பள்ளி மாணவர்களும் கற்கலாம் ‘ரோபாட்டிக்ஸ்’ | Kalvimalar - News

பள்ளி மாணவர்களும் கற்கலாம் ‘ரோபாட்டிக்ஸ்’

எழுத்தின் அளவு :

‘சிறுவயது மாணவர்களுக்கு எதற்கு ரோபாட்டிக்ஸ் பயிற்சி அளிக்க வேண்டும்?’ என்று சிலர் நினைக்கின்றனர்.

நமது நாட்டில் தற்போது தேவைக்கும் அதிகமாகவே புரொகிராமர்கள், இன்ஜினியர்கள் இருக்கிறார்கள். கம்ப்யூட்டரை திறம்பட பயன்படுத்துகிறார்கள்; அதுகுறித்த அறிவும் அவர்களுக்கு அதிகம் உள்ளது. தேவையான வசதிகளும், திறமையும் கூட உள்ளது. ஆனாலும், பேஸ்புக் போன்று ஒரு ‘கான்செப்ட்’ இந்தியாவில் உருவாக்கப்பட்டு, இந்த உலகிற்கு எடுத்து செல்லப்படவில்லையே!

சிறுவயதிலேயே ரோபாட்டிக்ஸ் படிப்பது, மாணவர்களின் பள்ளி படிப்பிற்கும் மிக மிக உதவியாக இருக்கும். இந்தியாவில் ரோபாட்டிக்ஸ் பயிற்சி குறித்த விழிப்புணர்வு சிறப்பாக உள்ளது. இன்னும் அதிகமானவர்கள் ரோபாடிக்ஸ் படிக்க முன்வர வேண்டும். இது ஒரு பாடமாக படிப்பது நல்லது.

 இதற்கு எந்தவித சிறப்பு தொழில்நுட்ப முன் அறிவோ, கணித அறிவோ, அனுபவமோ தேவையில்லை. பள்ளியில் கற்பதே போதுமானது. இதை உணர்ந்த சில பள்ளிகளில் மாணவர்களுக்கு ரோபாட்டிக்ஸ் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

‘அடுத்த தலைமுறை சாதிக்கும்’:

இன்றைய பள்ளி குழந்தைகளுக்கு ரோபாட்டிக்ஸ் குறித்த அடிப்படை அறிவை கொடுத்தால் மட்டும் போதும்; அதன்பிறகு அவர்களின் கற்பனைக்கு அளவே இருக்காது. அவர்களின் ‘கிரியேட்டிவிட்டி’, ‘ஐடியா’க்கள் இந்த உலகிற்கே எடுத்துச் செல்லும்.

எதிர்காலத்தில் தனக்கு என்ன தேவை என்பதை அவர்களே தீர்மானித்துக்கொள்வார்கள். இந்த தலைமுறை செய்யாததை, இனிவரும் தலைமுறை செய்யும். அதற்கு 4ம் வகுப்பில் இருந்து மெதுவாக போதிய ‘எக்ஸ்போசர்’ தர வேண்டும். பிளஸ் 1ல் அவர்களது எண்ணம் மேலும் விரிவடைந்து, கல்லூரி படிப்பின்போது அவர்கள் திறம்பட செயல்பட உதவும்.

4ம் அல்லது 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், ‘நான் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் படிக்கப்போகிறேன்’ என்று கனவு காண்பது மகிழ்ச்சியாக உள்ளது. சிறுவயதிலேயே ரோபாட்டிக்ஸ் படிப்பதன் மூலம், அவர்களுக்கு இரண்டு விதமான ஊக்கம் கிடைக்கிறது. இதுபோன்ற பயிற்சிகள் பள்ளிகளில் அளிக்கப்படுவது தற்போதைய கல்லூரி மாணவர்களே அறிவதில்லை.

பிரமிப்பூட்டும் ‘ஐடியா’க்கள்:

காகிதத்தில் தயாரிக்கப்பட்ட டிசைனை, அப்படியே கம்ப்யூட்டரில் 3டி மாடலிங் செய்து ஹூமானாய்டு உருவாக்கும் முயற்சி, சிறுத்தைப்புலி வடிவத்தில் ஒரு காரை வடிவமைத்து அதை ஏரோ மாடலிங் மூலம் சாத்தியப்படுத்தும் ஆர்வம், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான காரை தயாரிக்க சரியான தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் ஈடுபாடு என இன்றைய பள்ளி மாணவர்களின் ‘ஐடியா’க்களும், அதற்கான முயற்சிகளும் ஆச்சர்யப்படவைக்கின்றன.

கோடை காலத்தில் விளையாட்டாக அடிப்படையை கற்ற கார்த்திக் முத்துவேல் என்ற 5ம் வகுப்பு மாணவன் பள்ளிக்கான காலண்டரை ஒரு அப்ளிகேஷனாக தயாரித்துள்ளான். இப்படி ஒரு விளையாட்டுப் போல கற்றாலும், மாணவர்களுக்கு ‘ஐடியா’க்கள் வந்து குவிகின்றன. இதற்கு அடிப்படை அறிவுடன் ஆர்வம் சேர்ந்தே முக்கிய காரணம்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளும், ஆட்டிசம் மாணவர்களும் கூட இவற்றை மிக ஆர்வமுடன் கற்பதை பார்க்கும்போது, உணர்ச்சி வசப்படாமல் என்ன செய்ய?


-அடிதி பிரசாத், ரோபாட்டிக்ஸ் லேர்னிக் சொல்யூசன்ஸ்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us