குழு விவாதம் தொடர்பான சில எளிய ஆலோசனைகள் | Kalvimalar - News

குழு விவாதம் தொடர்பான சில எளிய ஆலோசனைகள்செப்டம்பர் 28,2013,08:09 IST

எழுத்தின் அளவு :

குழு விவாதத்தில் நீங்கள் பங்கெடுத்து பேசுகையில், உங்களிடமிருந்து, இரண்டு அம்சங்களை முக்கியமாக, தேர்வு கமிட்டியினர் கவனிப்பார்கள்.

அவை,

நீங்கள் என்ன பேசுகிறீர்கள்?
நீங்கள் எப்படி பேசுகிறீர்கள்?

என்பதுதான்.

உங்கள் பேச்சில் உள்ள கருத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுமோ, அதேயளவு முக்கியத்துவம், நீங்கள் எப்படி பேசுகிறீர்கள் என்பதற்கும் கொடுக்கப்படும். நீங்கள் வேகமாக பேசுகிறீர்களா, மிகவும் மெதுவாக பேசுகிறீர்களா, இறுக்கமாக பேசுகிறீர்களா, நடுநிலையோடு பேசுகிறீர்களா, நீங்கள் பேசக்கூடிய மொழியின் தரம், பயன்படுத்தும் வார்த்தைகளின் தன்மை மற்றும் உங்களின் உச்சரிப்பு உள்ளிட்ட பல்வேறான அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும்.

மேலும், நீங்கள் எவ்வளவு சத்தமாக பேசுகிறீர்கள், அதை மற்றவர்களால் பிரச்சினையின்றி கேட்க முடிகிறதா? என்பதும் கணக்கில் கொள்ளப்படும். உங்களின் உடல் மொழி, கண் அசைவுகள், உங்களின் சைகைகள் மற்றும் முக பாவனை உள்ளிட்ட அம்சங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

மேலும், நீங்கள் பேசும்போது, உங்களின் உணர்வு நிலை எந்தளவில் இருக்கிறது, உங்களின் உடல் வேர்த்து விறுவிறுத்துள்ளதா? அல்லது சாதாரண நிலையில் இருக்கிறதா என்பதும் முக்கியத்துவம் கொடுத்து கவனிக்கப்படும் அம்சங்கள்.

எனவே, இத்தகைய பிரச்சினைகளைத் தாண்டி நீங்கள் சிறப்பாக செயல்பட்டு, குழு விவாத கட்டத்தை வெற்றிகரமாக கடக்க வேண்டுமெனில், சில காலம் கட்டாயம் நல்ல பயிற்சி எடுத்துக்கொள்வது முக்கியம். நீங்கள் உங்கள் நண்பர்கள் மத்தியில் பேசிப் பார்க்கலாம் மற்றும் தனியாக இருக்கும்போதும், கண்ணாடி முன்பாக பயிற்சியில் ஈடுபடலாம்.

தலைமைத்துவம்

குழு கலந்தாய்வு சோதனையில், ஒருவரின் தலைமைத்துவ பண்பின் தன்மையும் கட்டாயம் மதிப்பிடப்படும். நீங்கள், மற்றவர்கள் சொல்லும் கருத்துக்கு மதிப்பளித்து, அவர்களையும் பேசுவதற்கு அனுமதிக்கிறீர்களா அல்லது நீங்கள் அனைத்தையும் பேசி, மற்றவர்களை ஆதிக்கம் செலுத்த நினைக்கிறீர்களா என்பது கவனிக்கப்படும். இது மிகவும் முக்கியமான ஒரு அம்சம் என்பதால், இதில் தேறாதவர்கள், கட்டாயம் நிராகரிக்கப்படுவார்கள்.

நீங்கள் உங்கள் கருத்தை நன்றாக பதிவுசெய்யும் அதேநேரத்தில், மற்றவர்களையும் பேச அனுமதிப்பது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் பேசும் கருத்தில் உறுதியாக இருக்கும் அதேநேரத்தில், தேவைப்பட்டால், அதற்கான பொருத்தமான உதாரணங்கள் மற்றும் சான்றுகளையும் அளிக்கத் தவறக்கூடாது.

யாராவது பேசமாலிருந்தால்...

உங்கள் குழுவில், சில பேர் பேசாமலேயே அதிகநேரம் வெறுமனே அமர்ந்திருப்பார்கள். எனவே, அவர்களை பேச வைக்கும் பொறுப்பும் உங்களுடையது. எனவே, அதனை நீங்கள் லாவகமாக கையாள வேண்டும். அதாவது, நம் குழுவில் சிலர் பேசமாலேயே இருக்கிறார்கள். அவர்கள் நல்ல மதிப்பு வாய்ந்த கருத்தை தங்களிடம் வைத்திருப்பார்கள். அதைக் கேட்க நாம் அனைவரும் ஆர்வமாக உள்ளோம். எனவே, அவர்கள் தங்களின் கருத்தை இங்கே பகிர்ந்துகொண்டால், நாம் மிகவும் மகிழ்ச்சியடைவோம் என்று நயமாக கூற வேண்டும்.

இந்த சூழலில், பேசாதவர்கள், கட்டாயம் பேசியாக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார். இதன்மூலம், உங்களின் தலைமைத்துவ பண்பை வெளிக்காட்டி, வேலைக்கான உத்திரவாதத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

ஏதேனும் ஒரு தலைப்பு

குழு விவாதங்களில், சமயத்தில் பட்டி மன்றம் போல், ஏதேனும் தலைப்பு கொடுக்கப்பட்டு, நபர்கள் இரு பிரிவாக பிரிந்து விவாதம் செய்ய வேண்டிய சூழல் எழும். உதாரணமாக, தொழில்நுட்ப வளர்ச்சியால், சமூகத்திற்கு நன்மை அதிகமா? அல்லது தீமை அதிகமா? என்பதைப் போன்ற தலைப்பு கொடுக்கப்படலாம்.

இதில், ஏதேனும் ஒன்றின் சார்பாக மட்டுமே நீங்கள் பேச வேண்டியிருக்கும். உங்களுக்கு, எந்த தலைப்பில் அதிக பாயின்டுகளை எடுத்து, அதிக அம்சங்களை சுட்டிக்காட்டி பேச முடியுமோ, அந்த தலைப்பையே தேர்வு செய்வது நன்று. இல்லையெனில், பேசுகையில் திக்கி திணற நேரிடும். அப்போது, உங்களின் மதிப்பெண்கள் குறையும் அபாயம் நேரும். எனவே, எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us