இந்தியாவில் உயர்தர மேலாண்மை ஆய்வை நடத்துவது கடினமான ஒன்று: ஐ.ஐ.எம். இயக்குநர் | Kalvimalar - News

இந்தியாவில் உயர்தர மேலாண்மை ஆய்வை நடத்துவது கடினமான ஒன்று: ஐ.ஐ.எம். இயக்குநர்

எழுத்தின் அளவு :

உயர்தரமிக்க, தன்னாட்சி அதிகாரம் கொண்ட தரநிலை வழங்கும் ஏஜென்சிகளை அரசாங்கம் உருவாக்கி, அதன்மூலம், சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்கள் எது என்று மாணவர்கள் கண்டறிய உதவலாம் என ஐ.ஐ.எம்., அகமதாபாத் இயக்குநர் ஆஷிஷ் நந்தா கூறியுள்ளார். ஐ.ஐ.எம்., அகமதாபாத்தின் இயக்குநராக தற்போது பணியாற்றும் பேராசிரியர் ஆசிஷ் நந்தா தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். அவர், அதே கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேள்வி: ஐ.ஐ.எம்., அகமதாபாத் போன்ற ஒரு கல்வி நிறுவனத்தின் தலைவராக இருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?

பதில்: மாணவர்களின் மத்தியில், கல்வியின் மூலமாக சிறப்பான தாக்கத்தை செலுத்தும் நிறுவனத்தினுடைய ஒரு பகுதியாக நாம் இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு நாளும் உணர்வது, நான் அடையும் மகிழ்ச்சிகளில் ஒன்று. ஒவ்வொரு நாளும், புதிய அனுபவங்களைப் பெறுவதுடன், புதிய சவால்களையும் எதிர்கொள்கிறேன்.

எனக்கு கிடைக்கும் அனுபவங்களிலிருந்து நான் கற்றுக் கொள்கிறேன். 32 ஆண்டுகளுக்கு முன்னர், நான் மாணவனாக இருந்த ஒரு கல்வி நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக மீண்டும் திரும்பி வருதல் என்பது ஒரு பெரும் மகிழ்ச்சியான அம்சம். இந்தக் கல்வி நிறுவனம்தான் என்னை உருவாக்கியது. அதனிடமிருந்து நான் நிறைய பெற்றதைப்போல், அக்கல்வி நிறுவனத்திற்கு நானும் பல நன்மைகளை பதிலுபகாரமாக செய்ய நினைக்கிறேன்.

கேள்வி: நீங்கள் ஹாவர்டு பிசினஸ் பள்ளியுடனும் தொடர்புடையவராக இருந்துள்ளீர்கள். எனவே, இந்த 2 கல்வி நிறுவனங்களையும் நீங்கள் எவ்வாறு ஒப்பிடுவீர்கள்?

பதில்: அறிவுசார் மதிநுட்பம் என்று பார்த்தால், ஹாவர்டு உட்பட, உலகின் எந்த சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களுடனும், ஐ.ஐ.எம்., அகமதாபாத்தை ஒப்பிட முடியும். கற்றல் முறை மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு ஆகிய விஷயங்களில், ஹாவர்டு பிசினஸ் பள்ளி மற்றும் ஐ.ஐ.எம்., அகமதாபாத் ஆகிய இரண்டுமே ஒன்றுபடுகின்றன.

இரண்டு கல்வி நிறுவனங்களுக்கும், மூன்று விஷயங்களில் முக்கிய வேறுபாடுகள் உள்ளன. அவை,

1. HBS (Harvard Business School) கல்வி நிறுவனத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்தும் மாணவர்கள் வருகிறார்கள். ஆனால், IIM - A ன் பெரும்பான்மை மாணவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். எனவே, பூகோள விகிதாச்சார வித்தியாசம், இரண்டு கல்வி நிறுவனங்களுக்கு இடையிலும், மிகவும் அதிகம்.

2. HBS -ல் நுழையும் மாணவர்களைவிட, IIM-A ல் நுழையும் மாணவர்கள் வயது குறைந்தவர்கள். HBS மாணவர்களுக்கு பணி அனுபவம் அதிகமாக இருக்கும். ஆனால், அதனோடு ஒப்பிடுகையில், IIM - A மாணவர்களின் பணி அனுபவம் குறைவு.

3. IIM -A ல் நுழையும் மாணவர்களில், பெரும்பான்மையோர், பொறியியல் பட்டதாரிகள். ஆனால், HBS -ல் நுழையும் மாணவர்கள், பல்வேறுவிதமான கல்வி பின்னணிகளைக் கொண்டவர்கள். அங்கே, குறிப்பிட்ட படிப்பை படித்தவர்கள்தான் அதிகம் என்ற பிரச்சினை இருப்பதில்லை.

