எதிர்பார்ப்புகள் மட்டும் போதுமா? | Kalvimalar - News

எதிர்பார்ப்புகள் மட்டும் போதுமா?

எழுத்தின் அளவு :

 

பள்ளிப்படிப்பிலும் சரி, கல்லூரிப் படிப்பிலும் சரி தங்களது பிள்ளைகளிடம், பெற்றோர் எதிர்ப்பார்ப்பது என்ன?

பிளஸ் 2 வரை, படிப்பு மற்றும் மதிப்பெண் ஆகியவை தானே! மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்களைப் பற்றி யாராவது பேசுகிறார்களா? சரி, பிளஸ் 2க்கு பிறகு நான்கு ஆண்டு கல்லூரி படிப்பில் சேர்க்கும்போது, பெற்றோரது எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது? கல்லூரிப்படிப்பு முடிந்து வெளியே வரும்போது, கையில் வேலையுடன் வருகிறார்களா? என்பது மட்டும்தானே!

ஆனால், தமிழகத்தில் பொறியியல் படித்த மாணவர்களால், சரியான வேலைப் வாய்ப்பை பெற முடியாமல் ஏன் சிரமப்படுகிறார்கள்? என்ற கேள்விக்கான பதிலை, மேலும் ஆராய்ந்து பார்த்தோமேயானால், பொதுவாக, தொழில்நுட்ப அறிவு மிகவும் குறைவாக இருப்பதும், தகவல் தொடர்பு திறனைவிட, துறை சார்ந்த அடிப்படை அறிவு குறைவாக இருப்பதும் தான் காரணம் என்பதை உணர முடிகிறது! இன்று, இன்ஜினியரிங் படித்த எத்தனை மாணவர்களால், வீட்டில் உள்ள பழுதடைந்த ஏ.சி., வாஷிங் மிஷின் அல்லது மொபைல் போனை சரிசெய்யத் தெரிகிறது?

படிப்பு, மதிப்பெண், வேலை ஆகியவை மட்டுமே மாணவர்களிடம் எதிர்பார்க்கப்படுவதால், அதிக மதிப்பெண் வாங்கி தேர்ச்சி பெற்ற மாணவர்கள்கூட, தாங்கள் அடிப்படை விஷயத்தில் சரியான தெளிவின்றி இருப்பதை, வேலைக்கான நேர்முகத்தேர்வில் தான் உணர்கின்றனர். இதற்கு, வழக்கம்போல் பல்கலைக்கழக பாடத்திட்டத்தை குறை சொல்ல முடியாது. ஒவ்வோரு பொறியியல் கல்லூரியிலும் எவ்வாறு வேலைவாய்ப்பு உதவி மையம், இ.சி.இ., இ.இ.இ., போன்ற துறைகள் செயல்படுகின்றதோ அதுபோல், ‘ஸ்கில் டெவலப்மென்ட்’ துறை கண்டிப்பாக செயல்பட வேண்டும். அப்போதுதான் மாணவர்களது திறன் வளரும்!

மாணவர்களிடம் ஆர்வத்தை தூண்டக்கூடிய அனைத்து விஷயங்களும் ஒவ்வொரு கல்விச்சாலையிலும் இடம்பெற வேண்டும். ஆர்வம் என்ற மனப்பான்மை எப்போது வரை, எதுவரை எல்லாம் மாணவர்களிடம் தூண்டப்படுகிறதோ, அப்போதுவரை புதியதாக கற்றுக்கொள்ளும் எண்ணமும், புதிய விஷயங்களை கண்டுபிடிக்கும் ஆசையும் நீடித்திருக்கும். ஆர்வத்தை கொடுக்க தவறும்பட்சத்தில் தான், மாணவனுடைய கவனம் திசை மாறுகிறது. ஆர்வத்தை தூண்டுவதற்கி, ‘ஸ்கில் டெவலப்மென்ட்’ மையம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

மாணவர்களும், முதல் செமஸ்டரில் இருந்து, ஒவ்வொரு அடிப்படை விஷயத்தையும் மேம்போக்காக கற்காமல், ஆழமாக அறிந்து, அனைத்து அம்சங்களையும் உணர்ந்து கற்க வேண்டும். அதுதான், வாழ்வின் இறுதிவரை கைகொடுக்கும். எந்த நிறுவனமும் வேலை வழங்கும்போது, அனைத்தையும் அறிந்த மிகச்சிறந்த அறிவாளியை எதிர்பார்ப்பதில்லை; அடிப்படைகளை, ஆழமாக அறிந்தவர்களாக இருக்கிறார்களா? என்று தான் பார்க்கின்றன. அதிக எதிர்பார்ப்பு நிறுவனங்களுக்கு இல்லை. பெற்றோர்களுக்குத்தான்!

பெற்றோர், தாங்கள் செய்யவேண்டிய விஷயங்களை செய்யாமல், எதிர்ப்பார்பை மட்டுமே வைத்திருப்பது ஏமாற்றத்தை மட்டுமே தரும். நான்கு ஆண்டுகளாக, எனது பிள்ளை என்ன கற்றுக்கொண்டான்? என்று பேராசிரியர்களிடம் பெற்றோர் கேட்டிருந்தால், இன்று ஒவ்வொரு மாணவரும் ஏதாவது ஒன்றை நிச்சயம் கண்டுபிடித்திருப்பார்கள்.

ஆசிரியர்களும், வெறும் பாடத்திட்டத்தை மட்டுமே கற்பிக்காமல், பாடப்புத்தகத்தை தாண்டி கற்பிக்க வேண்டும். அடிப்படை புரிதல், ஸ்கில் டெவலப்மென்ட், பெற்றோரது கவனிப்பு, ஆசிரியர்களின் ஆர்வ தூண்டல், இந்த நான்கும் சரியாக அமைந்தால், மாணவர்கள் நிச்சயம் சாதிப்பார்கள்!

-எம்.காதர் ஷா, செயலர், தானிஷ் அகமது கல்வி நிறுவனங்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us