

முன்பு எட்டாக் கனியாக இருந்த பொறியியல் கல்வி, இன்று பிளஸ் 2 முடித்த அனைத்து மாணவர்களுக்கும் சாத்தியம் என்ற நிலையை அடைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது! அதேநேரம், ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மாணவர்களுக்கு வாய்ப்பு இருந்தும், பொறியியல் படிப்பில் அவர்கள் சேராமல் இருப்பது என்பது நாட்டிற்கான நஷ்டமாகவே கருதுகிறேன்!

விருப்பம் இல்லாமல் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்வதும் தவறுதான். ஏனெனில், அவ்வாறு சிலர் தேர்வு செய்வதால் தான், அவர்களால் உரிய காலகட்டத்தில் படிப்பை நிறைவு செய்ய முடியாமல், சரியான வேலை வாய்ப்பையும் பெற முடியாமல் தவிக்கின்றனர். அவர்களைப் பார்த்து, திறமையும், ஆர்வமும் உள்ள மாணவர்கள் திசை மாறிப்போய்விடக்கூடாது. ‘இன்ஜினியரிங் படிக்கவேண்டும்’ என்ற உண்மையான விருப்பத்தோடு எடுத்து படித்தால் அவர்கள் நிச்சயம் சாதிப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை!

பாடத்திட்டத்தையும் கடந்து, கூடுதல் திறன்களை வளர்த்துக்கொண்ட மாணவர்களுக்கு வேலை எளிதாக கிடைக்கிறது. அவ்வாறு, மாணவர்கள் அவர்களது திறன்களையும், தகுதிகளையும் வளர்த்துக்கொள்ள ஏதுவாக, எங்கள் கல்லூரியில் ‘இனோவேஷன் சென்டர்’ வைத்துள்ளோம். பன்முகத்திறமையை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் பலவற்றை வழங்கி, அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளவும் கற்றுத்தருகிறோம்.

கவனம் தேவை
கடந்த ஆண்டுவரை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வில், ஓரளவு திட்டமிட்டு சென்ற மாணவர்களுக்கு கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வது என்பது எளிதாக இருந்தது. கண் முன்னே காலியிடம் குறித்த பட்டியல் இடம்பெற்றிருந்தது. ஒரு மாணவருக்கு, அவர் விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கவில்லை என்றால், கவுன்சிலிங் அரங்கிலேயே, அடுத்தடுத்த விருப்பத்திற்கு ஏற்ப, காலி இடங்களில் ஒன்றை தேர்வு செய்ய முடிந்தது.

தமிழக அரசு இந்த ஆண்டு பின்பற்ற உள்ள ஆன்லைன் கவுன்சிலிங் முறையிலான பொறியியல் மாணவர் சேர்க்கையில், அவ்வாறு கல்லூரியையும், பாடப்பிரிவையும் தேர்வு செய்ய இயலாது. ஒவ்வொரு சுற்றிலும் 15 ஆயிரம் மாணவர்களுக்கு மொத்தம் 5 நாட்கள் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதில், முதல் 3 நாட்களுக்குள் அவரவர்களது விருப்பத்தை ஆன்லைனில் பதிவிட வேண்டும். தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை வரிசைப்படுத்துவதில், ஒவ்வொரு மாணவரும் மிக கவனமாக செயல்பட வேண்டியுள்ளது.

மாணவர்கள், அவரவர்களுக்கு வழங்கப்படும் நாட்களின்போது பார்த்துக்கொள்ளலாம் என்று அமைதியாக இருந்துவிடக்கூடாது. முன்கூட்டியே ஆராய்ந்து, அவரவரது கட்-ஆப் மதிப்பெண்ணிற்கு ஏற்ப கிடைக்க வாய்ப்புள்ள கல்லூரி மற்றும் பாடப்பிரிவை பட்டியலிட்டு வைத்திருக்க வேண்டும்.

உதாரணமாக, 145 கட்-ஆப் எடுத்த மாணவர் கடந்த ஆண்டுகளில், 190 கட்-ஆப் பெற்ற கல்லூரிகளை மட்டுமே தேர்வு செய்துவைத்திருந்து, காந்திருந்தால் அம்மாணவருக்கு ‘சீட்’ ஒதுக்கப்படுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. மாணவர் பெற்ற கட்-ஆப் மதிப்பெண்களுக்கும் கூடுதலாக 5 மதிப்பெண் மற்றும் குறைவாக 5 மதிப்பெண் பெற்ற கல்லூரிகளுக்குள் தேர்வு செய்துவைத்திருப்பது சிறந்தது. அவ்வாறு ஒரு சிறந்த பட்டியல் தயாரிக்க, கடந்த 3 முதல் 5 ஆண்டுகளுக்கான கட்-ஆப் மதிப்பெண்களை ஒப்பிட வேண்டியது அவசியம். மாணவர்கள், அவரவர் மதிப்பெண்களுக்கு ஏற்ப சரியான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து, வாழ்வை சிறப்பாக அமைத்துக்கொள்ள வாழ்த்துக்கள்!

-சாய் பிரகாஷ் லியோமுத்து, சி.இ.ஓ., சாய்ராம் கல்வி நிறுவனங்கள், சென்னை.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us