கேள்வி: நாட்டினுடைய ஒவ்வொரு மாநிலத்திலும், ஒரு IIM கல்வி நிறுவனத்தை உருவாக்க அரசு திட்டமிடுகிறது. அதேசமயம், அந்த IIM -களுக்கு போதுமான அளவிற்கு, தகுதியான ஆசிரியர்கள் கிடைப்பார்களா?

பதில்: இந்தியாவில், அதிக எண்ணிக்கையில், தரமான கல்வி நிறுவனங்கள் இருப்பது நல்லதே. இது மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடு. அதிலும், இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். நமது பொருளாதாரம், நல்ல ஆற்றல் கொண்ட, வளர்ந்துவரும் ஒன்றாக இருக்கிறது.

ஆனால், உயர்தர கல்வி நிறுவனங்கள் அமைக்கும் விஷயத்தில், முறையாக திட்டமிடவில்லை என்றால், தரமின்மை சிக்கலை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். ஒரு கல்வி நிறுவனத்தின் உள்கட்டமைப்பு என்பது hardware போன்றது. அக்கல்வி நிறுவனத்தின் வளர்ச்சியில் அதன் பங்கு சிறிதளவுதான் இருக்கும்.

ஆனால், ஆர்வமுள்ள மாணவர்கள், திறன்வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் கற்றல் கலாச்சாரம் ஆகியவை software போன்றது. ஒரு கல்வி நிறுவனத்தின் வளர்ச்சியில் அதன் பங்கு அதிகம். ஒரு தரமான கல்வி நிறுவனத்தால், ஆற்றல் வாய்ந்த மனித வளங்களை ஈர்க்க முடியும். அத்தகைய மனித வளங்களின் மூலம், அந்நிறுவனம் மேலும் வலுப்பெறும்.

மாறாக, ஆர்வமற்ற மாணவர்கள், உற்சாகமிழந்த ஆசிரியர்கள் மற்றும் மந்தமான கற்றல் சூழல் ஆகியவை உண்டாக்கும் விளைவுகள் மோசமானவை. இதன்மூலம் நாம் பெறத்தக்க நன்மை ஒன்றும் இருக்கப் போவதில்லை.

கேள்வி: AMBA மற்றும் AACSB போன்ற சர்வதேச அங்கீகாரங்களின் மீதான உங்களின் பார்வை என்ன?

பதில்: ஒரு கல்வி நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி ஆராய்ந்து, அதற்கான தரநிலை வழங்கும் ஒரு நடைமுறை தேவையானதுதான். ஏனெனில், அதன்மூலம், நம் செயல்பாட்டைப் பற்றிய வெளியாட்களின் மதிப்பீட்டை நாம் அறிய முடிகிறது.

மேலும், இதர கல்வி நிறுவனங்கள் எவ்வாறு சிறப்பாக செயல்படுகின்றன என்பதை அறிந்து, அதன்மூலம் நமது செயல்பாடுகளை செம்மைப்படுத்தும் வாய்ப்புகளும் அமைகின்றன. அதேசமயம், தர அங்கீகாரத்தை, ஒரு கல்வி நிறுவனம், தனது மேம்பாட்டிற்காக பயன்படுத்த வேண்டுமே ஒழிய, வெறுமனே பாராட்டுக்களையும், புகழ்ச்சியையும் சம்பாதிப்பதற்காக அல்ல.

என்னைப் பொறுத்தவரை, சிறப்பான இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் என்பது, உலகின் தலைசிறந்த 3 தர நிர்ணய அமைப்புகளில், ஒன்று அல்லது அதிபட்சம் இரண்டிடமிருந்து அங்கீகாரத்தைப் பெற்றால் போதும்.

கேள்வி: ஒரு வலுவற்ற நிதிநிலையில்தான் ஐ.ஐ.எம்., அகமதாபாத் செயல்படுகிறதா?

பதில்: எங்களது செயல்பாட்டிற்கான நிதி தேவையைப் பொறுத்தவரை, நாங்கள் முழுவதும் தன்னாட்சி பெற்றுள்ளவர்கள். எங்களின் அன்றாட செயல்பாட்டுத் தேவைகளுக்கு நாங்கள் அரசை நம்பியிருக்கவில்லை, எங்களின் வருவாய், எங்களது செலவினங்களை ஈடுசெய்கிறது.

