வறுமையை ஒழிக்க அறிவாயுதம் ஏந்துவோம்: சூப்பர் 30 ஆனந்த் | Kalvimalar - News

வறுமையை ஒழிக்க அறிவாயுதம் ஏந்துவோம்: சூப்பர் 30 ஆனந்த்

எழுத்தின் அளவு :

கடந்த 2002ம் ஆண்டு, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், ஆனந்த்குமார் என்ற இளைஞரால் தொடங்கப்பட்ட சூப்பர் 30 எனும் அமைப்பு, இதுவரை, தான் பயிற்சியளித்த மொத்தம் 360 ஏழை மாணவர்களில், 308 பேர், ஐ.ஐ.டி.,களில் இடம்பிடிக்க காரணமாகியுள்ளது. தன் இளம் வயதில் வறுமையால் பாதிக்கப்பட்டு, தனது மேற்படிப்பு வாய்ப்புகளை இழந்த ஆனந்த்குமார், பெரிய புகழின் வெளிச்சத்தில் இருந்தபோதும், மிகவும் எளிமையாகவே வாழ்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும், பொருளாதாரத்தில் பின்தங்கிய 30 மாணவர்கள், மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் வெல்வதற்காக, முற்றிலும் இலவசமாக பயிற்சியளிக்கப்பட்டு வருகிறார்கள்.

டைம் பத்திரிக்கையில் இவரைப் பற்றி படித்த அமெரிக்க அதிபர் ஒபாமா கூட, இவரது சேவைப் பணியின் மகத்துவத்தை உணர்ந்து, ஒரு சிறப்பு தூதரை நேரில் அனுப்பி, இவரைப் பாராட்டியுள்ளார்.

அவர், தனது அனுபவங்கள், சிந்தனைகள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து பகிர்ந்துகொண்ட பேட்டி;

கேள்வி: உங்களின் இளமைப் பருவம் மிகவும் கடினமாக இருந்ததல்லவா! உங்களுக்கு கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் படிக்க வாய்ப்புக் கிடைத்தும், பணப் பிரச்சினையால் அதனை தவற விட்டீர்கள். சூப்பர் 30 அமைப்பைத் தொடங்க இதுவும் ஒரு காரணமா?

பதில்: பல்கலைக்கழக கட்டணத்தை விடுங்கள். முதலில், விமானப் பயணம் செல்வதற்கே என்னிடம் பணம் இல்லை. கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் இடம் கிடைப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக, எனது முன்னேற்றத்திற்கும், ஊக்கத்திற்கும் முக்கிய காரணமான எனது தந்தை, மாரடைப்பால் திடீரென்று இறந்துவிட்டார். அந்த சமயத்தில், எனக்கு மொத்த உலகமும் நொறுங்கி விட்டதைப்போல் இருந்தது.

அதன்பிறகுதான் முடிவு செய்தேன்; எனது வாழ்க்கை முழுவதையும், ஏழை மாணவர்களுக்கும், தேவைப்படுவோருக்கும், கல்வி சேவை ஆற்றுவதற்காக அர்ப்பணிக்க வேண்டுமென்று.

கேள்வி: கடந்த 2002ம் ஆண்டு, சூப்பர் 30 தொடங்கியதிலிருந்து, வாழ்க்கை ஒரு தனித்துவம் வாய்ந்த பயணமாகவே இருந்து வருகிறது. நீங்கள் அதை நிச்சயம் சிறப்பானதாக உணர்ந்திருக்க வேண்டுமே?

