ஐ.ஐ.டி., என்.ஐ.டி., இரண்டும் சமம்! | Kalvimalar - News

ஐ.ஐ.டி., என்.ஐ.டி., இரண்டும் சமம்!

எழுத்தின் அளவு :

முன்பு மாநிலங்கள் அளவில், ரீஜினல் இன்ஜினியரிங் காலேஜ் (ஆர்.இ.சி.,) என்ற பெயரில் நிறுவப்பட்ட கல்வி நிறுவனங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (என்.ஐ.டி.,)களாக மத்திய அரசு பெயர் மாற்றி, தரம் உயர்த்தியது. இருந்தபோதிலும், மத்திய அரசால், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி.,) அதிக முக்கியத்துவம் பெற்று வந்தன!

ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., அனைத்து மாநிலங்களிலும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு, சமீபகாலமாக ஏராளமான கல்வி நிறுவனங்களை நிறுவின. தற்போது, ஐ.ஐ.டி.,களுக்கு இணையானதாக என்.ஐ.டி.,களை கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி, ஐ.ஐ.டி.,களை விடவும், அதிக நிதியை என்.ஐ.டி.,களுக்கு மத்திய அரசு வழங்கிவருகிறது!

மேலும், இதுவரை என்.ஐ.டி.,களில் சேர ஜே.இ.இ., ,மெயின் எனும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும்; ஆனால், ஐ.ஐ.டி.,களில் சேர ஜே.இ.இ., மெயின் எழுதியவர்கள் மட்டுமே எழுத தகுதி பெற்ற ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் எழுத வேண்டும். ஆனால், தற்போது இந்த இரண்டு தேர்வுகளுக்கும் இணையாக மதிப்பெண் வழங்கும் முறையில் மாற்றத்தைக் கொண்டுவர மத்திய அரசு தீவிரமாக திட்டமிட்டு வருகிறது.

ஏனெனில், புதிய ஐ.ஐ.டி.,களில் சேர்க்கை பெறுவதை விட, வேலை வாய்ப்புகள் மிகப்பிரகாசமாக உள்ள பழமையான, புகழ்பெற்ற என்.ஐ.டி.,களில் சேரவே பல மாணவர்கள் விரும்புகின்றனர். மேலும், பழமையான என்.ஐ.டி.,கள் இன்றும் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் புதிய ஐ.ஐ.டி.,களை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகிக்கின்றன!

தனிச்சிறப்பு

வழக்கமாக ஆசிரியர் பாடம் நடத்துவதன் மூலம் கற்பது என்பது ஐ.ஐ.டி.,கள், என்.ஐ.டி.,கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் செய்யக்கூடியது தான். ஆனால், ஆசியர்களின் துணையின்றி மாணவர்களே ஒரு நிகழ்ச்சியை நடத்தி, அதன்மூலம் பல்வேறு திறன்களை வளர்த்துக்கொள்வது என்பது புதிது. அதைத்தான் திருச்சி என்.ஐ.டி., மாணவர்கள் செய்கின்றனர்!

அம்மாணவர்களே முழுக்க முழுக்க பங்கேற்று நடத்தும், ‘பிரக்யான்’ எனும் சர்வதேச தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை திருவிழாவின் தரம் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்துகொண்டே செல்கிறது. நிதி, மார்க்கெட்டிங், ஈவன்ட், கருத்தரங்கு என பல்வேறு பிரிவுகளில் ஆசிரியர்கள் கற்றுத்தராமல், மாணவர்களே பல்வேறு குழுக்களாக செயல்பட்டு, ஒவ்வொரு விஷயத்தையும் சுயமாக கற்றுக்கொண்டு நடத்துவதால், அவர்களுக்கு கிடைக்கும் அனுபவம் வாழ்நாள் முழுவதும் உதவும்.

ஒவ்வொரு ஆண்டும், புதிய தலைப்புகளின்கீழ், ஆறு மாதம் முன்பிருந்தே நிகழ்ச்சிக்கான பணியைத் துவங்கிவிடுகின்றனர். ஏரோஸ்பேஸ், பாதுகாப்பு, தொழில்முனைவு, புத்தாக்கம், புதிய கண்டுபிடிப்பு, ஆன்லைன் போட்டிகள், சர்வதேச தொடர்புகள் என பலவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவர்களே நடத்தும் இந்நிகழ்ச்சிக்கு ஐ.எஸ்.ஒ., அங்கீகாரம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாடத்திட்ட கல்வியைக் கடந்து இதுபோன்ற திறன்கள்தான், இன்றைய மாணவர்களுக்கு நிச்சயம் கிடைக்க வேண்டும்!

-பேராசிரியர் எஸ்.சுந்தர்ராஜன், இயக்குநர், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், திருச்சி.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us