‘எம்.பி.பி.எஸ்., மட்டுமே மருத்துவப் படிப்பு அல்ல’ | Kalvimalar - News

‘எம்.பி.பி.எஸ்., மட்டுமே மருத்துவப் படிப்பு அல்ல’மே 17,2018,16:30 IST

எழுத்தின் அளவு :

மருத்துவப் படிப்பு என்றாலே, அனைவருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வருவது எம்.பி.பி.எஸ்.,! இன்று பெரும்பாலானோரின் முதல் விருப்பமும் அதுவே! அதேவேளை, மாணவர்களுக்கு உண்மையாகவே மருத்துவ துறையில் ஆர்வம் இருக்குமானால், அவர்களை மருத்துவம் படிக்க வைக்கலாம். ஆனால், ஆர்வம் இல்லாத மாணவர்களை, பெற்றோர் வற்புறுத்தி மருத்துவ படிப்புகளில் சேர்ப்பது உகந்ததல்ல!

எம்.பி.பி.எஸ்., படித்தவுடன் முதுநிலை படிப்பு, அதன்பிறகு சூப்பர் ஸ்பெஷாலிட்டி, என அடுத்தடுத்த படிப்புகளை படிக்க வேண்டும் என்ற மனநிலையே இன்றைய மாணவர்கள் மத்தியில் காணப்படுகிறது. எந்த படிப்பாக இருந்தாலும், ஆழமாக புரிந்து படிக்க வேண்டும். முக்கியத்துவம் வாய்ந்த பப்ளிக் ஹெல்த், மெடிக்கல் எஜுகேஷன், ரிசர்ச், அட்மினிஸ்ட்ரேஷன் போன்ற பிரிவுகளிலும் இன்றைய மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.

அனைத்துமே அவசியம்
இன்று, எம்.பி.பி.எஸ்., படிப்பையும் கடந்து, வாய்ப்புகள் மிகுந்த ஏராளமான படிப்புகள் மருத்துவ துறையில் உள்ளன. பி.பார்ம், பார்ம்-டி,  நர்சிங், போஸ்ட் பேசிக், பிசியோதெரபி, பயோ மெடிக்கல் சயின்ஸ், பயோஇன்பர்மேட்டிக்ஸ், பயோடெக்னாலஜி,  என்விரான்மென்டல் ஹெல்த் சயின்ஸ், ஆக்குபேஷனல் தெரபி, இன்டஸ்டிரியல் சேப்டி, டயாலிசிஸ் டெக்னாலஜி உட்பட ஏராளமான படிப்புகள் இன்று வழங்கப்படுகின்றன.  ஒவ்வொரு படிப்புமே முக்கியத்துவம் நிறைந்த படிப்பு தான்!

எந்த ஒரு படிப்பையும் சாதரணமானது என்று தள்ளி வைத்து பார்க்க முடியாது. டாக்டர் ஒருவரால் மட்டுமே பரிசோதனை, சிகிச்சை, சிகிச்சை பிறகான கண்காணிப்பு என அனைத்தையும் செய்துவிட முடியாது. மருத்துவ சிகிச்சையில், பல்வேறு நிலைகளில் நிபுணர்கள் முதல் உதவியாளர்கள் வரை அவசியம் தேவை.

இவற்றை உணர்ந்து, புதிய புதிய படிப்புகளுடன், டாக்டருக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவும் ‘பிஷிசியன் அசிஸ்டென்ட்’ எனும் படிப்பும் எங்கள் கல்வி நிறுவனத்தில் வழங்கப்படுகிறது. மேலும், ஜீடியாட்டிக் கேர், கிரிட்டிக்கல் கேர், ஆர்த்தோபீடிக் டெக்னாலஜி, பிளாஸ்டிக் சர்ஜரி அன்ட் காஸ்மெடிக் உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளையும் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

எங்கள் கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும், அனைத்து பிஎஸ்.சி., படிப்புகளும், 4 ஆண்டுகால படிப்புகளாகும். அதில், அனைத்து மாணவர்களும் ஓர் ஆண்டு முழுக்க முழுக்க இன்டர்ன்ஷிப் மேற்கொள்ள வேண்டும். முதல் ஒன்றரை ஆண்டு வகுப்பறை பாடமாகவும், அதன் பிறகு மருத்துவமனைகளில் செயல்முறையில் நேரடி பயிற்சியுடன் பாடம் கற்பிக்கப்படுகிறது.

-டாக்டர் பி.வி. விஜயராகவன், துணைவேந்தர், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us