பதில்: நான் பெருமையாக உணர்கிறேன். எனது முழு வாழ்வையும் பின்தங்கிய சமூக நிலையிலிருக்கும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு அர்ப்பணித்துள்ளேன். எனது முயற்சி நல்ல முறையில் செயல் வடிவம் பெற்றிருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

நான் பணம் சம்பாதிக்கவில்லை; இன்னும் சொந்தமாக ஒரு வீடு கூட என்னிடம் இல்லை. ஆனால், இந்த உலகத்திலேயே ஒரு மகிழ்ச்சிகரமான மனிதனாக என்னை உணர்கிறேன், எனது மாணவர்கள் கடுமையாக உழைத்து வெற்றியடைவதைக் காணும்போது.
"ஆம், நம்மால் முடியும்" என்ற தத்துவத்தின் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு.

கேள்வி: இந்தியக் கல்வி முறை, தேர்வை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்குவதாய் நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: நீங்கள் அப்படி சொல்லும் வகையில்தான் சூழல் இருக்கிறது. ஆனால், நிலைமை தற்போது மாறி வருகிறது. உலகமயமாதலுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அதன் தாக்கத்தால், திறன் அடிப்படையிலான கல்விக்கு முக்கியத்துவம் கிடைத்து வருகிறது.

தேர்வில் சிறப்பாக செயல்பட்டு, மதிப்பெண் எடுத்துவிட்டால் மட்டுமே, ஒன்றும் பெரிதாக சாதித்துவிட முடியாது என்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள்.

அதேசமயம், தேர்வுகள், சில விஷயங்களில் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன; குறிப்பாக, நுழைவுத்தேர்வுகள். ஏனெனில், முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ஒருவர் வாய்ப்பு பெறுவதை அவை உறுதிசெய்வதால்.

கேள்வி: சில மாதங்களுக்கு முன்னர், நீங்கள் ஹாவர்டு மற்றும் எம்.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களுக்கு சென்றிருந்தபோது, பாகுபாடற்ற கல்விக்கு அழைப்பு விடுத்தீர்கள்!

பதில்: கல்வியில் சமத்துவத்திற்காக, மக்கள் போராடுவதை நம்மால் காண முடியும். தரமான கல்வியில், சமத்துவம் நிலவுவதைக் காண்பது மிகவும் கடினம். தரமான கல்வியால் மட்டுமே, உலகின் ஆபத்தான பிரச்சினைகளான வறுமை, கல்வியின்மை மற்றும் உரிமையிழப்பு போன்றவற்றை எதிர்கொள்ள முடியும்.

ஹாவர்டு பல்கலையில், நான் உரையாற்றியபோது, உலகம் சரியான திசையில் செல்வதற்கு, தங்களின் பங்களிப்பை செலுத்த வேண்டுமென, நிபுணர்கள், அறிஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தேன்.

கேள்வி: சூப்பர் 30 மூலமாக, நீங்கள் பல சிறப்பான வெற்றிகளை பெற்று வருகிறீர்கள்! அதற்கான மந்திரம் என்ன?

பதில்: சூப்பர் 30 அமைப்பிற்கு, வள ஆதாரங்கள் குறைவாக இருக்கலாம். ஆனால், ஸ்பிரிட் என்று வரும்போது, சூப்பர் 30 எப்போதும் விட்டுக் கொடுத்ததில்லை. எங்களின் மாணவர்களுக்கு, 4 முக்கிய அம்சங்கள் கற்றுத் தரப்படுகின்றன. அவை,

* நேர்மறை சிந்தனை
* தொடர்ச்சியான கடின முயற்சி
* பிரமாண்ட நம்பிக்கை
* மகா பொறுமை

மேற்கண்ட 4 அம்சங்களும் ஒன்றோடொன்று இணைந்தவை. எங்கள் மாணவர்கள், "ஏன்? மற்றும் எப்படி?" என்ற தியரியை புரிந்துகொள்ள நாங்கள் ஊக்குவிக்கிறோம்.

ஒரு பிரச்சினையைத் தீர்க்க, பலவிதமான வழிகள் இருக்கின்றன என்பதை நினைவில் வைப்பது மிக முக்கியம். எப்போதுமே, ஒரு வழி மட்டுமே மாற்று வழியாக இருப்பதில்லை.

