பி.ஆர்க்., படிக்கலாமா? | Kalvimalar - News

பி.ஆர்க்., படிக்கலாமா?ஜூன் 21,2018,11:12 IST

எழுத்தின் அளவு :

ஆர்கிடெக்சர் படிப்பிற்கு, இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டுமே பி.ஆர்க்., என்ற பிரத்யேக பட்டம் வழங்கப்படுகிறது!

ஐரோப்பிய மற்றும் மேலை நாடுகளில் ‘டிசைன்’ என்ற பெயரிலேயே கட்டடக்கலை படிப்பு வழங்கப்படுகிறது. புராடக்ட் டிசைன், இன்டீரியர் டிசைன், பேஷன் டிசைன் என்ற நிலையில், ‘ஆர்கிடெக்சர் டிசைன்’ படிப்பும் அங்கு வழங்கப்படுகிறது. மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு மிக பொருத்தமான துறைகளில் ஒன்று ‘ஆர்கிடெக்சர்’. தியரி, ஸ்டூடியோ, பிராக்டிக்கல் ஆகிய மூன்று நிலைகளில் பி.ஆர்க்., பாடத்திட்டம் இடம்பெற்றுள்ளது.

ஆர்கிடெக்சர் படித்தவர்கள் எந்த ஒன்றையும் வித்தியசமாக பார்ப்பார்கள். மதிப்பெண்களை பொறுத்துத்தான், இத்துறையில் சாதிக்க முடியும் என்ற நிலை இல்லை. திறன்களின் அடிப்படையிலேயே இத்துறையில் சாதனையாளராக முடியும். மாணவர்களின் ஆர்வத்தையும், திறனையும் பொறுத்து, எந்த ஒரு பொருளின் டிசைனையும் மேம்படுத்துக்கொண்டே இருக்கலாம். வடிவமைப்பு என்பதற்கு ‘முடிவு’ என்ற ஒன்று இல்லவே இல்லை.

எந்த ஒரு பொருள், கட்டடத்திலும், வடிவமைப்பு என்பது தொடர்ந்து மேம்பாட்டும், மாறுபட்டும் வருகிறது. அதற்கேட்ப, வடிவமைப்பில் ஆர்வமிக்கவர்கள் இத்துறையில் ஜொலிக்க முடியும். மேலும், மற்றவர்களுடன் பேசும் திறன், மாறுபட்டு சிந்திக்கும் திறன், புத்தாக்க சிந்தனையுடன் பிறரைக் கவரும் வகையில் டிசைனிங் செய்யும் திறன் ஆகியவை இதற்கு அவசியம். இத்தகைய திறன் படைத்த ‘ஆர்கிடெக்ட்’களை நாங்கள் உருவாக்குகிறோம்.

தற்போதைய நிலவரப்படி, 59 ஆயிரம் பதிவு செய்த ‘ஆர்கிடெக்ட்’ தான் தேசிய அளவிலேயே இருக்கின்றனர். ஆனால், இன்றைய இந்திய மக்கள் தொகை அடிப்படையில் ஆர்கிடெக்சர் படித்தவர்களுக்கான தேவை இன்னும் ஏராளம்!

பி.ஆர்க்., முடித்து பதிவு செய்த அடுத்த நாளில் இருந்தே, ஒருவர் சுயமாக பயிற்சி செய்யமுடியும் என்பது இப்படிப்பின் மற்றும் ஒரு சிறப்பம்சம். இவைதவர, தனியார் நிறுவனங்கள், அரசு அமைப்புகள், கார்ப்ரேட் நிறுவனங்களில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

நாட்டா அல்லது ஜே.இ.இ., மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பி.ஆர்க்., படிக்க முடியும். நாட்டா தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இதுவரை ஒரு எழுத்துத்தேர்வு இருந்தது. அதுவும் இந்தாண்டு முதல் ஆன்லைன் டிசைனிங் தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. இத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க, ஆப்டிடியூட் மற்றும் கணிதத்திறன் மிக அவசியம்.

‘நாட்டா’ தேர்வுக்கு பயிற்சி அளிக்க ஏராளமான தனியார் பயிற்சி மையங்கள் உள்ளன. குறுகிய கால பயிற்சியை பல்வேறு மையங்கள் அளித்து வருகின்றன. எனினும், ஆர்கிடெக்ட் ஆக வேண்டும் என்று முன்பே முடிவு செய்த மாணவர்கள் 9ம் வகுப்பில் இருந்தே பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இன்டீரியர் டிசைன், அர்பன் டிசைன், லைட்டிங் டிசைன், பர்னிச்சர் டிசைன், லேண்ட்ஸ்கேப் டிசைன் போன்ற ஏராளமான பிரிவுகளில் பிரத்யேகமாக முதுநிலை படிக்கும் வாய்ப்புகளும் உள்ளன!

-பேராசிரியர் ஜெயலட்சுமி, டீன், ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர், பி.எஸ்., அப்துர் ரகுமான் கிரசன்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், சென்னை.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us