‘வேலைபெறத் தேவை திறன்களே’! | Kalvimalar - News

‘வேலைபெறத் தேவை திறன்களே’!ஜூன் 19,2018,16:28 IST

எழுத்தின் அளவு :

பொறியியல் பட்டப்படிப்பில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் முக்கியம் தான்... ஆனால் மதிப்பெண்கள், மாணவர்களை வேலை வாய்ப்பிற்கான அடிப்படை தகுதி படைத்தவர்களாக மாற்ற உதவுகிறதே தவிர, உண்மையில் வேலையை பெற்றுத்தருவதற்கு அல்ல!

சிறந்த வேலையைப் பெற, தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் பல்வேறு கூடுதல் திறன்களை பெற்றிருப்பது அவசியம். அவற்றில் முக்கியமானது, ‘சாப்ட் ஸ்கில்ஸ்’. அதாவது, எழுத்துத் திறன், பேச்சுத் திறன் ஆகிய இரண்டிலும் புலமை வேண்டும். மனதில் எண்ணுவதை சரியான முறையில், பிறருக்கு எளிதில் புரியும்படி வெளிப்படுத்தும் திறன், வாடிக்கையாளர்களை முறையாக கையாளும் திறன், ஆவணப்படுத்தும் திறன், புதியவற்றை கற்கும் திறன் என பல்வேறு கூடுதல் திறன்கள் தேவைப்படுகின்றன.

ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்பங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், தொடர் கற்கும் திறன் இன்றைய இளைஞர்களிடம் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. சரியான கற்றல் திறனை பெற்ற மாணவர்களால், தொடர் மாற்றங்களுக்குற்கு ஏற்ப தங்களை மேம்படுத்திக்கொள்ள முடியும். இவைதவிர, ஒரு சவாலை முறையாக கையாளும் திறன், மலிவான செலவில் தீர்வுகாணும் திறன், புத்தாக்க சிந்தினை, பல்துறை அறிவு ஆகியவையும் எதிர்பார்க்கப்படுகின்றன.

உதாரணமாக, எந்த ஒரு நவீன காரை எடுத்துக்கொண்டேமேயானாலும், மெக்கானிக்கல் இன்ஜினியர், கம்ப்யூட்டர் இன்ஜினியர், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர், கம்யூனிகேஷன் இன்ஜினியர் என பலரது பங்கு அதில் உள்ளது. அதாவது, ஒவ்வொரு மெக்கானிக்கல் இன்ஜினியரும், கம்ப்யூட்டர் திறனைப் பெற வேண்டும். ஒவ்வொரு கம்ப்யூட்டர் இன்ஜினியரும், மெக்கானிக்கல் பற்றி தெரிந்திருக்க வேண்டும். இதுபோன்ற திறனைத்தான் இன்றைய தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. அத்திறன்களை பெற்றவர்களுக்குத்தான் வேலை வாய்ப்பும் எளிதாகிறது!

 ஐ.ஐ.டி., என்.ஐ.டி., நிகர்நிலை பல்கலைக்கழகம், தன்னாட்சி கல்வி நிறுவனங்கள் என பல்வேறு நிலைகளில் இன்றைய கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஆனால், அனைத்திற்கும் மிக அவசியமான ஒன்று சிறப்பான கற்றல், கற்பித்தல் முறை. இன்றைய நிலையில், வகுப்பறை சூழல் வெகுவாக மாற்றம் கண்டுள்ளது. மாணவர்களுக்கான தூண்டுகோலாக இன்றைய பேராசிரியர்கள் செயல்பட வேண்டியுள்ளது. முன்பு, பேராசிரியர்களின் பங்கு என்பது பாடத்திட்டத்தை நிறைவு செய்வதில் இருந்தது. இன்று, வகுப்பறை என்பது மாணவர்களை மையப்படுத்தியே உள்ளது!

தொழில்நிறுவனத்திற்கும், கல்வி நிறுவனத்திற்குமான இடைவெளி குறைக்கப்பட்டால் தான் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு பிரகாசமாகும். அதனை உணர்ந்து, அதிகமான தொழில்நிறுவனங்களுடன், எங்கள் கல்லூரி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம், துறை சார்ந்த நிபுணர்கள் எங்களது மாணவர்களோடு கலந்துரையாடுகின்றனர். எங்கள் பேராசிரியர்களையும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அனுப்பி, புதிய தொழில்நுட்பத்தையும், தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களையும் அறியச் செய்கிறோம். புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த மாணவர்களை தூண்டும் வகையில், எங்கள் கல்லூரி வளாகத்தில் ‘சென்டர் பார் இனோவேஷன்’ எனும் மையத்தையும் செயல்படுத்தியுள்ளோம்! 

-முனைவர் என்.ஆர்.அலமேலு, முதல்வர், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, கோவை.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us