கேள்வி: பல இளம் மாணவர்களுக்கு, நீங்கள் முன்னுதாரணமாய் இருக்கிறீர்கள். அனால், நீங்கள் மாணவராய் இருந்தபோது, உங்களுக்கு ரோல் மாடலாய் இருந்தவர்கள் யார்?

பதில்: நல்ல கேள்வி. சினிமா நட்சத்திரம் மற்றும் விளையாட்டு பிரபலம் ஆகியோரை, நான் எப்போதுமே எனக்கான ரோல் மாடலாய் கொண்டதில்லை.

கணிதமேதை ராமானுஜம் மற்றும் இயற்பியல் மேதை நியூட்டன் ஆகியோர் எனக்கான ரோல் மாடல்கள்.

கேள்வி: உங்களது தந்தையுடன், நீங்கள் மிக இனிமையான உறவை வைத்திருந்தீர்கள்!

பதில்: ஆம். நான் 99% எனது தந்தையைப் பிரதிபலிக்கிறேன். எனது குழந்தைப் பருவம் வறுமை மிகுந்ததாய் இருந்தது. ஆனால், எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், எனது தந்தை கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக்கொண்டே இருப்பார்.

கல்வி மட்டுமே வறுமையை விரட்டுவதற்கான ஒரு ஆயுதம் என்று சொல்வார். எங்கள் குடும்பத்தில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், எனக்கான அறிவியல் மற்றும் கணிதப் புத்தகங்களை வாங்குவதற்காக, என் தந்தை, மாதாமாதம் ஒரு சிறுதொகையை சேகரித்து வைப்பார்.

எனக்கு கணிதம் மிகவும் பிடிக்கும் என்பது அவருக்குத் தெரியும். எனவே, எனது கனவுகளை நனவாக்கி, வாழ்க்கையில் என்னை பெரிய ஆளாக உயர்த்துவதற்கு, ஏதேனும் செய்ய வேண்டுமென விரும்பினார்.

கேள்வி: சூப்பர் 30 நல்ல வெற்றியை பெற்ற ஒரு கருத்தாக்கமாக இருந்தாலும், அது தனது எல்லையை, இதுவரை, பாட்னாவோடு மட்டுமே சுருக்கிக் கொண்டுள்ளது. உங்களின் சேவையை பரவலாக்கும் திட்டம் ஏதேனும் உள்ளதா?

பதில்: சூப்பர் 30 விஷயத்தில் எங்கள் குடும்பத்தின் மொத்த உழைப்பும் அடங்கியுள்ளது. எனது அம்மா, மாணவர்களுக்காக சமைக்கும் வேலையை செய்கிறார், எனது சகோதரர் மாணவர்களை கவனித்துக் கொள்கிறார் மற்றும் எனது மனைவியின் பங்களிப்பும், எனது பணியில் மிக அதிகம்.

ஒரே இலக்கை நோக்கி, அதீத அர்ப்பணிப்புடன், ஒரு குடும்பமாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். உண்மை நிலவரம் இப்படி இருக்கையில், எங்களின் செயல்பாட்டை வேறு நகரங்களுக்கும் விரிவுபடுத்தினால், பல பாதிப்புகள் ஏற்படும். அதை மனதில் வைத்தே, இப்போதைக்கு அதுபோன்ற எண்ணத்தை நாங்கள் வைத்துக்கொள்ளவில்லை.

அதேசமயத்தில், சூப்பர் 30-ன் ஆன்லைன் மாதிரியை கொண்டுவரும் திட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். அது விரைவில் நிகழ வேண்டும்.

கேள்வி: இத்தகைய ஒரு சேவையை செய்து வருகையில், அதன் வெற்றி தொடர்பான ஏதேனுமொரு சிறந்த சம்பவத்தை நீங்கள் கட்டாயம் எதிர்கொண்டிருப்பீர்கள். அதுபோல், ஏதேனும் ஒரு சம்பவம், உங்கள் மனதில் இன்னும் பசுமையாக பதிந்துள்ளதா?