இந்திய பணவீக்கம் இரட்டை இலக்கத்தை நெருங்கி நின்றபோதும், கடந்த 2 ஆண்டுகளாக எங்களின் கட்டணத்தை உயர்த்தாமலேயே வைத்திருக்கிறோம். இந்த வகையில், நாங்கள் வலுவற்ற நிதிநிலையில் செயல்படுகிறோம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், கட்டணத்தை உயர்த்தாமல் மற்றும் வெளியிலிருந்து எந்தவித உதவியையும் எதிர்பார்க்காமலேயே, எங்களின் கல்வி நிறுவனத்தை, நீதியுடனும், தரமிக்கதாகவும் நடத்துகிறோம் என்பதில் பெருமையடைகிறோம்.

கேள்வி: எம்.பி.ஏ. படிப்புகளை வழங்குவதில், அதிக பணப் புழக்கம் இருப்பது கவலையளிப்பதாக இல்லையா?

பதில்: அப்படியில்லை. அனைத்து வாடிக்கையாளர் சேவையும் பணத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது என்ற அடிப்படையிலேயே, பணப்புழக்கம் நிகழ்கிறது. ஐ.ஐ.எம்.,கள் வணிகத்தன்மையை அளிக்கவில்லை, வித்தியாச தன்மையையே அளிக்கின்றன.

ஐ.ஐ.எம்., அகமதாபாத் கல்வி நிறுவனத்தைப் பொறுத்தவரை, இங்கு படிக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் வாழ்வை சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கேற்ற, தனித்துவம் வாய்ந்த, தரமான ஒரு கல்வி அனுபவம் வழங்கப்படுகிறது.

நாட்டில், அதிகளவிலான மேலாண்மை கல்வி நிறுவனங்கள் பெருகிவரும் சூழலில், அவை வழங்கும் கல்வியின் தரத்தை உறுதிபடுத்த, உயர்தரமிக்க, தன்னாட்சி அதிகாரம் கொண்ட தரநிலை வழங்கும் ஏஜென்சிகளை அரசாங்கம் உருவாக்கி, அதன்மூலம், சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்கள் எது என்று மாணவர்கள் கண்டறிய உதவலாம். இல்லையெனில், மளமளவென பெருகியுள்ள மற்றும் பெருகிவரும் மேலாண்மை கல்வி நிறுவனங்களால், மாணவர்களுக்கு சிக்கல்தான். ஏனெனில், அவர்களால், அவற்றை தரப்படுத்த முடியாது.

கேள்வி: இந்தியாவில், மேலாண்மை தொடர்பான ஆராய்ச்சிகள் வளர்ச்சியடையாமல் இருக்கின்றன. அவற்றை எப்படி மேம்படுத்தலாம்?

பதில்: மேலாண்மை தொடர்பான ஆராய்ச்சி என்பது முற்றிலும் நடைமுறை சார்ந்தது. தரவுகளைக் கொண்ட, கள அடிப்படையிலான ஆராய்ச்சியாகும் அது. ஆனால், இத்தகைய ஆய்வை மேற்கொள்வதற்கு அதிக செலவாகும் என்பதுதான் ஒரு பெரிய குறையாக இருக்கிறது. வளரும் நாடுகளில் உள்ள மேலாண்மை கல்வி நிறுவனங்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சினை.

வரலாற்று ரீதியாக பார்த்தால், உலகளவில் புகழ்பெற்றதாக அறியப்படும் பல மேனேஜ்மென்ட் ஜர்னல்கள், மேற்கு நாடுகளைச் சேர்ந்தவையாகவே இருந்துள்ளன. எனவே, அதுதொடர்பான ஆய்வுகளும், மேற்கின் சூழலுக்கே பொருந்தும். இந்தியாவிலோ, உயர்தரமுள்ள மேலாண்மை ஆய்வு நடத்தப்படுவது கடினமான ஒன்றாகவே இருக்கிறது.

இந்தியாவில் இருக்கும் மேலாண்மை ஆசிரியர்களுக்கு, ஆய்வு செய்வதற்கான ஆற்றலைத் தர வேண்டியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, பொருளாதார காரணங்களுக்காக, ஆசிரியர்கள், பெருமளவில், கற்பித்தல் பணியிலேயே ஈடுபடுகிறார்கள். ஆராய்ச்சிக்கு, அவர்கள் ஒதுக்கும் நேரம் குறைவு. இதுபோன்ற காரணங்களால்தான், இந்திய மேலாண்மை நிறுவனங்களால், சிறப்பான மேலாண்மை ஆராய்ச்சியில் முத்திரைப் பதிக்க முடிவதில்லை.

- நன்றி: கேரியர்ஸ்360

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us