ஜி.ஆர்.இ., தேர்வு | Kalvimalar - News

ஜி.ஆர்.இ., தேர்வுமார்ச் 02,2018,14:58 IST

எழுத்தின் அளவு :

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள, சிறந்த கல்வி நிறுவனங்களில், உயர் கல்வி பெற விரும்பும் மாணவர்கள் எழுத வேண்டிய தேர்வுகளில் முக்கியமான ஒன்று, ‘கிராஜுவேட் ரெக்கார்ட் எக்சாமினேஷன்ஸ்’ (ஜி.ஆர்.இ.,)

எதற்கான தேர்வு
முதுநிலைப் பட்டப் படிப்பை வெற்றிகரமாக முடிப்பதற்கான, ஆற்றல் அறிவு, சிந்திக்கும் திறன் மற்றும் வணிக பகுப்பாய்வு திறன்கள் மாணவர்களுக்கு இருக்கிறதா என்பதை  அளவிடுவதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது! இத்தேர்வினை ‘எஜூகேசன் டெஸ்டிங் சர்விஸ்’ (இ.டி.எஸ்.,) நடத்துகிறது.

வணிக பள்ளிகள் அல்லது மேலாண்மை கல்லூரிகளில் எம்.பி.ஏ., மேலாண்மை முதுநிலை படிப்புகள், சிறப்பு முதுநிலைப் படிப்புகள் போன்றவற்றில் சேர்க்கை பெற இத்தேர்வு மதிப்பெண்கள் பெரிதும் பயன்படுகிறது. இவைதவிர, கலை, அறிவியல், மானுடவியல், இயற்கை அறிவியல் மற்றும் பொறியியல் போன்ற துறைகளில், பட்ட மேற்படிப்பை தொடர விரும்பும் மாணவர்களும் இத்தேர்வை எழுதலாம்.

யார் எழுதலாம்
இத்தேர்வை எழுதுவதற்கு வயது வரம்பு மற்றும் சிறப்பு தகுதிகள் எதுவும் இல்லை. இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் போதுமானது.

தேர்வு முறை
பொதுத் தேர்வு (ஜி.ஆர்.இ.,- ஜெனரல் டெஸ்ட்) மற்றும் பாடப் பிரிவுத் தேர்வு (ஜி.ஆர்.இ.,- சப்ஜட் டெஸ்ட்) ஆகிய இரு பிரிவுகள் உள்ளன. பாடப்பிரிவுக்கு ஏற்றவாறு தேர்வு பிரிவுகளை தேர்ந்தெடுத்து எழுதலாம்.

ஜி.ஆர்.இ., -ஜெனரல் டெஸ்ட் தேர்வில், வெர்பல் ரீசனிங், குவான்டிடேடிவ் ரீசனிங், அனலிடிகல் திங்கிங் ஆகிய மூன்று பகுதிகளில், மாணவர்களின் ஆங்கில மொழியியல் எழுதும் திறன், அரித்மெடிக், அல்ஜீப்ரா மற்றும் ஜியோமெட்ரிக் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சிக்கல் தீர்க்கும் பகுப்பாய்வு திறன்கள் அளவிடப்படுகிறது.

ஜி.ஆர்.இ., -சப்ஜட் டெஸ்ட் தேர்வில், இயற்பியல், உயிரியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம், மற்றும் உளவியல் போன்ற ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பாடப் பிரிவில் உள்ள நுண்ணறிவு திறன்கள் சோதிக்கப்படும்.

எப்படி எழுதலாம்?
இத்தேர்வானது, கணினி அடிப்படை தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு ஆகிய இரண்டு முறைகளை கொண்டது. கணினி அடிப்படையிலான தேர்வை நடத்த முடியாத பகுதிகளில் மட்டுமே எழுத்துத் தேர்வு நடைபெறும். ஒவ்வொரு 21 நாட்களுக்கும் ஒரு முறை வீதம், ஒரு ஆண்டுக்கு அதிகபட்சம் 5 முறை இத்தேர்வை எழுதலாம். இத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மொத்தம் 5 ஆண்டுகள் வரை செல்லும்.

விபரங்களுக்கு: www.ets.org

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us