பதில்: ஆம். அனூப் என்ற ஒரு மாணவனின் கதை அது. அந்த மாணவன் மிகவும் ஏழ்மையானதொரு குடும்பத்தைச் சேர்ந்தவன். ஒருசமயம், வீட்டைவிட்டுச் சென்ற அவனது அப்பா, திரும்பவும் வரவேயில்லை. அந்த குடும்பம் கடுமையாக தவித்தது. இத்தகைய சூழலால் விரக்தியடைந்த அனூப், தவறான வழியைத் தேர்வுசெய்ய முடிவெடுத்தான்.

ஆனால், அவனது தாய் அவனை சமாதானப்படுத்தி, அந்த வழியில் செல்லாதவாறு அவனைத் தடுத்தி நிறுத்தினார். தனது மகன், மனிதர்களை கொல்லும் ஆயுதத்தை ஏந்துவதற்கு பதிலாக, கல்வி எனும் ஆயுதத்தை ஏந்தி, வறுமையை எதிர்க்க வேண்டுமென அவர் விரும்பினார்.

ஒருநாள், தாயும், மகனும் எனது சூப்பர் 30 நிறுவனத்திற்கு வந்து, என்னிடம் உதவி கேட்டனர். நிலைமையை கேள்விப்பட்ட நான், அந்த மாணவனுக்கு சேர்க்கை அளித்தேன். என்னைத் தேடி வந்தபோது, அந்த இருவரின் கால்களிலும் செருப்புக்கூட இல்லை என்பது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.

அந்த மாணவன், கடந்த 2008ம் ஆண்டு ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றான். தான் வெற்றி பெற்றதும், என்னை சந்தித்த அவன், உணர்ச்சி மிகுதியால் விடாமல் அழுதான். பின்னர், மிகுந்த மகிழ்வு நிலைக்கு சென்றான்.

அந்த நேரத்தில், மாற்றமடைதல் என்பது நிறைவடைந்ததாக எனக்கு உணர்வேற்பட்டது. அந்த நாளை, எனது வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாது.

கேள்வி: ஒரு குழந்தையின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிப்பதில், பெற்றோரின் பங்கு என்னவாக இருக்க முடியும்?

பதில்: கடந்த சில ஆண்டுகளாக, மாணவர்கள், வீடியோ மற்றும் கம்ப்யூட்டர் கேம்களில் மூழ்கி, அவற்றுக்கு அடிமையாகி கிடக்கின்றனர். அத்தகைய விளையாட்டுகளின் தீய விளைவுகளைப் பற்றி புரிந்துகொள்ளும் அளவு அவர்களிடம் முதிர்ச்சி கிடையாது.

எனவே, அவர்களே மாறிக்கொள்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், அதன் எதிர்விளைவுகளை பெற்றோர் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும். தங்களது குழந்தைகள், வீடியோ மற்றும் கம்ப்யூட்டர் கேம்களுக்கு அடிமையாகாமல், அவர்களைப் பாதுகாப்பது பெற்றோர்களின் கடமை.

கேள்வி: குழந்தைகளுக்கு நீங்கள் சொல்லக்கூடிய செய்தி என்ன?

பதில்: கடின உழைப்பை எதுவும் வெல்ல முடியாது என்பதுதான்.

குழந்தைகள், நேர்மறை சிந்தனை கொண்டவர்களாகவும், கடின உழைப்பாளிகளாகவும் மற்றும் பொறுமை வாய்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும். எப்போதும், தேர்வு முடிவுகளுக்காக படிக்கக்கூடாது.

அறிவைப் பெறுவதற்காகவே படிக்க வேண்டும். அப்போது, நல்ல முடிவுகளும் தானாகவே கிடைக்கும்.

நன்றி: பேரன்ட்சர்க்கிள்

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us