விழுப்புரம்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று நினைவு சின்னங்கள் அமைந்த அருங்காட்சியகம் குப்பைகள் கொட்டும் இடமாக சீரழிந்து வருகிறது.
விழுப்புரம் அடுத்த அரசலாபுரம் கிராமத்தில் இருந்த கோழி நடுக்கல், திருக்கோவிலூர் அடுத்த ஆயந்தூர், ஆமூர், சென்னகுணம், கொளத்தூர் ஏரிகளில் இருந்த பழமையான கல்வெட்டுகள் பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் கொண்டு வரப்பட்டது.
இந்த கல்வெட்டுகள் மூலம் விழுப்புரம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் விழுப்புரம் கோட்டம் 1051எஸ்/இவஅ2/கோ 255 நாள்: 21.05.92ம் ஆண்டு ஆணையின் படி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. தென்னாற்காடு மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் பச்சைமுத்து மூலம் இந்த அருங்காட்சியகம் கடந்த 1992ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி திறக்கப்பட்டது.
இந்த நினைவு சின்னங்களில் அரசலாபுரத்தில் இருந்து கொண்டு வந்த கோழி நடுக்கல்லின் காலம் மட்டும் கி.பி., 3ம் நூற்றாண்டு ஆகும். வரலாற்று ஆய்வாளர்களால் இந்த நடுக்கல் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. விழுப்புரத்தில் அரசு சார்பில் அருங்காட்சியகம் இல்லாத சூழலில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த நினைவு சின்னங்கள், வரலாற்று ஆய்வாளர்களுக்கு பெரிதும் பயன்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலக வடக்கு பகுதியில், அருங்காட்சியகம் இருந்த இடத்தில், சைக்கிள் ஷெட் கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து அதனருகே மைய பகுதியில் சிறிய கோவில் கட்டடப்படுகிறது. சைக்கிள் ஷெட் மற்றும் கோவில் வந்ததால் அருங்காட்சியகத்திற்கு வைத்திருந்த நடுக்கல் மற்றும் கல்வெட்டுகள் அனைத்தும் கடைசிக்கு தள்ளப்பட்டுள்ளது.
தற்போது அருங் காட்சியம் இடம் குப்பைகள் கொட்டும் இடமாக பயன்படுத்தப்படுகிறது. அழிந்து வரும் நினைவு சின்னங்களை காக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.